பருத்தி விலையைக் கட்டுக்குள் வைப்பது அவசியம்!

பருத்தி விலையைக் கட்டுக்குள் வைப்பது அவசியம்!
G N RAO

பருத்தி மற்றும் நூலின் விலை கடுமையாக உயர்ந்திருப்பதால், தமிழகத்தில் ஜவுளித் தொழிலில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. பருத்தியின் விலை இந்த ஆண்டு மட்டும் 40 சதவீதம் உயர்ந்திருக்கிறது. இதனால் ஒரு பக்கம் பருத்தி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்திருந்தாலும் மறுபக்கம் தமிழ்நாட்டில் நெசவாளர்கள், ஆடை மற்றும் பின்னலாடை உற்பத்தியாளர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவில் நிலவும் வெப்ப அலை, கோதுமை உற்பத்தியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பது போல பருத்தி உற்பத்தியிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. உற்பத்தி குறைவு என்பதால் விலையும் அதிகரித்திருக்கிறது. உலக அளவில் பருத்தி ஏற்றுமதியில் மூன்றாவது இடம் வகிக்கும் நாடு இந்தியா. இந்தச் சூழலில் ஏற்கெனவே விலை உயர்ந்து வருவதால் உபரியாக இருக்கும் பருத்தி மற்றும் நூலை மட்டும் ஏற்றுமதி செய்யவேண்டும் என மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் உத்தரவிட்டார்.

இதற்கிடையே, பருத்தி விலை உயர்வைக் கண்டித்து திருப்பூரின் பின்னலாடை தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். கரூர், ஈரோடு ஆகிய நகரங்களிலும் இப்பிரச்சினை நீடிக்கிறது. மேலும், இந்தியாவில் பருத்தி இறக்குமதி மீதான வரி மிக அதிகம் என ஜவுளித் துறையினர் கருதுகிறார்கள்.

பருத்தி மற்றும் நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஏற்கெனவே பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பியூஷ் கோயலிடமும் தொலைபேசியில் பேசியிருக்கிறார். . ஜவுளித் தொழில் என்பது சிறு குறு தொழில் துறையினர் முதல் பெரும் ஏற்றுமதி நிறுவனங்கள் வரை சங்கிலித் தொடர் போல பலருக்கு வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் வழங்கும் துறை என்பதால் இதில் கூடுதல் அக்கறை அவசியம்!

ஓவியம்: முத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in