இனியும் சிந்திக்காமல் இருந்தால்..!

இனியும் சிந்திக்காமல் இருந்தால்..!

தமிழகத்தில் நீர்நிலைகளைப் பாதுகாக்கத் தவறினால் வருங்கால சந்ததியினர் தண்ணீரை கேப்சூல் வடிவிலும் பாட்டில்களிலும் மட்டும்தான் பார்க்க முடியும் என்று உயர் நீதிமன்றம் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறது.

கூடவே, மக்களின் வரிப்பணத்தை இலவச திட்டங்களுக்குப் பயன்படுத்துவதைத் தவிர்த்து புதிதாக அணைகள் கட்டுவது குறித்து அரசு சிந்திக்க வேண்டும் என்ற ஆக்கபூர்வமான ஆலோசனையையும் நீதியரசர்கள் வழங்கியிருக்கிறார்கள். கோடையில் தண்ணீர் பஞ்சம் என்ற நிலை மாறி இப்போது மழைக்காலத்திலேயே மக்கள் தண்ணீருக்கு அலையும் நிலை வந்துவிட்டது. மழை அளவு குறைந்து வருவதால் நிலத்தடி நீரும் வற்றிக்கொண்டே வருகிறது. அதையும் ராட்சத துளைகளைப் போட்டு ராப்பகலாய் உறிஞ்சிக்கொண்டே இருக்கிறோம். இதெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு நீடிக்கும் என்ற கேள்விக்கு யாருக்கும் விடை தெரியாது.

தண்ணீர் பஞ்சத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பது தெரிந்தும் நீர் நிலைகளைப் பாதுகாப்பதிலும் கிடைக்கும் நீரைச் சேமிப்பதிலும் நாம் இன்னும் மெத்தனமாகவே இருக்கிறோம். நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து நீதிமன்றம் இதுவரை எத்தனையோ உத்தரவுகளை வழங்கிவிட்டது. ஆனாலும் ஆக்கிரமிப்புகள் முற்றாக அகற்றப்படவில்லை. இதைவிட வேதனை என்னவென்றால், இப்போதெல்லாம் அரசு கட்டுமானங்களையே நீர் நிலைகளைத் தூர்த்துதான் எழுப்புகிறார்கள். இதையெல்லாம் நீதிமன்றம் பூதக்கண்ணாடி போட்டு பார்த்துக்கொண்டிருக்க முடியாது. நமக்குத்தான் அக்கறை வேண்டும்.

அணை கட்டக்கூடாது என அண்டை மாநிலத்தோடு சண்டை போடும் நாம் என்றைக்காவது நமக்காக அணை கட்ட யோசித்தோமா? இதையெல்லாம் இனியும் சிந்திக்காமல் இருந்தால், தமிழகம் இன்னொரு கேப்டவுன் ஆகிவிடும் என்பதுகூட மெய்யாகிவிடும்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in