
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை சற்றே அதிகரிப்பதும், குறைவதுமாக இருக்கிறது. எனவே, பெருந்தொற்றை மீண்டும் தீவிரமாக அணுகுவதா அல்லது கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதா எனும் குழப்பம் மக்களிடம் இருப்பதில் ஆச்சரியமில்லை.
ஆனால், கரோனா விஷயத்தில் கவனம் தேவை என்பதை முதல்வர் மு.க.ஸ்டாலின், பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் தகவல்கள் பட்டவர்த்தனமாக உணர்த்துகின்றன. எனவே, எச்சரிக்கை மிகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளும், போதிய கவனத்துடன் உடல்நலன் பேணுதலும் அனைவருக்கும் அவசியம் என்பதை மீண்டும் மீண்டும் நமக்கு நாமே வலியுறுத்திக் கொண்டாக வேண்டும்.
ஜூலை 14 நிலவரப்படி இந்தியாவில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைக் கடந்திருக்கிறது. 38 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். மகாராஷ்டிரம், டெல்லி, கேரளம் போன்ற மாநிலங்களில் தொற்றுப் பரவல் அதிகமாகவே இருக்கிறது. தெலங்கானாவில் கரோனா நோய் ‘எண்டெமிக்’ (வட்டாரத் தொற்று) என அழைக்கப்படும் அதிகம் தொற்றாத நிலையை எட்டிவிட்டாலும், பாதுகாப்பு அம்சங்களைப் பின்பற்றுவது அவசியம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை தடுப்பூசி செலுத்தும் பணிகள் பாராட்டத்தக்க வகையில் நடைபெறுகின்றன. அத்துடன், ஜூலை 15 முதல் அடுத்த 75 நாட்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகள் இலவசமாகச் செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது மிகுந்த நம்பிக்கையளிக்கிறது. இதை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
பொதுமுடக்கம் எனும் கொடிய அனுபவத்தைக் கடந்து இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிவிட்டோம். எனினும், புதிய திரிபுகள், துணைத் திரிபுகள் எனச் சில நாடுகளில் மீண்டும் கட்டுப்பாடுகளை உருவாக்கச் செய்திருக்கிறது கரோனா. ஆகவே, இது ஒரு முக்கியமான தருணம் என்பதை நினைவில் வைத்துக்கொள்வோம்; பாதுகாப்பாக இருப்போம்!