மவுனக் குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும்!

மவுனக் குரல்கள் ஓங்கி ஒலிக்கட்டும்!

உள்ளாட்சித் தேர்தலில், காது கேளாத - வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகளும், தொழுநோயாளிகளும் போட்டியிடலாம் எனத் தமிழக அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத்திருத்தம் மனமார வரவேற்கத்தக்கது. உடல் குறைபாடுகள் ஒருவரின் செயல்பாடுகளை முடக்கிவிடாது என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டு. அந்த வகையில் உள்ளாட்சி நிர்வாகத்திலும் மாற்றுத்திறனாளிகளால் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்தச் சட்டத்திருத்தம் விதைத்திருக்கிறது.

இதற்கு முன்னர் தமிழக உள்ளாட்சித் தேர்தல்களில், காது கேளாத - வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளிகள், தொழுநோயாளிகள் ஆகியோர் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் சட்டரீதியாக மறுக்கப்பட்டிருந்தன. இன்றைக்கு மாற்றுத்திறனாளிகள் பலர் உயர் கல்வித்தகுதி உடையவர்களாகவும், தகவல் தொடர்புத்திறன் கொண்டவர்களாகவும் உள்ளனர். அதேபோல், தொழுநோயாளிகளும் உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளும்பட்சத்தில் இயல்பான வாழ்க்கை வாழ முடியும் எனும் நிலையை மருத்துவ உலகம் உருவாக்கியிருக்கிறது. எனவே, அவர்களும் தேர்தலில் போட்டியிட்டு வென்று மக்கள் பணியை முழுமையாகச் செய்ய முடியும். அதை இந்தச் சட்டத்திருத்தம் சாத்தியப்படுத்தியிருக்கிறது. அதன்படி, இனி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் அவர்கள் போட்டியிட முடியும். 2018 மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில், சத்னா தொகுதியில் முதன்முதலாக, காது கேளாத – வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான சுதீப் சுக்லா சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார். அதிசய நிகழ்வு எனும் அளவுக்கு அப்போது அது பேசப்பட்டது. ஆனால், அவருக்குக் கிடைத்த மொத்த வாக்குகள் 613 தான். அந்த அளவுக்குத்தான் ஜனநாயகச் செயல்பாடுகளில் இதுபோன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இடம் இருக்கிறது.

ஆகவே, இதுபோன்ற சட்டத்திருத்தங்கள் பெயரளவில் நின்றுவிடாமல், அவர்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுத்தரும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அனைத்துக் கட்சிகளும் இதுபோன்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பளிக்க முன்வர வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சட்டத்திருத்தங்களுக்கு உண்மையான அர்த்தம் இருக்கும்!

Related Stories

No stories found.