2030 முதல் ஆண்டுதோறும் 560 அழிவுகள்: அதிரவைக்கும் ஐநா அறிக்கை

பேரழிவுகள் மட்டுமல்ல பெருந்தொற்றுகளும் அதிகரிக்கும்
2030 முதல் ஆண்டுதோறும் 560 அழிவுகள்: அதிரவைக்கும் ஐநா அறிக்கை

பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை இப்போதே உலகம் நேரடியாக எதிர்கொண்டிருக்கும் நிலையில், இவ்விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலைமை இன்னும் மோசமடையும் என எச்சரித்திருக்கிறது ஐநா வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கை.

நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில், அதன் துணைப் பொதுச் செயலாளர் அமினா ஜே. முகமது வெளியிட்டிருக்கும் இந்த அறிக்கை பருவநிலை மாற்றத்தால் இதுவரை ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளைப் பதிவுசெய்திருப்பதுடன், இனி ஏற்படவிருக்கும் பாதிப்புகள் குறித்தும் எச்சரித்திருக்கிறது. பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், இந்த பாதிப்புகள் பல மடங்கு அதிகரிக்கும் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.

1970 முதல் 2000-ம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் உலகில் நிகழ்ந்த பேரழிவுகளின் எண்ணிக்கை, சராசரியாக 90 முதல் 100 ஆக இருந்தது. 2015-ல் இதன் உச்சமாக 400 பேரழிவுகளை இந்த உலகம் எதிர்கொண்டது. போகப்போக இந்த அபாயம் அதிகரிக்கும் என்பது நிச்சயம் என்கிறது அந்த அறிக்கை. காட்டுத் தீ, கடும் மழை வெள்ளம் போன்ற பேரிடர்களுடன் பெருந்தொற்றுகள், ரசாயன விபத்துகள் போன்றவையும் ஏற்படும் என்று அந்த அறிக்கை எச்சரிப்பது குறிப்பிடத்தக்கது.

அது மட்டுமல்ல, பேரழிவுகளின் கால அளவு, தீவிரம் போன்றவையும் முன்பைவிட அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் பொருளாதாரச் சரிவுகள், உணவுப் பற்றாக்குறை என சங்கிலித் தொடராக மேலும் பல விபரீதங்கள் ஏற்படும். அதீதமான வெப்ப அலை ஏற்படும் நிகழ்வுகள் 2001-ல் இருந்ததைவிட, 3 மடங்கு அதிகமாக 2030-ம் ஆண்டுவாக்கில் நிகழும். வறட்சியும் 30 மடங்கு அதிகரிக்கும்.

பருவநிலை மாற்றத்தின் விளைவாக ஏற்படும் பேரழிவுகள் குறித்த சரியான புரிதல் இல்லாமல், குறுகிய நோக்கம் கொண்ட முடிவுகளை மனிதர்கள் எடுப்பதையும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அதிகமாக இயற்கைப் பேரழிவுகள் ஏற்படும் பகுதிகளில் மக்கள்தொகை அதிகரித்துவருவதும், இழப்புகள் அதிகரிக்க இன்னொரு காரணமாகச் சொல்லப்படுகிறது.

இந்தப் பேரழிவுகள் ஏற்படுத்தும் செலவுகளும் எக்கச்சக்கம். இது தொடர்பாகச் செலவழிக்கப்படும் நிதியில் 90 சதவீதம் அவசரகால நிவாரண உதவிகளுக்கே சென்றுவிடுகிறது. 6 சதவீத நிதிதான் மறுகட்டமைப்புக்காகச் செலவிடப்படுகிறது. பேரழிவுகளைத் தடுப்பதற்கு 4 சதவீத நிதிதான் செலவிடப்படுகிறது என்பது இவ்விஷயத்தில் காட்டப்படும் அலட்சியத்தை உணர்த்துகிறது.

பேரழிவுகளால் 1990-ல் உலகம் முழுவதும் 70 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்ட நிலையில், அது தற்போது 170 பில்லியன் டாலராக அதிகரித்திருக்கிறது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் அபாயங்களையும், அவற்றை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளையும் உள்வாங்கினால்தான் இழப்புகளை ஓரளவுக்கேனும் தவிர்க்க முடியும். இல்லையென்றால், நமது எதிர்காலச் சந்ததியினருக்கு, பாதுகாப்பற்ற உலகத்தைத்தான் விட்டுச்செல்கிறோம் எனும் குற்றவுணர்வு நம்மைவிட்டு அகலவே அகலாது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in