‘கூடுதல் ஆயுதம் கொடுங்கள்’ - ஜி7 தலைவர்களிடம் வலியுறுத்தும் ஸெலன்ஸ்கி

‘கூடுதல் ஆயுதம் கொடுங்கள்’ - ஜி7 தலைவர்களிடம் வலியுறுத்தும் ஸெலன்ஸ்கி

ஜி7 மாநாடு இன்று ஜெர்மனியில் நடக்கவிருக்கும் நிலையில், கூடுதல் ஆயுதங்களை வழங்குமாறு அந்நாடுகளின் தலைவர்களிடம் கோரவிருக்கிறார் உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கி.

உலகின் வளமான ஏழு நாடுகளான அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், கனடா ஆகியவற்றின் அதிகாரபூர்வமற்ற கூட்டமைப்பான ஜி7 அமைப்பின் மாநாடு ஜெர்மனியின் பவேரியா மாநிலத்தின் பவேரியன் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் உள்ள ஸ்லோஸ் எல்மாவ் ஹோட்டலில் இன்று தொடங்குகிறது.

இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா, ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் உள்ளிட்ட தலைவர்களுடன், ஐநா, உலக சுகாதார நிறுவனம், உலக வர்த்தக அமைப்பு, பன்னாட்டு நாணய நிதியம், உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கின்றனர். இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு ஜெர்மனி பிரதமர் ஓலாஃப் ஷோல்ஸ் விடுத்த அழைப்பின்பேரில் பிரதமர் மோடி ஜெர்மனி சென்றிருக்கிறார். அர்ஜென்டினா, இந்தோனேசியா, செனகல், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் ஓலாஃப் அழைப்பு விடுத்திருந்தார்.

காணொலி வழியே, இந்தக் கூட்டத்தில் ஸெலன்ஸ்கி கலந்துகொள்கிறார். அப்போது ரஷ்யாவின் தாக்குதலைச் சமாளிக்க கூடுதல் ஆயுதங்களை வழங்குமாறு அவர் வலியுறுத்துவார் எனத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இதற்கிடையே, கீவ் நகர் மீது ரஷ்யா நேற்று நடத்தியிருக்கும் ஏவுகணைத் தாக்குதல் கூடுதல் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

நேற்று வெளியிட்ட காணொலிப் பதிவில் ரஷ்யா மீது கூடுதலாகப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று மேற்கத்திய நாடுகளுக்குக் கோரிக்கை விடுத்த ஸெலன்ஸ்கி, ரஷ்யத் தாக்குதலை எதிர்கொள்ள கூடுதல் ஆயுதங்களையும், விமான எதிர்ப்பு போர் தளவாடங்களையும் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். நட்பு நாடுகள் வெறுமனே பார்வையாளர்களாக இல்லாமல், துரிதமாகச் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். “உக்ரைனுக்கு ஆயுதம் வழங்குவதில் ஏற்படும் தாமதங்கள், மேலும் மேலும் தாக்குதல் நடத்த ரஷ்யாவுக்கு விடுக்கப்படும் அழைப்பு என்றே சொல்ல வேண்டும்” என்றும் கடுமையாகச் சாடியது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in