கல்லூரிகளில் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கட்டும்!

கல்லூரிகளில் சேர்க்கை இடங்கள் அதிகரிக்கட்டும்!

உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை தொடங்கும் நேரம் இது. கல்லூரி வளாகத்தில் காலடி எடுத்துவைக்கும் ஒவ்வொருவருக்கும் ஏராளமான கனவுகள் இருக்கும். இளநிலைப் பட்டப் படிப்பை முடித்ததும், முதுநிலை படிப்பைத் தொடர வேண்டும்; ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும் என்றெல்லாம் விருப்பப்படுவார்கள். ஆனால், அப்படியான கனவுகள் சிலருக்குத்தான் சாத்தியமாகின்றன என்பதே நிதர்சனம். காரணம், இளநிலை பட்டப்படிப்புக்கே குறைவான இடங்கள் இருப்பதும், அப்படியே வாய்ப்பு கிடைத்தாலும் முதுநிலைப் படிப்பில் சேர பல தடைகள் இருப்பதும்தான்.

இதன் காரணமாக, வெளியூர் கல்லூரிகளை நாடிச் செல்ல வேண்டியிருக்கும் அல்லது உள்ளூர் கல்லூரியிலேயே வேறு பாடப்பிரிவில் சேர வேண்டியிருக்கும். இளநிலையில் வேறு படிப்பைப் படித்தவர்கள் முதுநிலையில் கொஞ்சமும் தொடர்பில்லாத படிப்பைப் படித்தாக வேண்டியிருக்கும். கல்லூரி செல்வதற்கே பல தடைகளைத் தாண்ட வேண்டிய சூழலில் இருப்பவர்கள் இப்படியான தருணங்களில் ஆரம்பத்தில் இருந்த ஆர்வத்தை இழந்துவிடுகிறார்கள். ஒருசிலர் இளநிலையில் வேறு பாடமும் முதுநிலையில் வேறு பாடமும் படிப்பதால் பணிவாய்ப்புகளில் பின்தங்கிவிடுவதும் உண்டு.

விண்ணப்பிப்பவர்களில் தகுதியான அனைவருக்கும் இடம் ஒதுக்குவது என்றில்லாமல், ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட இடங்களை நிரப்புவது எனும் சூழலே கல்லூரிகளில், குறிப்பாக அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் காணப்படுகிறது. இதனால், தகுதி இருந்தும் பலர் கல்விக் கனவைத் தொலைக்க நேர்கிறது. இதனால்தான் அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல்கள் ஒலித்துவருகின்றன.

கலை அறிவியல் கல்லூரிகளில் இளநிலை / முதுநிலை பட்டப் படிப்புக்கான இடங்களை அதிகரிக்க வேண்டும். ஆராய்ச்சிப் படிப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தகுதிவாய்ந்த ஆசிரியர்களை / பயிற்றுநர்களைப் பணியமர்த்த வேண்டும். பள்ளிகளில் புதிதாக 18 ஆயிரம் வகுப்புகளைத் தொடங்கப்போவதாகத் தமிழக அரசு அறிவித்திருக்கிறது. அது கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.

ஓவியம் : முத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in