ஆம்னி பேருந்து கட்டண உயர்வுக்கு நிரந்தரத் தீர்வு அவசியம்!

ஆம்னி பேருந்து கட்டண உயர்வுக்கு நிரந்தரத் தீர்வு அவசியம்!
PICHUMANI K

பண்டிகைக் காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் உயர்த்தப்படுவது, மக்கள் எதிர்கொள்ளும் வழக்கமான பிரச்சினையாகவே தொடர்கிறது. இந்த முறையும் ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையை ஒட்டிய விடுமுறைக்குச் சொந்த ஊர் செல்லத் திட்டமிட்டிருந்தவர்கள் எதிர்கொண்டிருக்கும் முக்கியப் பிரச்சினையாகியிருக்கிறது பேருந்துக் கட்டண உயர்வு.

தனியார் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்துவதுதான் இதில் இருக்கும் அடிப்படைப் பிரச்சினை. இந்த முறை வழக்கமான கட்டணத்தைவிட 3 மடங்கு கட்டணத் தொகை உயர்த்தப்பட்டது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. வழக்கமா முன்னறிவிப்பு இல்லாமல், கட்டணம் பல மடங்கு உயர்த்தப்படும். இது தொடர்பான புகார்கள் அதிகரித்ததால் தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் (டிஎன்பிஓஏ), இம்முறை கட்டண உயர்வுப் பட்டியலை வெளியிட்டது.

பட்டியலைப் பார்த்த பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். உதாரணத்துக்கு, சென்னையிலிருந்து மதுரை செல்வதற்கான கட்டணமாக 1,930 ரூபாய் முதல் 3,070 ரூபாய் வரை என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கோவைக்குக் குறைந்தபட்சமாக 2,050 ரூபாய் முதல் 3,310 வரையிலும், தூத்துக்குடிக்கு 2,320 ரூபாய் முதல் 3,810 ரூபாய் வரையிலுமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்த புகார்களுக்குப் பதிலளித்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், பெருந்தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட இழப்புகள், அதிகரித்துவரும் எரிபொருள் விலை, சுங்கச் சாவடிக் கட்டண உயர்வு போன்றவற்றைக் காரணமாக முன்வைத்து நியாயம் கற்பித்தனர். அதுமட்டுமல்லாமல், ஆம்னி பேருந்து கட்டணத்தை அரசு நிர்ணயிக்க முடியாது என்றும் வாதிட்டனர்.

இதுதொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், ஆம்னி பேருந்துக் கட்டண உயர்வு ஏழைகளை பாதிப்பதில்லை என்றும், அரசுப் பேருந்துகளில் பயணிக்க விரும்பாதவர்கள்தான், தனியார் ஆம்னிப் பேருந்துகளில் கட்டணத்தைப் பற்றித் தெரிந்தும் முன்பதிவு செய்து பயணிப்பதாகவும் கூறியது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆம்னி பேருந்து தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் அரசுப் பேருந்துகளைப் போல் சேவை செய்ய முடியாது என்றும் அவர் கூறியது விமர்சனத்துக்குள்ளானது.

இதில், கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் கட்டண உயர்வுக்காக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முன்வைக்கும் விலையேற்ற நடவடிக்கைகள் அரசுகளால் எடுக்கப்படுபவை அல்லது அரசின் கொள்கைகள் காரணமாக ஏற்படுபவை. அதற்கான விலையை மக்கள் எப்படிக் கொடுக்க முடியும்? தவிர, பெருந்தொற்றுக்கால முடக்கங்கள் தொழில் நிறுவனங்களை மட்டுமல்ல; பொதுமக்களையும் வெகுவாகப் பாதித்திருக்கின்றன. எனவே, அதையும் ஒரு காரணமாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் முன்வைப்பதில் தர்க்கமோ, நியாயமோ இல்லை.

இவ்விஷயத்தில் அரசின் பொறுப்பே அதிகம். பண்டிகைக் காலங்களில் என்னதான் சிறப்புப் பேருந்துகளை அரசு ஏற்பாடு செய்தாலும் அவை போதுமானவவையாக இருப்பதில்லை. தவிர நெடுந்தூரம் குடும்பத்துடன் செல்பவர்களுக்கு சாதாரணப் பேருந்துகளில் உரிய வசதியும் கிடைப்பதில்லை. அப்படியான வசதிகளைக் கொண்ட ஆம்னி பேருந்துகள் அவற்றுக்குத் தகுந்தாற்போல் சற்றே கூடுதல் கட்டணம் வசூலிப்பது ஏற்கத்தக்கதுதான். ஆனால், அதற்கு ஒரு எல்லை வேண்டும் அல்லவா? சில அரசியல் தலைவர்கள் சரியாக சுட்டிக்காட்டியிருப்பது போல, விமானக் கட்டணத்தையே மிஞ்சும் அளவுக்கு ஆம்னி பேருந்து கட்டணம் நிர்ணயிக்கப்படுவதை எப்படி ஏற்க முடியும்? இந்த முறை கொடுக்கப்பட்ட அழுத்தத்தைத் தொடர்ந்து கட்டணத்தைக் குறைப்பதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கூறியிருக்கிறார்கள்.

விஷயம் அத்துடன் முடிந்துவிடுவதில்லை. ஆம்னி பேருந்துகள் கட்டண உயர்வு, அரசுப் பேருந்துகளின் தரம் மற்றும் எண்ணிக்கை என விவாதிக்கப்பட வேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. இவை அனைத்துக்கும் உரிய வகையில் தீர்வு காணப்பட வேண்டியது அவசியம். விலையேற்றங்களால் சாமானிய மக்கள்தான் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள். அதைத் தவிர்க்க, தேவையான நடவடிக்கைகளையும், தேவைப்பட்டால் சில மாற்றங்களையும் அரசு கொண்டுவர வேண்டும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in