சட்டம் ஒழுங்கில் சமரசம் கூடாது!

சட்டம் ஒழுங்கில் சமரசம் கூடாது!
shutterstock

அண்மைக் காலமாக தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு தொடர்பாக வரும் செய்திகளும் விமர்சனங்களும் மிகவும் கவலையளிப்பதாக உள்ளன.

பட்டப்பகலில் சாலையில் வெட்டிக்கொல்லப்படும் சம்பவங்கள், குடும்பத் தகராறுகளில் ஏற்படும் கொலைகள், கொள்ளைச் சம்பவங்கள் எல்லா ஆட்சிக் காலத்திலும் தொடர்கின்றன. கடந்த ஆட்சியை ஒப்பிட இப்போது குற்றங்களின் எண்ணிக்கை கூடியிருக்கிறதா, குறைந்திருக்கிறதா என்பது அரசியல் சார்ந்த பிரச்சினை. ஆனால், மக்கள் மத்தியில் அச்ச உணர்வு உருவாவது அவ்வளவு நல்லதல்ல.

காவல் துறையை தன்கையில் வைத்திருக்கும் முதல்வர் இவ்விஷயத்தில் நேரடியான பார்வையைச் செலுத்த வேண்டும். “காவல் துறையினர் கள நிலவரத்துக்கேற்ப, சட்ட வரம்புக்குட்பட்டு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதை அவர்களாகவே மேற்கொள்ள வேண்டும். ஆணை வர வேண்டுமென்று எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டியதில்லை” எனச் சொன்னவர் முதல்வர். இவ்விஷயத்தில் தொடர்ச்சியான கண்காணிப்பும் மேற்பார்வையும் இருந்திருந்தால் இத்தகைய விமர்சனங்கள் எழுந்திருக்காது.

மதுபோதையில் நடக்கும் குற்றங்கள் குறைக்கப்பட வேண்டுமென்றால் மது விஷயத்தில் அரசு ஒரு தீர்க்கமான தீர்வை எட்ட வேண்டும். சமூகக் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது பலன் தரும். சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் கட்சிகளில் இணைவது அனைவருக்கும் ஆபத்தானது. ஆட்சியாளர்கள், அரசியல் கட்சியினர் கலந்துகொள்ளும் பொதுநிகழ்ச்சிகளில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்படுவது காவல் துறையினரின் பணிச்சுமையை அதிகரிக்கிறது. இவற்றையெல்லாம் அனைத்து அரசியல் கட்சிகளும் நினைவில் கொள்ள வேண்டும்.

மக்கள் தொகைக்கு ஏற்ப காவல் துறையில் பணியிடங்களை உருவாக்குவது, சட்டம் - ஒழுங்கை நிர்வகிக்க நவீனத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது என்பன போன்ற பணிகள் முடுக்கிவிடப்பட வேண்டும். பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அக்கறை ஆழமாக இருந்தால் மட்டுமே இதுபோன்ற பிரச்சினைகளை முளையிலேயே கிள்ளியெறிய முடியும்!

ஓவியம்: முத்து

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in