உலகின் மிகப்பெரும் எரிமலை: 38 ஆண்டு உறக்கம் இன்று கலைந்தது

உலகின் மிகப்பெரும் எரிமலை: 38 ஆண்டு உறக்கம் இன்று கலைந்தது

ஹவாய் தீவிலுள்ள உலகின் மிகப்பெரும் எரிமலை தனது உறக்கம் கலைந்து இன்று கண் விழித்திருக்கிறது. 38 ஆண்டுகள் இடைவெளியில் மீண்டும் வெடித்திருக்கும் எரிமலையின் சீற்றத்தை அமெரிக்கா தீவிரமாக கண்காணித்து வருகிறது.

அமெரிக்காவின் மேற்கே அதன் ஆளுகையில் உள்ள ஹவாய் தீவில் 6 எரிமலைகள் உயிரோடு இருக்கின்றன. ஆண்டுகள் இடைவெளியில் அவ்வப்போது வெடித்துச் சிதறுவதும் பின்னர் நீண்ட உறக்கத்தில் ஆழ்வதுமாக அவை தொடர்கின்றன. இவற்றில் மவுனா லாவோ என்ற எரிமலையே உலகின் மிகப்பெரும் எரிமலைகளில் ஒன்றாகவும், உயிரோடு இருப்பவற்றின் கணக்கிலும் சேர்கிறது.

ஞாயிறு முடிந்து திங்கள் பிறந்த சில நிமிடங்களில் மவுனா லாவோ எரிமலை மீண்டும் கண் விழித்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. மிகப்பெரும் வெடிப்பு மற்றும் எரிமலைக் குழப்பு வெளிப்பட்ட போதும், அவை எரிமலை வாயின் விளிம்புகளுக்கு உள்ளாக முடிந்திருக்கின்றன.

எரிமலை சுவர்களுக்கு வெளியே லாவா குழம்பு புலப்படாததால் அவை குறித்த அச்சுறுத்தல் தற்போதைக்கு இல்லை என்றும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் அப்பகுதியை நெருங்கும் சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. விரைவில் வான் வழி ஆய்வு வழியாக மவுனா லாவோ எரிமலை வெடிப்பின் முழு பரிமாணத்தை அமெரிக்கா ஆராய உள்ளது.

முன்னதாக 1984ஆம் ஆண்டில் சுமார் 22 முறைகள் மவுனா லாவோ எரிமலை தனது மவுனம் கலைந்திருக்கிறது. இதில் பலமுறை எரிமலைக் குழம்பு வெளியேறியதில் அப்பகுதியின் 7 கிமீ நீளத்துக்கு வழிந்தோடி ஹைலோ என்றழைக்கப்படும் நகர் வரை நீண்டிருந்தது. இந்த நகரில் தற்போது வாழும் சுமார் அரை லட்சம் மக்கள், மீண்டும் கண் விழித்திருக்கும் எரிமலை காரணமாக தூக்கம் தொலைத்திருக்கிறார்கள்.

1843ஆம் ஆண்டு முதல் தொடரும் ஆய்வின் அடிப்படையில் இதுவரை 33 முறை மவுனா லாவோ எரிமலை சீற்றம் கண்டிருப்பது தெரிய வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in