‘உக்ரைன் துறைமுகங்கள் முடங்குவது உலக அளவில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்!’

உலக நாடுகளிடம் உதவி கேட்கும் உக்ரைன் அதிபர்
‘உக்ரைன் துறைமுகங்கள் முடங்குவது உலக அளவில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும்!’

உக்ரைனின் ஒடெஸா நகர் மீது நேற்று ரஷ்யப் படைகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தின. ஒடெஸா கருங்கடல் பகுதியில் உள்ள முக்கியத் துறைமுக நகரம் என்பதால், இந்த நகரம் முடங்குவது உலக அளவில் உணவுப் பற்றாக்குறையை ஏற்படுத்தும் என உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி அச்சம் தெரிவித்திருக்கிறார்.

உக்ரைனின் தென்கிழக்கு நகரமான ஒடெஸா, அந்நாட்டில் அதிக மக்கள்தொகை கொண்ட மூன்றாவது நகரம். அங்கிருந்து உணவுப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கப்பல் மூலம் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கீவ், கார்கிவ் நகரங்களுக்கு அங்கிருந்து ரயில் போக்குவரத்து வசதியும் இருப்பதால் மிக முக்கியமான வணிக மையமாகவும் இருக்கிறது.

இந்நிலையில், நேற்று அந்நகரத்தில் உள்ள பல்பொருள் அங்காடி மீது ஏழு ஏவுகணைகளை ரஷ்யப் படைகள் ஏவின. இதில் சக்திவாய்ந்த ஹைப்பர்சோனிக் ஏவுகணைகளும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர். அந்நகருக்குத் திடீர் பயணமாகச் சென்றிருந்த ஐரோப்பிய கவுன்சில் தலைவர் சார்லஸ் மைக்கேல், நேற்று உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மைஹாலைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தார். அப்போது ஏவுகணைத் தாக்குதல்கள் நடந்ததால் அவர்கள் இருவரும் பாதுகாப்பான பாதாள அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு பேச்சுவார்த்தை தொடர்ந்தது.

இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஒடெஸா துறைமுகமும், மரியுபோல் துறைமுகம் போல முடங்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாகப் பேசியிருக்கும் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, “பல தசாப்தங்களுக்குப் பிறகு முதன்முறையாக ஒடெஸா துறைமுக நகரத்திலிருந்து வணிகக் கப்பல்கள் இயங்காத சூழல் ஏற்பட்டிருக்கிறது. துறைமுகத்தில் வழக்கமான பணிகள் நடைபெறவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஒடெஸாவில் இப்படி நிகழ்ந்ததே இல்லை என்றே சொல்ல வேண்டும். உக்ரைனின் வேளாண் விளைபொருட்கள் ஏற்றுமதி இல்லாததால் ஏற்கெனவே உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள நாடுகள் உணவுப் பற்றாக்குறை அபாயத்தை எதிர்கொண்டிருக்கின்றன. போகப்போக, சூழல் இன்னமும் பயங்கரமாக இருக்கும். இது ரஷ்ய ஆக்கிரமிப்பின் நேரடி விளைவு. அனைத்து ஐரோப்பிய நாடுகளும், சுதந்திரமான உலக நாடுகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நின்றால்தான் இதைக் கடந்துவர முடியும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Related Stories

No stories found.