ஆண் மையச் சமூகம் அல்ல; அனைவருக்குமான சமூகம் இது!

ஆண் மையச் சமூகம் அல்ல; அனைவருக்குமான சமூகம் இது!
shutterstock

காதல் எனும் பெயரில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைச் சம்பவங்கள் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன. சமீபத்தில் சென்னை பரங்கிமலை மின்சார ரயில் நிலையத்தில், இளம் பெண்ணை ரயில் முன்னே தள்ளிவிட்டுக் கொடூரமாகக் கொலை செய்த இளைஞர் இந்த அபாயப் போக்கின் அண்மை உதாரணமாகியிருக்கிறார். பெண்ணை ஒரு பண்டமாகக் கருதி சொந்தம் கொண்டாடும் மனநிலையால் ஏற்படும் இந்த விபரீதங்களுக்கு உடனடியாக முடிவுகட்டியாக வேண்டும். அது சாத்தியமாக வேண்டும் என்றால், அடிப்படையாகவே சமூக மாற்றம் நிகழ்வது அவசியம்!

முதலில், பரங்கிமலை சம்பவம் முன்வைக்கும் சில முக்கிய பிரச்சினைகளைக் கவனத்தில் கொள்வோம். முதல் பிரச்சினை, பாதுகாப்பு ஏற்பாடுகளில் குறைபாடு. மின்சார ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்ற இடங்களில் பல நேரங்களில் போலீஸ் பாதுகாப்பு இருப்பதில்லை. கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் மட்டுமல்ல, குறைவாக இருக்கும் நேரங்களிலும் குற்றங்கள் நடக்கத்தான் செய்கின்றன. அவற்றைத் தடுக்க போதிய காவலர்களை நியமிக்கலாம். குறிப்பாக, பெண் காவலர்கள் ரோந்துசெல்வது அவசியம்.

இதுபோன்ற அசம்பாவிதங்களையும் தொந்தரவுகளையும் தவிர்க்க பெண்கள் துணிச்சலாக முன்வர வேண்டும். தங்களைப் பின்தொடர்ந்து தொல்லை தருபவர்கள், அத்துமீறுபவர்கள் குறித்து உடனடியாகப் பெற்றோருக்குத் தெரிவிக்க வேண்டும்; காவல் துறையை அணுகி சட்டரீதியிலான பாதுகாப்பு வளையத்தைப் பெற வேண்டும். இருபாலர் இணைந்து பயிலும் ஆரோக்கியமான கல்வி அமைப்பில் அவ்வப்போது சில நெருடல்கள் ஏற்படலாம். வசிக்கும் பகுதிகளிலும் அப்படியான சூழல்கள் இருக்கலாம். அதுபோன்ற தருணங்களில் தோழமையின் எல்லைகளை சக நண்பர்களுக்கு ஆரம்பத்திலேயே உணர்த்திவிட வேண்டும். சிறுமிகள் முதல் மூதாட்டிகள் வரை பெண்களில் பலர் பாலியல் ரீதியான குற்றங்களுக்கு இலக்காகிறார்கள். இப்படியான அவலச் சூழலில், தங்களைத் தற்காத்துக்கொள்ள தேவையான உத்திகளைப் பெண்கள் கைக்கொள்ள வேண்டும்.

இப்படியெல்லாம் அறிவுறுத்தல்களை, சுட்டிக்காட்டல்களைச் செய்வது சுலபம். ஆனால், அவற்றையெல்லாம் பெண்கள் கைக்கொள்ள, தயக்கமின்றி பயன்படுத்திக்கொள்ள உரிய சூழலை ஏற்படுத்தித் தரவேண்டியது அரசு நிறுவனங்கள், சமூக அமைப்புகள், கல்வி மையங்கள், காவல் துறை எனப் பலவற்றின் பொறுப்பு. பல தருணங்களில் தங்கள் பிரச்சினையை வெளியில் சொல்லவே அச்சப்படும் நிலையில் பெண்கள் இன்னமும் இருப்பதை, அசம்பாவிதங்கள் குறித்த அன்றாடச் செய்திகள் உணர்த்துகின்றன. அந்த இறுக்கத்தை உடைப்பது மிக மிக முக்கியம்.

