இனியும் காலம் கடத்த வேண்டாம்!

இனியும் காலம் கடத்த வேண்டாம்!

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாய் சிறையிலிருக்கும் பேரறிவாளன், நளினி, முருகன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்வதற்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. இதன் மூலம் இந்த விவகாரத்தில் இருந்த கடைசி முட்டுக்கட்டையும் விலகியிருக்கிறது.

ராஜீவ் கொலை வழக்கில் கைதான இந்த ஏழுபேருக்கும் முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் அது ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. எனினும் 28 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கும் இவர்களை விடுவிக்கக் கோரி தமிழகத்தில் அரசியல் கட்சிகளும், வேறு சில இயக்கங்களும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன. தமிழக சட்டமன்றத்திலும் இது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே, ராஜீவ் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் தரப்பிலிருந்து எழுவர் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனால் தமிழக ஆளுநர் எவ்வித முடிவும் எடுக்காமல் இருந்தார். இதைத் தொடர்ந்து ஆளுநருக்கு எதிராகவும் விமர்சனங்கள் கிளம்பின. இந்த நிலையில் இப்போது, இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை ஆளுநரிடமே விட்டிருக்கிறது நீதிமன்றம்.

இதையடுத்து, இவ்விஷயத்தில் ஆளுநர் விரைவில் முடிவெடுக்க தமிழக அரசு மீண்டும் அழுத்தம் தர வேண்டும் என்று குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. தமிழக அரசியல் களத்தில் தொடர்ந்து பிரதானமாகப் பேசப்பட்டுவரும் இந்தப் பிரச்சினை இனியும் தொடர்வது தேவையற்றது. தமிழகத்தில் இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்யும் சூழலை இனியும் அனுமதிக்கக் கூடாது. அதற்கேற்ற வகையில் தமிழக ஆளுநர் இந்த விவகாரத்தை இனியும் காலம் கடத்தாமல் தெளிவான முடிவை விரைந்து எடுக்க வேண்டும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in