உயர்கல்வி நிறுவனங்களில் கரோனா: கூடுதல் கவனம் அவசியம்!

உயர்கல்வி நிறுவனங்களில் கரோனா: கூடுதல் கவனம் அவசியம்!

சென்னை இந்திய தொழில்நுட்பக் கழக (ஐஐடி) வளாகத்திலும், அண்ணா பல்கலைக்கழகத்திலும் பயிலும் மாணவர்கள் பலர் கரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கரோனா தொற்றின் பிடியிலிருந்து உலகம் முழுமையாக வெளிவராத சூழலில், கல்லூரி வகுப்புகள் தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்தபோதே பலரிடமும் எழுந்த அச்சம், இன்றைக்கு நிதர்சனமாகிவிட்டது.

கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளிலும், வேளாண், கால்நடை கல்லூரிகள், பல்கலைக்கழகங்களிலும் இளநிலை மற்றும் முதுநிலை பயிலும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் டிசம்பர் 7 முதல் தொடங்கின. இந்நிலையில், சென்னை ஐஐடி-யில் பயிலும் மாணவர்கள், ஊழியர்கள் என 190-க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல், அண்ணா பல்கலைக்கழகம் கிண்டி வளாகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் பயிலும் 6 மாணவர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

மாணவர்கள் தொற்றுக்குள்ளான தகவல் வெளியானதைத் தொடர்ந்து, தொற்றுப் பரவல் அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் வகையிலான நடவடிக்கைகளை அரசு தொடங்கியிருக்கிறது. இது பாராட்டுக்குரியது. எனினும், இவ்விஷயத்தில் அரசு கவனிக்க வேண்டிய பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. மருத்துவ வசதி உட்பட பல்வேறு வசதிகளைக் கொண்ட உயர்கல்வி நிறுவனங்களிலேயே நிலைமை இப்படி என்றால், கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத கல்லூரிகளில் பயிலும் மாணவர்களின் கதி என்ன, தொற்று அபாயம் அதிகம் உள்ள பொதுப் போக்குவரத்தை நம்பியிருக்கும் மாணவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்வது எப்படி எனும் கேள்விகள் எழுகின்றன.

கூடவே, பள்ளிகளை மீண்டும் திறக்கும் விஷயத்திலும் அரசு மிக மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் கரோனா பரவல் தொடங்கினால், மோசமான விளைவுகள் ஏற்படும் எனும் எச்சரிக்கை உணர்வு அரசுக்கு அவசியம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in