உணவுப் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது!

உணவுப் பாதுகாப்பில் அலட்சியம் கூடாது!

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்புத் துறையில் ஆட்கள் பற்றாக்குறையால் உணவுப் பொருட்களை பரிசோதனை செய்வதில் பின்னடைவு ஏற்படுகிறது என்று தகவல் வருகின்றன. உணவுக்காக கடைகள், உணவகங்களைச் சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான மக்களை நேரடியாகப் பாதிக்கக்கூடிய விஷயம் இது.

தமிழகத்தில் ஹோட்டல்கள், மளிகைக் கடைகள் முதல் உணவுப் பொருட்களை விற்கும் எல்லா வணிக நிறுவனங்களும் உணவுப் பாதுகாப்புத் துறையிடம் உரிய சான்று பெற்றிருக்க வேண்டும். உணவுப் பொருட்கள் தரமானவையா, என ஆய்வுசெய்வதுடன், அவற்றின் காலாவதி தேதி, பராமரிக்கப்படும் விதம் ஆகியவற்றை உறுதிசெய்வதும் உணவுப் பாதுகாப்புத் துறையின் கடமை.

ஆனால், இந்த ஆய்வுகள் முறையாக நடப்பதில்லை என்பதே களநிலவரம். உணவுப் பொருட்களின் மாதிரிகளைப் பரிசோதிப்பதற்கான மையங்கள் சென்னை உள்ளிட்ட சில இடங்களைத் தவிர பெரும்பாலான மாவட்டங்களில் இல்லை. சென்னையிலேயே பால் முதல் பிரியாணி வரை பல்வேறு வகையான உணவுப் பொருட்களின் தரம் பற்றி அவ்வப்போது அதிர்ச்சியூட்டும் செய்திகள் வருகின்றன. எனில், அரசின் நேரடிக் கண்காணிப்பிலிருந்து விலகியிருக்கும் சிறுநகரங்கள், கிராமங்களில் நிலவரம் என்ன என்பது கேள்விக்குரிய விஷயம்.

இந்நிலையில், பல மாவட்டங்களில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் பற்றாக்குறை காரணமாக, பரிசோதனைக்காகச் சேகரிக்கப்படும் உணவுப் பொருட்களின் மாதிரிகளின் எண்ணிக்கை ஆறிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுவிட்டதாகத் தற்போது செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு, சம்பந்தப்பட்ட கடைக்காரர்களிடம் அதிகாரிகள் கையூட்டு பெறுவதாகவும் புகார்கள் வந்தன.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in