குழந்தைத் தொழிலாளர்களை மீட்க என்ன வழி?

குழந்தைத் தொழிலாளர்களை மீட்க என்ன வழி?

குழந்தைத் தொழிலாளர் முறை என்பது ஒரு சமூகக் குற்றம். நாம் எல்லோரும் அறிந்த உண்மைதான் இது. கல்வியறிவின்மை, வறுமை, சமூக ரீதியான ஒடுக்குமுறைகள் எனப் பல்வேறு காரணங்களால், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பிஞ்சுக் குழந்தைகள் உடல் உழைப்பைச் செலுத்தி வேலை செய்து பிழைக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

சமூக ஏற்றத்தாழ்வு நிறைந்த இந்தியாவில் இந்த அவலம் நீடிப்பதில் ஆச்சரியமில்லை. எனினும், அரசின் முயற்சியால் இந்த அவலத்தைக் களைவதற்குக் கணிசமான முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. இன்றைக்கு அந்த சொற்ப வெளிச்சமும் அணைக்கப்பட்டு, ஏழைக் குழந்தைகளின் வாழ்வில் இருள் சூழ்ந்திருப்பதுதான் மிகுந்த கவலையளிக்கிறது.

ஆம்! இதுநாள் வரையில் ஆயிரக்கணக்கான தளிர்களை குழந்தைத் தொழிலாளர் முறையிலிருந்து மீட்டு வந்த தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் ஏறத்தாழ முடங்கிப்போய்க் கிடக்கிறது. இதுவரை அந்தத் திட்டத்துக்கு நிதி அளித்துவந்த மத்திய அரசு அதை நிறுத்திக்கொண்டுவிட்டது. இதனால், சிறிய அளவில் உதவித் தொகையைப் பெற்று கல்வி பயின்றுவந்த ஏழைக் குழந்தைகள் இனி படிப்பைத் தொடர முடியாமல் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.

1986-ல் கொண்டுவரப்பட்ட குழந்தைத் தொழிலாளர் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தின்படி, 14 வயதுக்குட்பட்ட சிறார்களைப் பணிக்கு அமர்த்துவது குற்றம் என அறிவிக்கப்பட்டது. உத்தர பிரதேசத்தின் மிர்ஸாபூரில் கம்பளம் தயாரிப்பு மையங்கள், சிவகாசி தீப்பெட்டித் தொழிற்சாலைகள் என நாட்டின் 12 முக்கியப் பகுதிகளில் குழந்தைத் தொழிலாளர்கள் வேலை செய்வது கண்டறியப்பட்டது. 1988-ல் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

மொத்தம் 312 மாவட்டங்களில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டு பள்ளிகளில் சேர்க்கப்பட்டார்கள். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், பொருளாதார ரீதியாக உதவும் வகையில் அவர்களுக்கு மாத உதவித் தொகையும் வழங்கப்பட்டது. அது 100 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர்த்தப்பட்டது. குழந்தைத் தொழிலாளராக வேலை செய்து மீட்கப்பட்ட பதின்பருவத்தினருக்குத் தொழிற்கல்விக்கான கதவுகளும் திறக்கப்பட்டன.

ஆனால், இவை அனைத்தும் 2016-ல், குழந்தைத் தொழிலாளர் தடுப்பு மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தில் மத்திய அரசு கொண்டுவந்த திருத்தத்துக்குப் பின்னர் முற்றுப்பெற்றுவிட்டன. அதுமட்டுமல்ல... பதின்பருவத்தினரை வேலைக்கு அமர்த்துவதில் இருந்த தடையும் நீக்கப்பட்டுவிட்டது. மேலும், இனி குழந்தைத் தொழிலாளர்களை மீட்டு அவர்களின் கல்வி தொடர வழிவகுக்கும் வேலைகளை, ‘சமக்ர சிக்‌ஷா அபியான்’ எனும் ஒருங்கிணைந்த கல்வித் திட்டம் மூலம் மாநில அரசுகள் மேற்கொள்ளலாம் என்று மத்திய அரசு கூறிவிட்டது.

இதனால் இதுவரை கிடைத்துவந்த நிதி இல்லாமல், மாநில அரசுகள் தடுமாறுகின்றன. போதாக்குறைக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் நிலவிவரும் பெருந்தொற்றுக் காலப் பிரச்சினைகள் ஏராளமான பள்ளி மாணவ – மாணவியரைக் குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றியிருக்கின்றன. அந்தக் காலகட்டத்தில் தமிழகத்தின் 24 மாவட்டங்களில் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 280 சதவீதம் அதிகரித்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

வேதனை தரும் இந்த விஷயத்தை வெறுமனே புலம்பலுடன் கடந்துவிடக் கூடாது. குழந்தைகள் கல்வி கற்கும் வயதில் வேலைக்குச் செல்ல அனுமதிப்பது பெரும் பாவம் என்பதை மத்திய அரசுக்குத் தமிழக அரசு உணர்த்த வேண்டும். முடிந்தவரை இதுதொடர்பாக மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கலாம். பிற மாநில அரசுகளுடன் பேசி இதுகுறித்து ஒரு பொதுக் கருத்தை உருவாக்க முயற்சிக்கலாம்.

மத்திய அரசு அளித்துவந்த நிதி நின்றுவிட்டாலும், மாநில அரசு அதற்கான நிதியைத் திரட்டுவதற்கான வழிமுறைகளை ஆராயலாம். நிச்சயம் இதற்கு ஒரு தீர்வைக் கண்டடைய வேண்டியது தமிழக அரசின் கடமை. பிஞ்சுக் கைகள் கூடுதலான புத்தகங்களைச் சுமப்பதையே சகித்துக்கொள்ள விரும்பாத சமூகம், அவர்கள் பாறைகளையும் பொதி மூட்டைகளையும் சுமப்பதை அனுதிக்கலாமா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in