பெரிய பொறுப்புகளில் எளியவர்கள்... வெல்லட்டும் மக்கள் சக்தி!

பெரிய பொறுப்புகளில் எளியவர்கள்... வெல்லட்டும் மக்கள் சக்தி!
B_VELANKANNI RAJ

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மேயர்கள், துணை மேயர்கள், தலைவர்கள், துணைத் தலைவர்கள் அநேக இடங்களில் பதவியேற்றுக் கொண்டுவிட்டார்கள். அவர்களில் பலர் எளிய பின்னணியிலிருந்து வந்தவர்கள் எனும் செய்தி நம்பிக்கையளிக்கிறது.

சென்னை மாநகராட்சியின் மேயராக முதன்முறையாகப் பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் பிரியா பொறுப்பேற்றிருக்கிறார். 15 ஆயிரம் ரூபாய் மாதச் சம்பளம் பெற்றுவந்த கல்பனா முதல், வாடகை வீட்டில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் சரவணன் வரை எளியவர்களும் மேயர் பதவிக்கு வந்திருக்கிறார்கள். தாம்பரம் மாநகராட்சி மேயராகியிருக்கும் வசந்தகுமாரி, தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வந்து பதவியேற்றுக்கொண்டது மகிழ்வு தந்த இன்னொரு நிகழ்வு.

இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தவர் என்பது, மேயர் பதவியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. உள்ளாட்சிகளின் தலைமைப் பொறுப்பு வெறுமனே கவுரவப் பதவி அல்ல. இதன் மூலம் மக்களின் பிரச்சினைகளுக்கு நேரடியாகத் தீர்வு காண முடியும்.

இந்த இடத்தில் இன்னொன்றையும் சொல்லியாக வேண்டும். சில இடங்களில் பெண் பிரதிநிதிகள் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றபோது இயல்பான பதற்றத்தின் காரணமாக நா குழறினார்கள். சமூக ஊடகங்களில் இது பரவலாக பகடி செய்யப்பட்டது. பிறக்கும் போதே யாரும் சகலத்தையும் கற்றுக்கொண்டு வருவதில்லை. அனுபவம் தான் அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறது. அதுபோல இந்தப் பெண்களும் போகப் போக அனைத்தையும் படித்துக்கொள்வார்கள். அவர்கள் நேர்மையாக செயல்படுகிறார்களா என்பதை மட்டும் பார்ப்போம். அதைவிடுத்து, வீட்டுக்குள் இருந்து மக்கள் பணிக்காக பொதுவெளிக்கு வந்திருக்கும் பெண்களை கேலியும் கிண்டலும் செய்து அதைரியப்படுத்தி முடக்கிவிடாமல் அவர்களை ஊக்கப்படுத்தி வரவேற்கும் நாகரிகத்தையும் நாம் கற்றுக்கொள்வோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in