வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தயாரா தமிழகம்?

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளத் தயாரா தமிழகம்?
Ragu R

வடகிழக்குப் பருவமழை தொடங்கவிருக்கிறது. கடந்த ஆண்டில், 59 சதவீதம் கூடுதலான வடகிழக்குப் பருவ மழையைத் தமிழகம் எதிர்கொண்டது. இந்த முறை தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை காலத்தில், 35 முதல் 75 சதவீதம் கூடுதலாக மழை பெய்யக்கூடும் எனத் தமிழக அரசு கூறியிருக்கிறது. இதை எதிர்கொள்ள நாம் தயாராக இருக்கிறோமா என்பது முக்கியமானது.

பருவமழைக் காலத்தில் நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியம். அதைவிட முக்கியமானது உரிய காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பதுதான். ‘உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என அரசு எத்தனை முறை உறுதியளித்தாலும் இறுதியில் மக்கள் அல்லலுறுவதுதான் தொடர்கதையாகிறது. தலைநகர் சென்னையிலேயே, ஒரு மணி நேரம் மழை பெய்தால் போதும்; சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவது, அதன் தொடர்ச்சியாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது எனப் பல பிரச்சினைகள் நிகழ்வதைப் பார்க்கிறோம்.

இந்தச் சூழலில், சென்னை உள்ளிட்ட பல இடங்களில் இன்னமும் மழைநீர் வடிகால் பணிகள் முழுமையாக நிறைவுசெய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்காக வி.திருப்புகழ் குழு பரிந்துரைத்த யோசனைகள் முறையாகச் செயல்படுத்தப்பட்டிருக்கின்றனவா என்பதையும் தமிழக அரசு உறுதிசெய்துகொள்ள வேண்டும். பகல் நேரங்களைவிடவும் இரவு நேரங்களில்தான் இந்த முறை அதிகமாக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ள அபாயம் ஏற்படக்கூடும் என்பதால், கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இரவு நேரங்களில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

2019 முதல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வழக்கத்தைவிட கூடுதலான மழைப்பொழிவு பதிவாகிவருகிறது. இதற்கு லா நினா விளைவு ஒரு முக்கியக் காரணியாக இருப்பதாக வானிலையாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள். சமீபத்தில், கேரளம், கர்நாடகம் என நமது அண்டை மாநிலங்களில் ஏற்பட்ட அதீத மழைப்பொழிவும் கடும் வெள்ளமும் நமக்கு முக்கியமான படிப்பினைகளை விட்டுச்சென்றிருக்கின்றன. போதாக்குறைக்கு, தமிழகம் மற்றும் புதுவையில் இந்த முறை தென்மேற்குப் பருவமழை இயல்பைவிட 45 சதவீதம் அதிகமாகப் பதிவாகியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மொத்த தேசத்தையும் வெள்ளம் மூழ்கடித்தாலும், ஒரு மழைத்துளிகூட அதற்குப் பொறுப்பேற்காது என்பார்கள். இதுபோன்ற தருணங்களில் பொறுப்பேற்க வேண்டியது அரசுதான். எனவே, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள போர்க்கால நடவடிக்கைகள் அவசியம். மழைநீர் வடிகால் பணிகளைப் பருவமழை காலத்துக்கு முன்பே நிறைவுசெய்வது, நீர்நிலைகளில் கட்டிடங்கள் கட்டப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கைகளை எடுப்பது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காகத் தயார் நிலையில் இருப்பது என அரசு செய்ய வேண்டிய விஷயங்கள் ஏராளம். அரசு அவற்றில் கூடுதல் கவனம் செலுத்தட்டும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in