மீண்டும் கட்டுப்பாடுகள்... மீண்டும் சவால்கள்!

மீண்டும் கட்டுப்பாடுகள்... மீண்டும் சவால்கள்!

இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டிருக்கும் நிலையில், தமிழகத்திலும் சூழல் மோசமாகி வருகிறது. சென்னையில் தினசரி தொற்று பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்திருக்கும் செய்திகள் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்நிலையில், ஏப்ரல் 10-ம் தேதி முதல் புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த முறை போல் அல்லாமல், இந்த முறை நாம் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய அவசியமும் உருவாகியிருக்கிறது.

பொதுமுடக்கத் தளர்வுகள் அமலுக்கு வந்தது, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பாதுகாப்பு வழிமுறைகளை பெரும்பாலான அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் பின்பற்றாதது என பல்வேறு விஷயங்கள் தமிழகத்தில் தொற்றுப் பரவல் அதிகரித்ததற்குக் காரணமாகக் கருதப்படுகின்றன. இந்தச் சூழலில்தான், புதிய கட்டுப்பாடுகளை அறிவித்திருக்கிறது தமிழக அரசு. திரையரங்குகளில் 50 சதவீத இருக்கை மட்டும் அனுமதி; பேருந்துகளில் நின்று பயணிக்க தடை; வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து வருவோருக்கு மீண்டும் இ-பாஸ் நடைமுறை என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. நிச்சயம் இது மக்களுக்குச் சிரமம் ஏற்படுத்தும் என்பதில் சந்தேகம் இல்லை. எனினும், யதார்த்த சூழலைப் பார்க்கும்போது இது தவிர்க்க முடியாதது என்பதே உண்மை.

பொதுமக்களாகிய நாம் நம்மளவில் புரிதலுடன் செயல்படுவது அவசியம். முதலாவதாக, பாதுகாப்பு நடவடிக்கைகளை மீண்டும் கண்டிப்புடன் கடைபிடிக்கத் தொடங்க வேண்டும். இரண்டாவதாக, தடுப்பூசிகளைச் செலுத்திக்கொள்ள நம்பிக்கையுடன் முன்வர வேண்டும். தற்சமயம், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதுமட்டும் போதாது. சாத்தியக்கூறு கொண்ட அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடுவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்.

கரோனா பரவலில் அடுத்த நான்கு வாரங்கள் மிக நெருக்கடியாக இருக்கும் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதை மனதில் கொண்டு நாம் கூடுதல் விழிப்புடன் செயல்பட வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in