இடைத்தேர்தல் முறைகேடுகளுக்கு முடிவு கட்டுவோம்!

வாக்களிக்க பணம் - சித்தரிப்புக்கானது
வாக்களிக்க பணம் - சித்தரிப்புக்கானதுஇடைத்தேர்தல் முறைகேடுகளுக்கு முடிவு கட்டுவோம்!

மக்களாட்சியின் மகத்துவத்தை பறைசாற்றும் தேர்தல்களை ஜனநாயகத்தின் திருவிழா என்பார்கள். ஆனால் தமிழ்நாட்டு இடைத்தேர்தல்கள், ஜனநாயகத்தின் புதிய அவலமாக மாறி வருகின்றன.

இடைத்தேர்தல் ஒவ்வொன்றிலும் இந்த விதிமீறல்களும், முறைகேடுகளும் அதிவேக முன்னேற்றம் கண்டு வருகின்றன. திருமங்கலம், ஆர்.கே.நகர் வரிசையில் ஈரோடு கிழக்கு முன்வைக்கும் தேர்தல் பாதை இருட்டுக்கே இட்டுச் செல்கிறது. இப்படியும் நடக்குமா என்று நாட்டின் இதரப் பகுதியினர் மூக்கில் விரல் வைக்கும் அளவுக்கு, வாக்காளர்களுக்கு கையூட்டு வழங்குவதில் அரசியல் கட்சிகள் தோள்சேர்ந்து களமாடின. கரன்சி தாள்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், உடுப்புகள், வாட்ச், வெள்ளி, தங்கம், சுற்றுலா, குலுக்கலில் வாகனம் ஆகியவற்றுடன் வேளைதோறும் அசைவம் என கூச்சமின்றி வாரி இறைத்திருக்கிறார்கள்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி

வாக்களிப்பின் வாயிலாக மக்கள் சேவகர்களை தீர்மானிக்கும் ஜனநாயகத்தின் எஜமானர்களான வாக்காளர்களை, ஆட்டு மந்தைகளாக அரசியல் கட்சிகள் பாவிப்பதன் அடையாளமே இந்த அவலங்கள். ஈரோடு கிழக்கில் ஆங்காங்கே முளைத்திருந்த மனிதப் பட்டிகளே இதற்கு சாட்சி.

மக்களின் அரசியல் உணர்வுகளை மழுங்கச் செய்து, தங்களது முறைகேடுகளில் அவர்களையும் பங்குதாரர்களாக்கும் முயற்சியில் பிரதான கட்சிகள் ஜெயிக்கவும் செய்கிறார்கள். தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும், தங்கள் கொள்கைகள் மற்றும் வாக்குறுதிகளை முன்வைத்து வாக்குச் சேகரிக்காது, இப்படி போட்டிப்போட்டு அத்துமீறல் நடத்தியிருப்பது அருவருக்கத்தக்கது. 

மாறிமாறி தமிழகத்தை ஆள்வதில் முனைப்பு காட்டும் இந்த இரண்டு கட்சிகளும் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கி இருப்பதற்கு, மாற்றத்தை முன்னிறுத்துவதாக முழங்கும் அதன் கூட்டணிக் கட்சிகளும் உடந்தையாகி இருப்பது மற்றுமொரு வேதனை. அனைத்தையும் கண்காணித்து, கட்டுப்படுத்தி, நடவடிக்கை எடுக்கவேண்டிய தேர்தல் ஆணையமும் கைகட்டி வேடிக்கை பார்த்தது அடுத்த அவலம். ஜனநாயகத்தின் மீதும் மக்களாட்சியின் மாண்புகள் மீதும் இளம் தலைமுறையினருக்கு நம்பிக்கை இற்றுப்போகச் செய்யும் இந்த போக்கு மாறியே ஆக வேண்டும்.

கொலுசு பரிசு
கொலுசு பரிசு

நள்ளிரவுகளில் குடும்பத்தோடு வாசலில் நின்று பணத்தையும், பரிசுப் பொருளையும் வாங்கிய பெரியவர்களால், தங்கள் வீட்டு குழந்தைகளுக்கு வாழ்க்கையின் விழுமியங்களை சொல்லி வளர்க்க இயலுமா? கைநீட்டி பரிசுகளை வாங்கியவர்களில் எவரேனும், முறை பிறழும் அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சியாளர்களுக்கு எதிராக நாளை விரல் நீட்ட முடியுமா?

இது, ஈரோடு கிழக்கு என்ற ஒற்றை இடைத்தேர்தல் களம் கடந்திருக்கும் பிரச்சினை அல்ல. மௌன சாட்சிகளான நம் அனைவரின் மனசாட்சியையும் உலுக்க வேண்டிய அவலம். முக்கியமான பொதுப்பிரச்சினைகளின் போது தன்னெழுச்சியாய் எழும் மக்கள் மனசாட்சியின் குரல்கள்,  ஒரேயடியாக மௌனித்து விடலாகாது. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் அரசியல் கட்சிகளும், அவர்களுக்கு இடம்கொடுக்கும் மக்களின் கூட்டுப் புத்தியும், இவை தவறு என்பதை விரைவில் உணரத் தலைப்படட்டும். இனியொரு இடைத்தேர்தல் களம் இது போன்று அமையாதிருக்க, ஆக முடிந்ததை மக்கள் நலன் நாடுவோர் செய்ய முன்வரட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in