ஆளுநரின் பேச்சு அக்கறையா, அநாவசியமா?

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

"அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதே உடனடித் தேவை" என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது குடியரசு தின உரையில் குறிப்பிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளையில், அந்த அக்கறையையும் தாண்டி அவர் தெரிவித்திருக்கும் சில கருத்துகள் தேவையற்ற சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றன.

“பிற மாநிலங்களின் மாணவர்களைப் போல், தமிழகப் பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் பயில வேண்டும். பிற இந்திய மொழிகளின் அறிவை, நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது அவ்வளவு சரியில்லை” என்று ஆளுநர் கூறியிருக்கிறார். தமிழக அரசும், தமிழறிஞர்களும் பல முறை தெளிவுபடுத்திய பின்னரும், இதுபோன்ற கருத்துகளை மத்திய பாஜக அரசின் குரலாக ஆளுநர் எதிரொலிப்பது தவிர்க்கப்பட வேண்டியது. கூடுதலாக மொழிகளைக் கற்றுக்கொள்வதில் தவறு இல்லை. ஆனால், அது மதிப்பெண் அடிப்படையில் இல்லாமல் விருப்பத்தின் பேரில் இருக்க வேண்டும். தொழில்வளர்ச்சியிலும், தொழில்நுட்ப மேம்பாட்டிலும் முன்னணியில் இருக்கும் ஜப்பான் போன்ற நாடுகளில் தாய்மொழிக் கல்வி மூலமாகவே பாடம் நடத்தப்படுகிறது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

அதேசமயம், ஒரு ஆளுநர் என்பவர் சுதந்திரமாக எந்தவொரு கருத்துமே தெரிவிக்கக் கூடாது என்பது போல் எழும் சில குரல்களும் ஏற்கத்தக்கவை அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, எதிர்க்கட்சிகள் மற்றும் ஊடகங்கள் சுட்டிக்காட்டிய பிறகும் தவறான பாதையில் தொடர்ந்து பயணிக்கும் நேரங்களில், அதுகுறித்து விளக்கம் கேட்பதும் தன் மனதில் பட்டதைச் சொல்வதும் ஒரு ஆளுநரின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது என்று சொல்லிவிட முடியாது.

ஆளுநர் என்ற ஒரு பதவி வழக்கில் இருக்கும்வரை, அப்பதவி 'ஆட்டுக்கு தாடி'யாக மட்டுமே எப்படி இருந்துவிட முடியும்?

ஓவியம்: முத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in