வாக்குக்குப் பணம்... வருத்தமளிக்கும் அரசியல் போக்கு!

வாக்குக்குப் பணம்... வருத்தமளிக்கும் அரசியல் போக்கு!

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. இனியும், மக்களுக்கான திட்டங்களும் பணிகளும் நீண்டகாலத்துக்கு நிலுவையில் இருக்காது எனும் நம்பிக்கையை இது உருவாக்கியிருக்கிறது. அதேவேளையில், வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் போக்கு அதிக அளவில் நடந்திருப்பதும், அரசியல் கட்சியினருக்கு நிகராக சுயேச்சை வேட்பாளர்களும் அதில் மும்முரம் காட்டியதும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன.

வாக்காளர்களை ஏதேனும் ஒருவிதத்தில் திருப்தியடையச் செய்து, வாக்குகளை அறுவடை செய்வது அரசியல் கட்சிகளின் சாதுரியம் என்று கருதப்படும் அளவுக்கு, இன்றைய அரசியல் சூழல் மாறிவிட்டது. ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் கட்சிகள், இதில் கூடுதல் ஈடுபாட்டுடன் செயல்படுவதையும் பார்த்திருக்கிறோம். இந்த முறையோ, சாமானியர்களும் ஆயிரக்கணக்கில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின.

வெற்றிபெறும் கவுன்சிலர்கள், மறைமுகத் தேர்தல் மூலம் மேயர், துணை மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்கள், துணைத் தலைவர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதால், தேர்தலுக்காகச் செலவழித்த பணத்தை அவர்களிடம் பேசி ஈடுகட்டிவிடலாம் என்றே இவ்வாறு செயல்படுவதாகத் தெரிகிறது. சிறிய வட்டம் என்பதால் பணம் கொடுப்பதும் வாக்குகளை உறுதிசெய்வதும் எளிதாகவே இருக்கிறது என்பதையும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு ஊதியம் கிடையாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

2019-ல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்தபோதே, இதுவரை இல்லாத அளவுக்குப் பணப்புழக்கம் அதிகரித்ததாக விமர்சனங்கள் எழுந்தன. வாக்குக்குப் பணம் கொடுக்கும் கலாச்சாரம் உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதிகரித்தால், உள்ளாட்சி நிர்வாகங்கள் எப்படி நேர்மையாக நடக்கும் எனும் கேள்வியும் எழுந்தது. இப்போது அந்த அச்சம் அடுத்த கட்டத்தை அடைந்துவிட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் ஊழல் பரவத் தொடங்கினால், அது மக்களாட்சியின் வேரையே அரிக்கத் தொடங்கிவிடும். எனவே, இதுபோன்ற போக்குகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள், அரசியல் கட்சிகள், அரசு அமைப்புகள் என அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in