அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்!

அரசியல் ரீதியாக அழுத்தம் கொடுக்க வேண்டும்!

தமிழகத்துக்கு ஜூன் மாதத்துக்கான அளவாக 9.19 டிஎம்சி நீரைத் திறந்துவிட வேண்டும் எனக் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டிருக்கிறது காவிரி மேலாண்மை ஆணையம். தண்ணீர் பஞ்சத்தில் தவித்துக்கொண்டிருக்கும் தமிழகத்துக்கு ஆறுதல் அளிக்கும் செய்தி இது. ஆனால், இவ்விஷயத்தில் வழக்கம்போல் முரண்டு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது கர்நாடகா.

மேட்டூர் அணைக்கு 9.19 டிஎம்சி தண்ணீர் திறந்துவிடப்பட வேண்டும் என்பது ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு என்று காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் கூறியிருக்கிறார். ஆனால், கர்நாடக அரசும் அம்மாநில எதிர்க்கட்சிகளும் வழக்கம்போல் பஞ்சப்பாட்டுப் பாட ஆரம்பித்துவிட்டன. மறுபக்கம், தமிழகத்தின் காவிரிப் படுகை வறண்டு கிடக்கிறது. தமிழக விவசாயிகளோ மேட்டூர் அணையின் திசையைப் பார்த்துக் கையறு நிலையில் காத்திருக்கிறார்கள்.

பருவமழைக் காலங்களில் 10 நாட்களுக்கு ஒருமுறை காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டம் நடத்தப்படும் என ஆணையம் அமைக்கப்பட்டபோது அறிவிக்கப்பட்டது. ஆனால், இது முறையாகப் பின்பற்றப்படுவதில்லை. தமிழகத்தின் குறுவை சாகுபடிக்குத் தண்ணீர் கிடைக்கும் வகையில், காவிரியில் தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிட வேண்டும். கோடை சாகுபடிக்குப் பயன்படுத்தியதுபோக, பல நீர்த்தேக்கங்களில் காவிரி நீரைக் கர்நாடகம் தேக்கி வைத்திருப்பதாகத் தமிழக விவசாயிகள் சுட்டிக்காட்டுகிறார்கள். உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள அம்மாநிலத்தில் கள ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும்.

காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்ததற்கே எதிர்ப்புத் தெரிவித்த கர்நாடகம், காவிரி நீரைத் தமிழகத்துடன் பகிர்ந்துகொள்வதில் தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. தமிழகத்தின் ஜீவாதாரப் பிரச்சினையான இவ்விஷயத்தில் தமிழக அரசும், எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். நீதிமன்ற உத்தரவுகள், ஆணையத்தின் உத்தரவுகள் என்று எதையும் மதிக்காமல் செயல்படும் கர்நாடகத்துக்கு அரசியல் ரீதியான அழுத்தம் தரவும் முன்வர வேண்டும். தமிழக விவசாயிகளின் துயர் துடைக்க அது ஒன்றுதான் வழி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in