தனியார் பள்ளிகளின் இரும்புத்திரை விலகட்டும்!

தனியார் பள்ளிகளின் இரும்புத்திரை விலகட்டும்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் இயங்கிவரும் தனியார் பள்ளியில் பயின்ற மாணவியின் மர்ம மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. நடந்த உண்மைகள் விசாரணையில் விரைவில் வெளிவரும் என நம்புவோம். கூடவே, தனியார் பள்ளிகள் இனியும் இரும்புத்திரைக்குப் பின்னால் மறைந்துகொள்வதை அனுமதிக்கக் கூடாது என்பதையும் உறுதியாகச் சொல்ல வேண்டியிருக்கிறது.

அரசுப் பள்ளிகளாகட்டும், தனியார் பள்ளிகளாகட்டும் - பள்ளி வளாகத்தில் நுழைந்தவுடன் குழந்தைகள் மீதான முழுக் கட்டுப்பாடும் ஆசிரியர்கள் / பள்ளி நிர்வாகத்திடம் வந்துவிடுகிறது. குழந்தைகளின் இன்னொரு பெற்றோராய் இருந்து அவர்களை முறையாகக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு அவர்களுடையதாகிவிடுகிறது. அதிகமான கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் விதிக்கின்ற தனியார் பள்ளிகளுக்கு இதில் கூடுதல் பொறுப்பு இருக்கிறது.

ஏனெனில், தனியார் பள்ளிகளில் பெற்றோரின் உரிமை வளாகத்துக்கு வெளியிலேயே முடிந்துவிடுகிறது. குழந்தைகளைப் பராமரிக்க நியமிக்கப்படும் ஆயாமாக்கள் தொடங்கி, கற்பிக்கும் ஆசிரியர்கள் வரை அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையே நிறைவேற்றினால்தான் எல்லாமே சரியாக நடக்கும். சிறிது அலட்சியம் காட்டப்பட்டாலும் விபரீதங்கள் நேர்ந்துவிடும்.

எனவே, பெற்றோரும் பள்ளிக் கல்வித் துறையும் எளிதில் அணுகும் வகையில் தனியார் பள்ளிகளில் நெகிழ்வுத்தன்மை அவசியம். அண்டை மாநிலமான கேரளத்தில்கூட, கழிப்பறைகள் தரமாக இருக்கின்றனவா என்பதை உறுதிசெய்த பின்னரே தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கிறார்கள் பெற்றோர்கள். அப்படியான சுதந்திரம், இங்கு பெற்றோர்களுக்கு அளிக்கப்படுகிறதா என்பது முக்கியமான கேள்வி.

பள்ளியில் இன்னின்ன வசதிகள் எனப் பட்டியலிட்டு பெரும் தொகையை வசூலிக்கும் தனியார் பள்ளிகள், அவை அனைத்தையும் கண்டிப்பாக நிறைவேற்றியாக வேண்டும். அரசு அமைப்புகளும் அதை முறையாகக் கண்காணிக்க வேண்டும். விதிமீறல்கள், விபரீதங்கள் நிகழ்ந்தால் அதற்கு அரசும் பொறுப்பேற்க வேண்டும். மொத்தத்தில், அமைப்பின் எல்லா கிளைகளும் உறுதியாக இருந்து குழந்தைகளின் கல்வி வளர்ச்சியையும் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும்!

ஓவியம்: முத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in