தலையங்கம்: மதுவால் மரணங்கள் நிகழ்வதை இனியும் அனுமதிப்பதா?

தலையங்கம்: 
மதுவால் மரணங்கள் நிகழ்வதை இனியும் அனுமதிப்பதா?
BALACHANDAR L

மது போதையால் ஏற்படும் விபரீதங்களை நாம் தொடர்ந்து பார்த்துவருகிறோம். சமீபகாலமாகத் திரை நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்களின் வாரிசுகள் தொடர்புடைய சாலை விபத்துகளின் பின்னணியை ஆராய்ந்தால், அது மதுவின் கொடுங்கரங்களை நோக்கி நீள்வதை உணர முடிகிறது. இந்நிலையில், மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் மதுவைக் கட்டுப்படுத்துவதிலும், சாலை விதிகளை அமல்படுத்துவதிலும் இன்னும் கடுமையான அணுகுமுறையை அரசு கைக்கொள்ள வேண்டும் எனும் எண்ணம் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2019-ல் மட்டும் நாடு முழுவதும் மதுப் பழக்கம் காரணமாக நிகழ்ந்த சாலை விபத்துகள் / தற்கொலைச் சம்பவங்களில் 1,296 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். அந்த ஆண்டில் மதுப் பழக்கத்தின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பது தமிழகம்தான். அதேபோல், மதுப் பழக்கத்தால் நிகழும் தற்கொலைச் சம்பவங்களின் பட்டியலிலும் தமிழகமே முன்னிலை வகிப்பது மிகுந்த வேதனையளிக்கும் செய்தி. உயிரிழப்புகளைத் தாண்டி உடல் உறுப்புகள் இழப்பு, மருத்துவச் செலவு எனப் பல்வேறு பிரச்சினைகளைக் குடும்பங்கள் எதிர்கொள்கின்றன.

மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களைக் கைதுசெய்ய, மோட்டார் வாகன சட்டத்தின் 202-வது பிரிவு காவலர்களுக்கு அதிகாரம் அளித்திருக்கிறது. இதை உயர் நீதிமன்றமே சுட்டிக்காட்டியிருக்கிறது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களைக் கைதுசெய்தால் மட்டுமே, அப்பாவிப் பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டிருக்கிறது. எனினும், காவலர்கள் அதை முறைப்படி அமல்படுத்த முடிகிறதா என்பது கேள்விக்குறி.

ஒருபக்கம் வருவாய் வருகிறது என்பதால், மதுக் கடைகளை மூடுவது குறித்து அரசு பரிசீலிக்க மறுக்கிறது. மறுபுறம் இப்படியான கொடூர மரணங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. இந்த அவலம் தொடர அரசு அனுமதிக்கக்கூடாது. அப்பாவிக் குடும்பங்களின் வாழ்க்கை சிதைய மதுப் பழக்கம் காரணமாவதைத் தொடர விடக்கூடாது!

கருத்துசித்திரம்
கருத்துசித்திரம்ஓவியம்: முத்து

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in