இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும்!

இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும்!

காலியான பால் பாக்கெட்டுகளைத் திரும்பக் கொடுத்து, பாக்கெட்டுக்கு 10 பைசா வீதம் பெற்றுக்கொள்ளலாம் என ஆவின் நிறுவனம் அறிவித்திருக்கிறது. ஒரு முறை மட்டுமே பயனாகும் பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதிக்கப்பட்டு, ஏழு மாதங்கள் கடந்திருக்கும் சூழலில், பிளாஸ்டிக் கழிவுகள் குவிவதை ஓரளவுக்கேனும் தடுக்கும் இந்த முயற்சி வரவேற்கத்தக்கது.

சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் மக்காத பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1 முதல் தமிழக அரசு தடைவிதித்தது. இதன்படி, நெகிழிப் பைகள், ஸ்ட்ரா உள்ளிட்ட 14 வகையான பொருட்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. பால், எண்ணெய், மருத்துவப் பொருட்கள் போன்றவற்றுக்கான உறைகளுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. நடைமுறை சார்ந்த சிக்கல்களையும் தாண்டி அனைத்துத் தரப்பிலும் ஆரம்பத்தில் இதற்கு வரவேற்பு இருக்கவே செய்தது.

எனினும், மூன்று மாதங்களுக்குப் பின்னர் கிட்டத்தட்ட மீண்டும் பழைய நிலைக்கே பிளாஸ்டிக் பயன்பாடு சென்றுவிட்டது.
பெரு நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தயாரிக்கும் பிஸ்கட், சாக்லேட், குளிர் பானங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கான உறைகள் விஷயத்தில் தெளிவான முடிவு எடுக்கப்படாததும் இதற்கு ஒரு காரணம். இன்றைக்குக் குப்பையில் சேரும் பிளாஸ்டிக் கழிவுகளில் இவைதான் அதிகம். அத்துடன், பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடையில்லாத அண்டை மாநிலங்களில் தயாராகும் பிளாஸ்டிக் பொருட்கள் தமிழகத்துக்குள் வருவதையும் தடுக்க முடியவில்லை.

பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்துபவர்களிடம் அபராதம் வசூலிக்கும் நடைமுறை, ஜூன் 17 முதல் அமலுக்கு வந்தாகிவிட்டது. ஆனாலும் பிளாஸ்டிக் கழிவுகள் குறைந்தபாடில்லை. எந்த நோக்கத்துக்காக பிளாஸ்டிக் தடை கொண்டு வரப்பட்டதோ அந்த இலக்கை நாம் அடைந்தாக வேண்டும். அதற்கு அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பும் அவசியம். அந்த வகையில் ஆவின் நிறுவனம் நல்லதொரு முன்முயற்சியில் இறங்கி இருக்கிறது. இது ஒரு நல்ல தொடக்கமாக அமையட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in