இதிலும் அரசியல் ஆதாயம் தேடலாமா?

இதிலும் அரசியல் ஆதாயம் தேடலாமா?

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குலில் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் 40 பேரை பலி கொடுத்திருக்கிறோம். இரக்கமற்ற இந்தச் செயலுக்கு தமிழகமும் இரண்டு உயிர்களைக் காவு கொடுத்திருக்கிறது.

“இந்தத் தாக்குதலை மன்னிக்கவும் மாட்டோம்; மறக்கவும் மாட்டோம்.

தாக்குதலில் உயிர் தியாகம் செய்த எங்கள் வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறோம். அந்தச் சகோதரர்களின் குடும்பத்தினருக்கு நாங்கள் எப்போதும் ஆதரவாக இருப்போம்” என ஆறுதல் சொல்லியிருக்கிறது இந்திய உள்துறை அமைச்சகம். ஆனால், நாட்டையே துடிதுடிக்க வைத்திருக்கும் இந்தச் சம்பவத்தை வைத்தும் சிலர் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் வம்பு வளர்த்து அரசியல் செய்கிறார்கள்.

பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாய் இருக்கும் அந்தப் பகுதிக்கு இத்தனை கிலோ வெடிமருந்துகள் வந்தது எப்படி என்றெல்லாம் சந்தேகக் கேள்வி எழுப்புகிறார்கள். இந்தக் கேள்வியின் பின்புலத்தில் மலிவான வெறுப்பு அரசியல் மறைந்து கிடப்பது நன்றாகவே தெரிகிறது. இவர்கள் இப்படி என்றால், புல்வாமா தாக்குதலில் பலியான வீரரின் சவப்பெட்டியை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுமந்துவரும் படத்தை ஃபிளெக்ஸ் பேனர்களாக வீதிக்கு வீதி வைத்து இறந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறது பாஜக. 

தேசத்தைக் காக்கும் பணியில் தங்களின் இன்னுயிரையே தந்து சென்றிருக்கிறார்கள் நமது வீரர்கள். அந்தக் குடும்பங்களின் கண்ணீர் இன்னும் காயவில்லை. நெஞ்சு கனத்துக் கிடக்கும் இந்தத் தருணத்தில், நமக்காக உயிர் நீத்த அந்த வீரச் சிப்பாய்களின் தியாகத்தை போற்றி மதிப்பது மட்டுமே நாம் அவர்களுக்குச் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்க முடியும். அதைவிடுத்து, இதுபோன்ற அரசியல் ஆதாயம் தேடும் செயல்களில் ஈடுபடுவது எல்லையில் நிற்கும் நமது வீரர்களின் நெஞ்சுறுதியைக் குலைத்துவிடும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in