பெண் கவுன்சிலர்களின் பெயரால் அராஜகம்: இனியும் கூடாது!

பெண் கவுன்சிலர்களின் பெயரால் அராஜகம்: இனியும் கூடாது!

“பெண்கள் தலைமையேற்க யாருடைய அனுமதியும் தேவையில்லை” என்று அமெரிக்கத் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறியிருந்தார். “எதிர்காலத்தில் பெண் தலைவர்கள் என யாரும் இருக்கமாட்டார்கள். தலைவர்களில் பாலின பேதமே இருக்காது” என்று ஃபேஸ்புக் நிறுவனத்தின் முதன்மைச் செயற்பாட்டு அதிகாரி ஷெரில் சாண்ட்பெர்க் நம்பிக்கை தெரிவித்திருந்தார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் எனும் விஷயத்தில் வலுப்பெற்றிருக்கும் இந்த நம்பிக்கைகளுக்கு நடுவே, பெண்களின் பெயரைச் சொல்லிக்கொண்டு ஆண்கள் அராஜகத்தில் ஈடுபடும் அவலம் தமிழகத்தில் நிலவுவது வேதனையான விஷயம்!

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது பெரும் நம்பிக்கையளித்தது. எனினும், அரசியல் கட்சி நிர்வாகிகளின் மனைவி, மகள், சகோதரி போன்றோருக்கே அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டதால், அவர்களை முன்னிறுத்தி ஆண்களே அதிகாரபூர்வமற்ற உள்ளாட்சி நிர்வாகிகளாகப் பணிபுரிய வாய்ப்பு அதிகம் என அச்சமும் எழுந்தது. அந்த அச்சத்தை அதிகரித்திருக்கின்றன சமீபத்தில் நடந்திருக்கும் சம்பவங்கள்.

சென்னை வண்ணாரப்பேட்டையில் பெண் கவுன்சிலர் ஒருவரின் கணவர் தன்னை கவுன்சிலர் என்றே சொல்லிக்கொண்டு காவல் துறையினரிடம் தகராறில் ஈடுபட்ட சம்பவம், சென்னை மாநகராட்சியின் 34-வது வார்டு பெண் கவுன்சிலரின் கணவர் அப்பகுதியில் வீடு கட்டுபவர்களிடம் பணம் வசூல் செய்வதாக எழுந்த சர்ச்சை என அடுக்கடுக்கான புகார்கள் ஆளுங்கட்சி பெண் கவுன்சிலர்களின் கணவர்கள் மீது எழுந்திருக்கின்றன. மறுபுறம், உட்கட்சி சண்டையில் அதிமுக பெண் கவுன்சிலர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவமும் அதிர்ச்சியளிக்கிறது.

இதுபோன்ற சம்பவங்களில் கட்சி ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவே தவிர, அத்துமீறல்களைக் களைய உறுதியான திட்டங்கள் வகுக்கப்படுவதில்லை. தற்போது இந்தப் பிரச்சினை அதிகரித்திருப்பதால், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளும், பொதுச் சமூகமும் அரசிடம் கோரிக்கை வைத்திருக்கின்றன. அரசு அதற்குச் செவிசாய்க்க வேண்டும்!

ஓவியம்: முத்து

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in