‘ஏற்றுமதியில் ரஷ்யா இடையூறு செய்யாது எனும் மாயை வேண்டாம்!'

உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி கருத்து
‘ஏற்றுமதியில் ரஷ்யா இடையூறு செய்யாது எனும் மாயை வேண்டாம்!'

ரஷ்யாவின் தாக்குதல் தொடங்கிய பின்னர் உக்ரைனிலிருந்து முதன்முறையாக உணவுதானியங்கள் அடங்கிய கப்பல் நேற்று காலை புறப்பட்டுச் சென்றது. சியரா லியோன் கொடி பொருத்தப்பட்ட ‘ரஸோனி’ கப்பல் 26,000 டன் சோளத்தைச் சுமந்துகொண்டு ஒடெஸா துறைமுகத்திலிருந்து லெபனானை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில், ஏற்றுமதியில் ரஷ்யா இடையூறு செய்யாது என மாயை கொண்டிருக்க வேண்டாம் என எச்சரித்திருக்கிறார் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி.

உலகிலேயே அதிக அளவில் உணவு தானிய ஏற்றுமதி செய்யும் நாடுகளில் உக்ரைன் பிரதானமானது என்பதால், அந்நாட்டின் மீதான ரஷ்யாவின் தாக்குதல் காரணமாகப் பல்வேறு நாடுகளில் பட்டினிச் சூழல் உருவாகலாம் எனும் அச்சம் எழுந்தது. இந்தச் சூழலில், துருக்கி, ஐநா ஆகியவற்றின் முன்னெடுப்பால் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையின் மூலம் ஒடெஸாவிலிருந்து மீண்டும் உணவுதானிய ஏற்றுமதி தொடங்கியிருக்கிறது. உக்ரைன் துறைமுகங்களில் முடங்கிக் கிடக்கும் கப்பல்கள் இனி உலக நாடுகளுக்கு உணவுதானியங்களைச் சுமந்தபடி பயணிக்கத் தொடங்கும் எனும் நம்பிக்கை உருவாகியிருக்கிறது. இந்த முடக்கத்துக்கு அடிப்படைக் காரணமான ரஷ்யாவும் இந்த நடவடிக்கை ஆக்கபூர்வமானது எனக் கருத்து தெரிவித்திருக்கிறது.

இந்நிலையில் நேற்று இரவு உக்ரைன் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின்போது, இந்த நகர்வைப் பெருமிதமாகச் சுட்டிக்காட்டியிருக்கிறார் அதிபர் ஸெலன்ஸ்கி.

“அடுத்து என்ன நடக்கும் முன்கூட்டியே எந்த முடிவுக்கும் வந்துவிட முடியாது. கொண்டாடவும் முடியாது. எனினும், துறைமுகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியிருக்கின்றன. ஏற்றுமதிக்கான பணிகள் நடந்துவருகின்றன. இது உலக அளவில் அதிகரித்துவரும் உணவு நெருக்கடியைத் தடுத்து நிறுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் ஆக்கபூர்வமான முதல் சமிக்ஞை” எனக் கூறியிருக்கிறார்.

அதேசமயம், “தொடர்ந்து பாதுகாப்பு அளிப்பதன் மூலம் ஏற்றுமதி தொடர்வதை உறுதிசெய்ய வேண்டியது ஐநா, துருக்கி மற்றும் பிற நட்பு நாடுகளின் பொறுப்பு. இதற்கான ஒப்பந்தம் முறையாகப் பின்பற்றப்படுகிறதா எனப் பார்க்க வேண்டும்” எனக் கூறியிருக்கும் ஸெலன்ஸி, “உக்ரைனின் ஏற்றுமதியில் ரஷ்யா இடையூறு செய்யாமல் விலகி நிற்கும் எனும் மாயை நாம் கொண்டிருக்க முடியாது” என்றும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in