நன்மை பயக்கட்டும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!

நன்மை பயக்கட்டும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்!
JOTHI RAMALINGAM B

தமிழகத்தில் 2011-ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்குப் பின்னர், பல்வேறு காரணங்களால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுவந்தது. ஒருவழியாக, 2019-ல் தேர்தல் அறிவிக்கப்பட்டது. எனினும், ஊரக உள்ளாட்சிகளுக்கு மட்டும் தேர்தல் நடத்தப்பட்டது. புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான தேர்தல் 2021-ல் நடத்தப்பட்டது. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன.

மக்களாட்சியில் உயர்மட்ட அதிகார மையத்திலிருந்து கடைமட்ட நிர்வாகம் வரை அதிகாரப்பரவல் உறுதி செய்யப்பட வேண்டும் எனும் நோக்கிலேயே, உள்ளாட்சி அமைப்புகள் உருவாக்கப்பட்டன. பொது சுகாதாரம், குடிநீர் விநியோகம், சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடங்கி மத்திய, மாநில அரசுகள் கொண்டுவரும் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவது வரை உள்ளாட்சிகளின் பங்கு மிக முக்கியமானது.

தவிர, இந்த ஜனநாயகத் திருவிழாவில் அரசியல் பின்புலம் கொண்டவர்களுக்கு இணையாகச் சாமானியர்களும் போட்டியிட்டு வெல்லும் வாய்ப்பு அதிகம் என்பதால், உள்ளாட்சித் தேர்தல்கள் கூடுதல் முக்கியத்துவம் கொண்டவை. ஒட்டுமொத்த மனிதவளக் குறியீட்டு அளவில் தமிழகம் முன்னிலை வகிப்பதற்கு, உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு கணிசமானது என உள்ளாட்சித் துறையில் பணிபுரிந்தவர்கள் அனுபவபூர்வமாகச் சான்றளிக்கிறார்கள்.

இந்நிலையில், பல ஆண்டுகளுக்குப் பின்னர் நடத்தப்படும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் பல பணிகள் இனி முழுமூச்சுடன் தொடங்கும் எனும் நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இதில் அரசியல் கட்சிகள், சாமானியர்கள் என அனைவரும் போட்டியிடும் நிலையில், வெற்றி பெறுபவர்கள் யாராக இருந்தாலும் எவ்வித பேதத்தையும் பார்க்காமல் எல்லோருக்குமானவர்களாகப் பணியாற்ற வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. பெருந்தொற்று யுகத்தில் தடுப்பூசி செலுத்தும் பணிமுதல், சுகாதாரத் துறையின் பிரதானப் பணிகள்வரை அனைத்தும் உள்ளாட்சி நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன் இன்னும் துரிதமாக நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ற வகையில், வெற்றி பெறுபவர்கள் தங்கள் கடமையை உணர்ந்து செயலாற்றட்டும்!

ஓவியம்: முத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in