ஸெலன்ஸ்கி கோரிக்கையும், நேட்டோவின் நிராகரிப்பும்

ஸெலன்ஸ்கி கோரிக்கையும், நேட்டோவின் நிராகரிப்பும்

தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி நேட்டோ கூட்டமைப்பிடம் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த நேட்டோ கூட்டமைப்பு, அவரது கோரிக்கையை ஏற்றால் போர் ஐரோப்பா முழுவதும் பரவும் நிலை ஏற்படும் என்று கூறியுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா 10-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இருதரப்பு மோதலில் நூற்றக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையே, தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரி நேட்டோ அமைப்பிடம் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி கோரிக்கை விடுத்தார்.

ஃப்ராங்க்ஃபர்ட், பாரிஸ், பிராக் உள்ளிட்ட ஐரோப்பிய நகரங்களில் நடந்த கூட்டங்களில் காணொலி முறையில் பங்கேற்று பேசிய உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி, உக்ரைன் மீது ரஷ்யப் படைகள் வான்வழி தாக்குதல் நடத்துவதை தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவரது கோரிக்கையை நேட்டோ நிராகரித்த நிலையில் ஸெலன்ஸ்கியின் இந்த கடும் விமர்சனம் வெளியாகியுள்ளது. தனது கோரிக்கையை நிராகரித்தது மூலம் உக்ரைன் மீது மேலும் குண்டு மழை பொழிய நேட்டோ அனுமதித்துள்ளதாக ஸெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். "தற்போதைய போரில் உக்ரைன் தாக்குப்பிடிக்காவிட்டால் பிற ஐரோப்பிய நாடுகளும் நிலைத்திருக்க முடியாத நிலை ஏற்படும்" என்று விமர்சனம் செய்தார்.

இதனிடையே, ஸெலன்ஸ்கியின் கோரிக்கையை ஏற்றால் போர் ஐரோப்பா முழுவதும் பரவும் நிலை ஏற்படும் என்பதால் அதை நிராகரித்ததாக நேட்டோ படைகளில் செயலாளர் ஸ்டால்டன்பர்க் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in