சமூகம் என்பது ஆண் மையமானது அல்ல; அனைவருக்குமானது. பரங்கிமலை சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்டிருக்கும் இளைஞர் தனக்குக் கிடைக்காத ஒரு பெண் வேறொருவருக்குக் கிடைக்கக்கூடாது எனும் மனநிலையில் கொலை செய்யத் துணிந்ததாகச் செய்திகள் சுட்டிக்காட்டுகின்றன. இளைஞர்களிடம் இதுபோன்ற சுயநல மனப்பான்மையும், ஆணாதிக்கச் சிந்தனையும் மேலோங்கினால் அது குற்றச்செயல்களுக்கே வழிவகுக்கும். தனிமனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்கள் உள்ளிட்ட காட்சி ஊடகங்களுக்கும் இதுபோன்ற அவலங்களில் பங்கு இருக்கிறது. ஆண் எனும் ஒரே ஒரு தகுதி இருந்தால் போதும்; விருப்பம் இல்லாத பெண்களைப் பின்தொடர்ந்து சென்று மிரட்டி காதலிக்க வைக்கலாம் எனும் பொதுப்புத்தியை இளைஞர்களிடம் விதைத்ததில் தமிழ்த் திரைப்படங்களின் பங்கை யாரும் மறுக்க முடியாது. காதல் என்பது வலிந்து திணிக்கப்படும் விஷயமல்ல; இயல்பாக முகிழ்க்க வேண்டிய உணர்வு. ஆனால், பல தருணங்களில் அந்த மேன்மையான உணர்வைக் கொச்சைப்படுத்தும் வகையிலான செயல்களில்தான் பல திரைப்படங்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை நிஜம் என நம்பும் பதின்பருவ இளைஞர்கள் தவறான பாதைக்குச் சென்றுவிடுகின்றனர். காதலுக்கு எதுவும் தேவையில்லை. ஆனால், வாழ்க்கை என்று வரும்போது அதை வெற்றிகரமாக எதிர்கொள்ள வருமானம் அவசியம். எனவே, கனவுலகில் மட்டும் சஞ்சரித்துக்கொண்டிருக்காமல் நிஜ உலகின் நிதர்சனங்களை இருபாலரும் புரிந்துகொள்ள வேண்டும்.

சங்கிலித் தொடராக ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டிருக்கும் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண ஒவ்வொரு கண்ணியிலும் இருக்கும் எதிர்மறையான அம்சங்களுக்கு முடிவுகட்ட வேண்டும். பாலியல் ரீதியிலான தொந்தரவில் தொடங்கி, ஆபாசமாகப் படமெடுத்து மிரட்டிப் பணம் பறிப்பது, தனது விருப்பத்துக்கு இணங்காத பெண்களை அடித்துத் துன்புறுத்துவது, கொலை செய்வது வரை எதைப் பற்றியும் குற்றவுணர்ச்சி கொள்ளாத வகையில் ஆண்கள் வளர அனுமதிப்பது சமூகத்துக்குச் சாபக்கேடாக முடியும். இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளவும் முறியடிக்கவும் தேவையான விழிப்புணர்வை வளர்ப்பது இன்றியமையாதது!

காதல், சாதி, குடும்ப கெளரவம் என எந்தக் காரணியையும் முன்வைத்து வன்செயல்களில் ஈடுபடுவதைச் சட்டம் ஒருபோதும் அனுமதிக்காது. நாகரிகச் சமூகத்தில் கொலை, பாலியல் வன்கொடுமை, பாலியல் ரீதியிலான பாகுபாடு போன்ற பாதகங்களுக்கு இடம் கிடையாது என்பதை நாம் அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டிய காலகட்டம் இது!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in