ரஷ்யாவுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்ட வாக்னர் தனியார் இராணுவத்தின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிகாரிகள் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர்.
ரஷ்யாவின் ட்வெர் பகுதியில் பயணிகளுடன் சென்ற விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதாகவும், அதில் 10 பேர் உயிரிழந்ததாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளியானது. இறந்த பயணிகளில் பிரிகோஜினும் ஒருவர் என்று ரஷ்ய விமானப் போக்குவரத்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
விமானம் மாஸ்கோவில் இருந்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நோக்கி பயணித்த போது இந்த விபத்து நடந்துள்ளது. இதில் 7 பயணிகள் மற்றும் 3 பணியாளர்கள் கொல்லப்பட்டனர். ஏழு பயணிகளில் தனியார் ராணுவமான வாக்னர் குழுமத்தின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜினும் ஒருவர் என செய்திகள் வெளியாகியுள்ளது. எவ்ஜெனி பிரிகோஜின் இறந்துவிட்டதாக அவரது வாக்னர் கூலிப்படை குழுவுடன் இணைந்த டெலிகிராம் சேனல் புதன்கிழமை செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் “வாக்னர் குழுமத்தின் தலைவர், ரஷ்யாவின் ஹீரோ, அவரது தாய்நாட்டின் உண்மையான தேசபக்தர் யெவ்ஜெனி விக்டோரோவிச் பிரிகோஜின் துரோகிகளின் (ரஷ்ய படை) செயல்களின் விளைவாக இறந்தார், ஆனால் நரகத்தில் கூட, அவர் சிறந்தவராக இருப்பார்! ரஷ்யாவிற்கு மகிமை!” என அந்த சேனல் பதிவிட்டுள்ளது. இதனால் ரஷ்யாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, ரஷ்ய ராணுவம் உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனுக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில் ரஷ்ய இராணுவத்துடன் வாக்னர் என்ற தனியார் இராணுவத்தின் தலைவரான பிரிகோஜினும் ஆதரவாக நின்றார்.
இருப்பினும், இந்த ஆண்டு ஜூன் மாதம், ப்ரிகோஜின் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு எதிராக கிளர்ச்சி செய்தார். அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த அவர், ரஷ்யாவின் ஜனாதிபதி பதவியில் இருந்து புடினை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
அதுவரை உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்கு துணை நின்ற பிரிகோஜின் திரும்பியபோது ரஷ்யாவின் நிலைமை கட்டுக்கடங்காமல் போனதுபோல் தோன்றியது. ஆனால் அவர் சட்டப் போராட்டம் நடத்துவதாகவும், அரசைக் கவிழ்ப்பது அவர்களின் நோக்கம் இல்லை என்றும் தெரியவந்ததால், ரஷ்ய அரசு நிம்மதிப் பெருமூச்சு விட்டது.
பெலாரஷ்ய அதிபர் லுகாஷென்கோ தலையிட்டு சரிசெய்தபிறகு, வாக்னரின் படைகள் ரஷ்ய அரசாங்கத்தின் மீது தாக்குதல் நடத்தவில்லை. பிரிகோஜின் தனது படைகளைத் திரும்பப் பெற்றார். இந்த நிலையில் அவர் விமான விபத்தில் உயிரிழந்திருப்பதன் பின்னால் ரஷ்யாவின் சதி இருக்கக் கூடும் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் ரஷ்யாவில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் தொடங்கலாம் என்று அஞ்சப்படுகிறது.