பள்ளிகள் திறப்பு: பாதுகாப்பு நினைவில் இருக்கட்டும்!

பள்ளிகள் திறப்பு: பாதுகாப்பு நினைவில் இருக்கட்டும்!

தமிழகத்தில் செப்டம்பர் முதல் தேதி 50 சதவீத மாணவர்களுடன் பள்ளிகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்திருக்கிறது. 9 முதல் 12 வரையிலான வகுப்புகள் முதலில் தொடங்குகின்றன. கரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளிக் கல்வியில் பெரும் தொய்வு ஏற்பட்டிருப்பதாகப் பேசப்பட்டுவந்த நிலையில் இது ஆறுதல் தரும் விஷயம்.

ஆன்லைன் வகுப்புகள் மூலம் படிக்கும் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டிருப்பது, செல்போன் திரைகளைத் தொடர்ந்து பார்ப்பதால் கண் பார்வையில் ஏற்படும் கோளாறுகள் எனப் பல பின்னடைவுகளை இன்றைய மாணவச் சமுதாயம் எதிர்கொண்டிருக்கிறது. எனவே, பள்ளிகள் திறக்கப்படுவதை வரவேற்கலாம். எனினும், கரோனா மூன்றாவது அலை தொடங்கலாம் என்று கருதப்படும் சூழலில் மிகுந்த எச்சரிக்கையும் அவசியமாகிறது. ஏற்கெனவே பள்ளி - கல்லூரிகள் திறக்கப்பட்டபோது, தொற்றுப் பரவல் மாணவர்களிடையே அதிகரித்தது ஒரு மறக்க முடியாத பாடம்.  தற்போது தடுப்பூசிகள் பரவலாகியிருக்கும் நிலையில், ஆசிரியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்களா, தொற்றுப் பரவாமல் இருக்க சுகாதாரப் பணிகள் பள்ளிகளில் செய்யப்பட்டிருக்கின்றனவா என்பன உள்ளிட்ட விஷயங்கள் மிக முக்கியமானவை.

அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில், தனிமனித இடைவெளியைக் கடைபிடிக்கும் வகையில் போதிய இடவசதியை ஏற்படுத்துவதும் முக்கியமான பணி. இதுபோன்ற முன் தயாரிப்புகளில் ஈடுபட்டிருப்பதாகப் பள்ளிக் கல்வித்  துறை அமைச்சர் கூறியிருக்கிறார். பொதுவாகவே பாதுகாப்பு / கட்டுப்பாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் தொடக்கத்தில் காட்டப்படும் வேகம், ஒரு கட்டத்தில் தொய்வைச் சந்தித்துவிடும். அப்படியான சுணக்கம் நேராமல் தினமும் கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகள் முறையாகக் கடைபிடிக்கப்பட வேண்டும். பேருந்துகளில் தனிமனித இடைவெளிக்கு வாய்ப்புகள் குறைவு. பெரும்பாலான மாணவர்கள் பொதுப் போக்குவரத்தைச் சார்ந்திருக்கும் சூழலில், அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் எந்த அளவுக்குச் செய்யப்படும் என்பதும் முக்கியமான கேள்வி. நம்பிக்கையளிக்கும் நடவடிக்கையில் இதுபோன்ற கேள்விகளுக்கும் விளக்கமளிக்கப்பட வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in