தேக நலனிலும் அக்கறை செலுத்துவோம்!

தேக நலனிலும் அக்கறை செலுத்துவோம்!

கரோனா காலத்துக்குப் பின்னர் உலகளவில் இளம் வயது மாரடைப்புகளும், அவற்றுக்கும் பலியாவோர் எண்ணிக்கையும் அதிகமாகி வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அண்மையில் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கிறார். இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு ஒன்றினையும் மேற்கோள் காட்டி கவலை தெரிவித்திருக்கிறார் அமைச்சர்.

நாள்தோறும் நம்மை மூழ்கடிக்கும் பரபரப்பு செய்திகளின் மத்தியில் இது போன்ற அவசிய அறிவுறுத்தல்களை அலட்சியமாக கடந்திருப்போம். ஆனால் நடப்பு சூழலை ஆராய்ந்தால் மட்டுமே, அமைச்சர் குறிப்பிட்டதன் ஆழம் புரியும். 40 வயதில் மாரடைப்பு அச்சுறுத்தல் எழுவது அசாதாரணமானது. அந்த வயதிலான பிரபலங்கள் எவரேனும் மாரடைப்புக்கு பலியாகும்போது மட்டுமே, பொதுவெளியில் அது குறித்த விவாதங்கள் சிறு அலையாக எழுந்து அடங்குகிறது. நிதர்சனத்தில், மத்திம வயது மாரடைப்பு காரணமான அகால மரணங்கள் நம்மைச் சுற்றி அதிகரித்து வருவதை சற்று ஊன்றி கவனித்தால் விளங்கிக்கொள்ளலாம்.

40 சொச்ச வயது என்பது அந்த நபரை பொறுத்தவரை அவரது தனிப்பட்ட வாழ்க்கையின் எழுச்சிக் காலமாக இருக்கிறது. பணியோ, தொழிலோ தனக்கான இடத்தை அடைவதற்கான உழைப்பையும், மெனக்கிடலையும் வெகுவாய் கோரும் காலம் அது. வீடு, வாகனம், வளரும் குழந்தைகள், முதியோர் பராமரிப்பு என குடும்பப் பொறுப்புகளும் ஒருசேர முதுகை அழுத்தும். அலுவலகம், குடும்பம் என இரு பொறுப்புகளையும் சமாளித்துக் கரைசேர்க்கும் முனைப்பில், தனிப்பட்ட அக்கறையை தொலைத்திருப்பார்கள். போதுமான உணவூட்டம், உடற்பயிற்சி, ஓய்வு, உறக்கம் என சகலத்திலும் குலைந்திருப்பார்கள்.

இவற்றுக்கு மத்தியில், கரோனாவுக்கு பிந்தைய வாழ்வியலும் முக்கிய காரணியாகி இருக்கிறது. கரோனாவுக்கு முன், பின் என உலகம் கண்ட தலைகீழ் மாற்றங்களில், அதிகரிக்கும் மாரடைப்புகளும் சேர்ந்திருக்கிறது. பணியிழப்பு அல்லது நெருக்கடி, உலகளாவிய பொருளாதார சுணக்கம், பணவீக்கம் ஆகியவை மத்திம வயதினரின் உழைப்பையும், கவலையையும் கூடுதலாக கோருகின்றன. நாற்பதுகளின் இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, இதயத்துடிப்பு உள்ளிட்டவை இயல்பு கெட்டு, தேக நலனை பதம்பார்க்க முயலும்.

குடும்பம், அலுவல் என தனிப்பட்ட நேரம் துண்டாடப்படுவதின் மத்தியில் நேரமின்மை, களைப்பு என காரணங்களை முன்வைத்து, உடற்பயிற்சியை ஒதுக்கி வைக்கிறார்கள். ஒரு சிலர் இளமையில் பழகிய புகை, மது பழக்கங்களை விட்டொழிக்காததோடு, வாழ்வியல் அழுத்தங்களின் தப்பித்தல் உபாயமாக அவற்றில் அதிகமாகவும் வீழவும் செய்கிறார்கள். இதற்கு தனிப்பட்ட நபரும் அவர் சார்ந்த குடும்பமும், பின்னர் பெரிதாய் விலை கொடுக்க வேண்டியதாகிறது.

சுதந்திர இந்தியா தனது 75-வது வயதில் இளமை பூண்டிருக்கிறது. உலகளவில் 30 - 40 வயதிலானவர்களை அதிகம் கொண்ட தேசமாக மாறியிருக்கிறது. ஆனால், தனிப்பட்டோர் ஆரோக்கியமே ஒரு தேசத்தின் வலிமையாகவும் பரிமளிக்கும். எனவே, வீடு முதல் நாடு வரை நாற்பதுக்கு முன்னும், பின்னும் வயதிலானவர்களை நம்பியே இருக்கிறது என்பதை உணர்வோம். இந்த வயதிலானவர்கள் இனியேனும் விழித்துக்கொண்டு தேக நலன் பேணுவதில் அக்கறை கொள்வோம். அல்லதை ஒதுக்கி நல்லதை பின்பற்றுவோம். நாள்தோறும் நடைப்பயிற்சி மேற்கொள்வோம். அவசியமெனில் வல்லுநர் வழிகாட்டுதலுடன் உடற்பயிற்சிகளிலும் ஈடுபடுவோம்.

முக்கியமாக, வருடந்தோறும் முழு உடல் பரிசோதனை எடுத்துக்கொள்வோம். சிறிய உடல்நலக் கோளாறுகளையும் உதாசீனம் செய்யாது, முளையிலேயே களையெடுப்போம். தனிநபர் காப்பீடு மட்டுமன்றி முழு குடும்பத்துக்குமான மருத்துவக் காப்பீட்டை உறுதி செய்வோம். உழைப்பு, சம்பாத்தியம், நட்பு வட்டம், சமூகத்தில் நற்பேறு ஆகியவற்றுக்காக மெனக்கிடுவதில், சற்று சொந்தக் குடும்பத்துக்காகவும் ஒதுக்குவோம்.

இனியேனும், அன்றாடம் காலை எழுந்ததும் இதயத்தை முழுமையாக துடிக்க விடுவதை வழக்கமாக்கிக் கொள்வோம். வீடு முதல் நாடு வரை துடிப்போடு இயங்குவது என்பது, தனி நபரின் இதயத்தில் இருந்தே தொடங்குகிறது என்பதை மறவாதிருப்போம்!  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in