தேர்தலில் வாக்கை விற்காதிருப்போம்!!

வாக்களிக்க பணம்
வாக்களிக்க பணம்வாக்களிக்க பணம் கொடுப்பது - வாங்குவது இரண்டுமே தவறு என்கிறது சட்டம்.

உலகின் மிகப் பெரும் ஜனநாயக தேசத்தில், அதற்கு பொருள் சேர்க்கும் ஜனநாயகத் திருவிழாவான தேர்தல்கள், அவற்றின் நோக்கத்தை இழந்து வருகின்றன. உள்ளாட்சி, சட்டப்பேரவை, மக்களவை, இடைத் தேர்தல்கள் என சகல தேர்தல்களிலும் பணமே பிரதானமாகிப் போகிறது. தேர்தல் பிரச்சாரத்துக்கு வரையறையின்றி செலவழிப்பது முதல், வாக்களர்களின் வாக்குக்கு விலை பேசுவது வரை ஜனநாயகம் தேய்ந்து பல்லிளித்து வருகிறது. இடைத் தேர்தல் களத்தில் இது இன்னும் கொஞ்சம் அதிகமாகவே!

வாக்களிக்க பணம் கொடுப்பது - வாங்குவது இரண்டுமே தவறு என்கிறது சட்டம். மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் மற்றும் இந்திய கிரிமினல் சட்டம் என இரண்டின் கீழும் அவை தண்டனைக்குரிய குற்றமாகின்றன. ஆனபோதும் வாக்குக்கு பணம் அளிப்பது, அவற்றை பெறுவது இரண்டுமே வெட்கமின்றி நடந்துகொண்டுதான் இருக்கின்றன. வாக்களிக்க பணம் வாங்கினால் ஓராண்டு சிறை தண்டனை என்னும் சட்டம் ஒருபக்கம் இருக்கட்டும்; நிதர்சனத்தில் தவறான நபருக்கு வாக்களிப்பதன் மூலம், தாங்களே தண்டனைக்கு ஆளாவதையும் வாக்காளர்கள் யோசிக்க வேண்டும்!

வாக்குக்குப் பணம்...
வாக்குக்குப் பணம்...The Hindu

இன்னும் சிலர் வாக்குக்கு கையூட்டாக அளிக்கப்படுவது அனைத்தும் மக்களின் வரிப்பணம் என்றும், எனவே அதனை பெற்றுக்கொண்டு தாங்கள் விரும்பியவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் ஒரு விநோத நியாயத்தை முன்வைக்கிறார்கள். தேர்தல் ஜனநாயகத்தை புற்றென பாதித்து புரையோடிப் போயிருப்பவை அனைத்துமே இதுபோன்ற சப்பைக்கட்டு வாதங்கள்தான். கை நீட்டி பணம் வாங்குவதன் கேவலத்தை சமூகத்தின் இணக்கங்களில் ஒன்றாக பூசி மெழுகுவது கூடாது. நாளடைவில் இந்தப் போக்கு சுரணையற்றதாக சமூகத்தை பீடிக்க வாய்ப்பளித்துவிடும். இதனை கேஜ்ரிவால் தொடங்கி சீமான் வரை, மாற்றத்தை முன்னிறுத்துவதாக தோள்தட்டுவோரும் வெளிப்படையாகவே பேசி வருகிறார்கள்.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் களம் தொடங்கி, சட்டசபை பொதுத்தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் கர்நாடக மாநிலம் வரை, இவ்வாறு வாக்குக்கு பணம் என்பதை அரசியல்வாதிகள் பகிரங்கமாக விவாதிக்கிறார்கள். லகானை கையில் வைத்திருக்கும் தேர்தல் ஆணையம், தனது பிரத்யேக அதிகாரத்தின் கீழ் சாட்டை சுழற்றவும் தயங்குகிறது.  

தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பதாகை
தேர்தல் ஆணையத்தின் விழிப்புணர்வு பதாகைThe Hindu

‘தண்ணீர் விட்டா வளர்த்தோம்? இப்பயிரைக் கண்ணீரால் காத்தோம்!’ என சுதந்திரத்துக்கு போராடியவர்கள், இப்போது நடக்கும் ஜனநாயகக் கூத்துகளை அறிந்தால் ரத்தக் கண்ணீர் சொரிவார்கள். சுதந்திரம் பெற்றதன் 75-வது ஆண்டு கொண்டாட்டத்தின் மத்தியிலேனும், நம் ஒவ்வொருக்கும் உரிய வாக்குரிமையின் மகத்துவத்தை உணர்வோம். நம் குழந்தைகளின் சிறப்பான எதிர்காலம் கருதியேனும், வாக்குகளை விற்பதை தவிர்ப்போம். இம்மாதிரி வாக்குகள் விற்பனையாவதும், பணநாயகமே ஜெயிப்பதும், ஜனநாயகத்தை ஒட்டுமொத்தமாக செல்லரித்து சிதைத்துவிடும். எனவே, சட்டம் மட்டுமன்றி, மனசாட்சிக்கு உட்பட்டும் மக்கள் வாக்களிக்க முன்வர வேண்டும்.

வாக்குரிமை
வாக்குரிமைThe Hindu

வாக்களிப்பது என்பது நமது உரிமை, கடமை மட்டுமல்ல பெருமையும் கூட. நாட்டின் பெருமைக்குரிய குடிமகன் என்பதற்கான அடிப்படையை வாக்களிப்பதன் மூலமாகவே நிறுவுகிறோம். எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதையும், முறையான வாக்களிப்பதன் வாயிலாகவே பூர்த்தி செய்கிறோம். ஆனால் வாக்குக்கு பணம் பெறும்போது, அத்தோடு நமது ஜனநாயகத்தின் ஆதாரமான கேள்வி கேட்கும் உரிமையை இழந்து விடுகிறோம். பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பதன் வாயிலாக, நியாயமாக வாக்களித்தோரையும் அவநம்பிக்கையில் தள்ளுகிறோம். எல்லாம் செய்துவிட்டு பின்னர், “இங்கே எதுவுமே சரியில்லை” என்று பிலாக்கணம் பாடுகிறோம்.

நம் கையில் கிடைக்கும் துருப்புச் சீட்டான வாக்குரிமையை முறையாக பயன்படுத்துவதன் வாயிலாக, மாபெரும் அரசியல் கடமையை ஆற்றுவதற்கான வாய்ப்பைப் பெறுகிறோம். பணம் வாங்கிக்கொண்டு வாக்களிப்பதன் மூலமோ, வாக்களிக்காது வாளாவிருப்பதன் மூலமோ, நாட்டின் தவறான பாதைக்கு நாமும் காரணமாகிறோம். பணம் மட்டுமல்ல, சாதி, மதம், ஆதாயம், அச்சுறுத்தல் என எதன் பொருட்டும் வாக்கை விற்காதிருப்போம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in