அனைத்து வகையான சாராயத்தின் கேடுகளையும் அரசு ஒரே துலாக்கோலில் பரிசீலிக்கட்டும்!

கள்ளச்சாராயம் -அரசு மது
கள்ளச்சாராயம் -அரசு மது

தமிழகத்தில் கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கைகள் புதுவேகமெடுத்துள்ளன. செங்கை - விழுப்புரம் மாவட்டங்களின் சாராயச் சாவுகளை அடுத்து, மாநிலம் முழுக்க அரசு மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளில் கள்ளச்சாராய வியாபாரிகள் நூற்றுக் கணக்கில் கைது செய்யப்பட்டு வருகின்றனர். கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும் அரசு எச்சரித்துள்ளது.

அதேசமயம், கள்ளச்சாராயத்தால் இறந்தோர் மற்றும் சிகிச்சை பெறுவோருக்கு நிவாரண உதவிகளை அரசு அறிவித்தபோது பொதுஜனம் துணுக்குற்றது. ’இயற்கை சீற்றத்தால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்தபோதும், அப்படி நொடித்த விவசாயிகள் உயிரை ஈகிய போதும், துப்பாக்கிச்சூட்டுக்கு மீனவர்கள் பலியானபோதும்’ சாத்தியப்படாத நிவாரணத் தொகை, கள்ளச்சாராய பாதிப்புக்கு வழங்கப்படுவது ஏன் என்ற வெகுஜனத்தின் கேள்விகள் பொருள் பொதிந்தவை.

மேலும் இதன் மறுபக்கத்தில், கள்ளச்சாராய பாதிப்புகளுக்கு வழங்கப்படும் நிவாரண உதவி, அரசே விற்கும் நல்ல(!) சாராய விற்பனையில் ஏன் புறக்கணிக்கப்படுகிறது என்ற எளிய மக்களின் கேள்வியில் எள்ளல் இருந்தாலும், அவையும் புறக்கணிக்கக் கூடியவை அல்ல.

அரசின் கஜானாவை நிரப்பும் டாஸ்மாக் மதுவால் பாதிக்கப்படுவோருக்கும், அரசு நிவாரணம் நீள நிச்சயம் வழிவகை செய்யப்பட வேண்டும். அவை, ’போதை மறுவாழ்வு மற்றும் மருத்துவ சிகிச்சை’ என்ற நோக்கில் அமைய வேண்டும். கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணர்வுக்கு இனி கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருப்பதை முதலில், அரசு மதுவிலிருந்தே ஆரம்பிக்க வேண்டும். குடி என்பதை வாழ்வியலின் இயல்பான அம்சங்களில் ஒன்றாக மாற்றும் போக்கும் முடிவு காணப்பட வேண்டும்.

விஷச்சாராயம் அருந்தியவர்களை மருத்துவமனையில் நலம் விசாரிக்கும் தமிழக முதல்வர்
விஷச்சாராயம் அருந்தியவர்களை மருத்துவமனையில் நலம் விசாரிக்கும் தமிழக முதல்வர்

அண்மை கள்ளச்சாராய சாவுகளுக்கு மத்தியில், சுமார் 500 டாஸ்மாக் கடைகள் விரைவில் மூடப்படும் என்று துறை அமைச்சர் ஆறுதல் செய்தி பகிர்ந்திருக்கிறார். பூரண மதுவிலக்கு என்பது நடைமுறையில் சாத்தியமில்லை எனும்போது, அவற்றை முறைப்படுத்த ஆக முடிந்த நடவடிக்கைகளுக்கு அரசு முன்வர வேண்டும். ’முறைப்படுத்தப்பட்ட விற்பனை, இளம் தலைமுறையினருக்கு அவற்றை எட்டாமல் செய்வது, கடைகளின் எண்ணிக்கை மற்றும் விற்பனை நேரத்தை குறைப்பது, கவர்ச்சிகரமான விற்பனை உத்திகளை தவிர்ப்பது’ ஆகியவற்றையும் அரசு பரிசீலிக்க வேண்டும்.

சாராயத்தில் நல்லது, அல்லாதது என்ற பேதமில்லை. சாராயம் என்பது சந்தேகமின்றி தனிப்பட்ட நபருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு விளைவிப்பதே! கள்ளச்சாராயத்துக்கு எதிராக வீறுகொள்ளும் அரசு எந்திர நடவடிக்கைகள், அரசு மது விற்பனையிலும் அருள்பாலிக்க வேண்டும். திறந்துவிடப்பட்ட சாராய விற்பனை இளைஞர்களை நசித்து, அடுத்த தலைமுறையின் மனிதவளத்தை கேள்விக்குறியாக்கும் வாய்ப்பை ஒரு நல்லரசு உருவாக்க முன்வராது.

கள்ளச்சாராயம் மட்டுமல்ல, அனைத்து வகையான சாராயத்தின் கேடுகளையும் அரசு ஒரே துலாக்கோலில் பரிசீலிக்கட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in