மீண்டும் உயிர் பெறட்டும் பள்ளிக் கல்வி

மீண்டும் உயிர் பெறட்டும் பள்ளிக் கல்வி
R_Ragu

நவம்பர் 1-ம் தேதி முதல், முழுமையாகப் பள்ளிகளைத் திறக்க ஏற்பாடு செய்திருக்கிறது தமிழக அரசு. 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் ஏற்கெனவே தொடங்கப்பட்டுவிட்ட நிலையில், தொடக்கப் பள்ளி வகுப்புகளும், இடைநிலைப் பள்ளி வகுப்புகளும் தற்போது மீண்டும் திறக்கப்படுகின்றன. அரசின் இந்நடவடிக்கை பாராட்டத்தக்கது. அதேவேளையில், இன்னும் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் குறித்துச் சுட்டிக்காட்டுவதும் அவசியமாகிறது.

முதல் விஷயம் இடைநிற்றல். தமிழக அரசிடம் உயர் நீதிமன்றம் விளக்கம் கேட்கும் அளவுக்கு, பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது. வேலைக்குச் செல்லும் பெற்றோரின் செல்போன்களுக்காக மாலை வரை காத்திருந்து, இணைய வகுப்புகளில் கலந்துகொள்ளும் நிலையில் பல மாணவர்கள் இருப்பது, குடும்ப வறுமை காரணமாக வேலைக்குச் செல்ல வேண்டிய நிர்பந்தம் எனப் பல்வேறு காரணிகள் இதன் பின்புலமாக இருக்கின்றன.

அதன் தொடர்ச்சியாக, சிறார்கள் குற்றச் செயல்களில் ஈடுபடுவது, குழந்தைத் திருமணங்கள் என மேலும் பல அவலங்களும் நடந்திருக்கின்றன. இந்தச் சூழலில் மீண்டும் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்குக் கழிப்பறை உள்ளிட்ட உரிய வசதிகளை உறுதிசெய்வதுடன், இடைநின்ற மாணவர்களை மீண்டும் பள்ளிக்குக் கொண்டுவரவும் உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

மாணவர்களிடையே கற்றல் குறைபாடு பெரும் பிரச்சினையாகியிருக்கிறது. எனவே, கற்பிப்பதிலும், தேர்வுகள் நடத்துவதிலும் நெகிழ்வுத்தன்மை அவசியம். தேவைப்பட்டால் பாடத்திட்டத்தில் போதுமான மாற்றங்களையும் கொண்டுவரலாம். குழந்தைகளுக்கான தடுப்பூசி இன்னமும் பயன்பாட்டுக்கு வராத நிலையில், அவர்களைத் தொற்றிலிருந்து பாதுகாப்பது அவசியம்.

பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் மாணவர்களுக்குத் தொற்று அபாயம் அதிகம் என்பதால், அரசே சிறப்புப் பேருந்து வசதிகளை ஏற்படுத்தித் தரலாம். தொற்று பரவாமல் தடுக்க, ஒவ்வொரு வகுப்புக்கும் நேர அட்டவணையில் திட்டமிடலும் முக்கியம். சுமூக நிலை உருவாகும் வரையில் இத்தகைய ஏற்பாடுகளைத் தொடரலாம்.

பள்ளிக் கல்விதான் ஒவ்வொரு மனிதருக்கும் அஸ்திவாரம். அது மீண்டும் வலுப்பெறும் சூழல் வாய்க்கட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in