தமிழ்ப் பாடத்தில் தோல்வி தொடரக் கூடாது!

தமிழ்ப் பாடத்தில் தோல்வி தொடரக் கூடாது!


10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்ப் பாடத்தில் 47 ஆயிரம் பேர் தோல்வியடைந்திருப்பதும், ஒரே ஒரு மாணவி மட்டும் தமிழில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுத்திருப்பதும் சமகாலத்தின் பேரவலம். குறிப்பாக, 'எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்' என முழக்கமிடும் அரசியலர்களின் ஆட்சிக்காலத்தில் நம் தாய்மொழியான தமிழில் மாணவர்களிடம் ஈடுபாடு குறைந்தது எப்படி எனும் கேள்வி எழுந்திருக்கிறது.

இந்த முறை 9,12,620 பேர் எழுதிய மொழிப் பாடத் தேர்வில் 47,055 பேர் தமிழில் தோல்வியடைந்திருக்கிறார்கள். இதில் மாணவர்களே அதிகம். அதேபோல் 12-ம் வகுப்பிலும் தமிழ்ப் பாடத்தில் 26 ஆயிரம் பேர் தோல்வியடைந்திருக்கிறார்கள். பெருந்தொற்றுக் காலத்தில், பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் கற்பித்தல் - கற்றலில் ஏற்பட்ட பாதிப்பு மிக அதிகம். ஆன்லைன் வகுப்புகளும் போதிய அளவு பலன் தரவில்லை. இதனால், தமிழில் மட்டுமல்லாது ஏறத்தாழ எல்லா பாடங்களிலும் இந்த நிலைதான் என்பதையும் மறுக்க முடியாது. பெருந்தொற்று கட்டுக்குள் வந்த பின்னர் பள்ளிகள் திறக்கப்பட்டாலும், மாணவர்களில் பலர் வகுப்பறைக்கு வராமல் நேரடியாகத் தேர்வுகளை எழுதித் தோல்வியைச் சந்தித்திருக்கிறார்கள். பல்வேறு காரணிகளால் படிப்பில் கவனம் செலுத்த முடியாத மாணவர்களும் இப்பட்டியலில் சேர்ந்திருக்கிறார்கள்.

தாய்மொழிவழிக் கல்விக்கு முக்கியத்துவம் குறைந்துவருவதும் இதற்கு முக்கியக் காரணம். நகர்ப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்விக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. அதிலும் ஆசிரியர்களுக்குப் போதிய பயிற்சியின்மையால், பாதியில் தமிழ்வழிக் கல்விக்கு மாறும் மாணவர்கள் அங்கும் தடுமாறுகிறார்கள்.

மொத்தத்தில், தாய்மொழியான தமிழில் மட்டுமல்லாது எல்லா பாடங்களிலும் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைக்க வேண்டிய பொறுப்பு கல்வித் துறையைச் சேர்ந்த அனைவருக்கும் இருக்கிறது. கரோனா எனும் கடினமான காலகட்டத்தைத் தாண்டிய பிறகும் கல்வியில் நம் மாணவர்கள் பின்தங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அக்கறையுடன் கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்க வேண்டும்.

ஓவியம்: முத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in