இன்று உலக கருணை தினம்... வெறுப்பு கரையட்டும்; கருணை பொங்கட்டும்!

நவ.13; உலக கருணை தினம்
உலக கருணை தினம்
உலக கருணை தினம்
Updated on
2 min read

நடப்பு உலகில் மனிதர்கள் மத்தியில் தட்டுப்பாடாகி வரும், அவசியமான ஒன்றை வலியுறுத்துகிறது உலக கருணை தினம்.

சாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், நாடு என எத்தனையோ வேறுபாடுகள் மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் காலம் இது. முன்னெப்போதும் இல்லாத வகையில் சக மனிதரிடத்தில் வேறுபாடுகளை தேடித்தேடி அடையாளம் கண்டு வருகிறார்கள். அறிவியலில், நாகரீகத்தில், வாழ்க்கை தரத்தில் முந்தைய தலைமுறையினரை விட பல மடங்கு மேம்பட்டிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உள்ளத்தில் ஈரமின்றி, சக உயிர்கள் மீது வலிய வெறுப்பை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்.

உலக கருணை தினம்
உலக கருணை தினம்

இந்தியா போன்ற பன்மைத்துவம் வாய்ந்த தேசங்களில், அன்பும், சகிப்புத்தன்மையும் மிகவும் அவசியம். பலவகையிலும் அடிப்படையில் வேறுபட்டிருக்கும் மக்கள் மத்தியில் மேலும் வெறுப்பை வளர்த்து ஆதாயம் அடைவது இங்கே அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமன்றி, உலகம் நெடுகவும் வெறுப்பு மண்டிக் கிடப்பதோடு, அன்பு, கருணை உள்ளிட்டவற்றை பூதக் கண்ணாடியில் தேட வேண்டியதாகி வருகிற்து.

இந்த சூழலில் இன்று கொண்டாடப்படும் உலக கருணை தினம் முக்கியத்துவம் பெறுகிறது. அன்பும் பரிவும் கொண்ட உள்ளங்களில் கருணை அமுதமாய் சுரக்கும். அவதிப்படுவோரை எந்த எதிர்பார்ப்பும் இன்றி அரவணைத்து காக்க முயற்சிக்கும்.

உலகம் முழுக்க பிரிவினைவாதமும், வெறுப்புணர்வும் அதிகரித்து வருவதன் மத்தியில், இன்னொரு உலகப்போருக்கு வித்திடும் பிராந்தியப் போர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. ரஷ்யாவால் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உருக்குலையும் உக்ரைன், இஸ்ரேலால் ஒரு மாதத்துக்கும் மேலாக சீரழியும் காசா உள்ளிட்டவை நிதர்சன உதாரணங்கள்.

உலக கருணை தினம்
உலக கருணை தினம்

மக்கள் மனத்தில் அன்பும், கருணையும் வறண்டு போவதை உணர்ந்தே, 25 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான கருணை இயக்கம், உலக கருணை தினத்தை உருவாக்கி சர்வதேச அளவில் அதனை கொண்டாடச் செய்தது. 90களின் மத்தியில் உதயமான இந்த இயக்கம், 1997ல் டோக்கியோவில் கூடி முக்கிய முடிவுகளை எட்டியது.

அதன்படி 1998 முதல் வருடந்தோறும் நவ.13 அன்று உலக கருணை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2008க்குள் பல நாடுகளில் கருணை தினம் அனுசரிக்கப்படுவ்து அதிகரித்தது. தற்போது கிட்டத்தட்ட உலகம் முழுவதிலும், இளம் பிராயத்தினர் மத்தியில், அவர்கள் அதிகம் அறிந்திராத கருணையின் மதிப்பை விளக்க இப்போதைய அவகாசம் அவசியமாகிறது.

கொரோனா காலத்தில் தங்கள் உயிரை துச்சமென மதித்து, நோயாளிகளின் உயிரை காத்த மருத்துவர்கள் மற்றும் தாதிகளின் கருணை போற்றத்தக்கது. உள்ளத்தில் கருணை பிரவாகமாய் பொங்கி வழிந்தோட, தொழு நோயாளிகளை பராமரித்த அன்னை தெரசாவாகவோ, வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் ஆகவோ நம்மால் முடியாது போகலாம்.

உலக கருணை தினம்
உலக கருணை தினம்

ஆனால் அடுத்தவருக்கு கெடுதல் விளைவிக்காதும், துன்பம் தராதும், வயிறு எரியாதும், இன்னும் பல இம்சைகள் தராதும் கடந்துசெல்ல கற்றுக்கொள்ளலாம். இந்த உலகம் அழிவிலிருந்து தன்னைக் காத்துக்கொள்ளவும், நமது சந்ததியினருக்கு மீந்திருக்கவும் கருணை அவசியமாகிறது.

காசா, பணமா... கருணை காட்டுவோம்; வெறுப்பை வளர்க்காதிருப்போம். வெறுப்புக்கான வாய்ப்புகளை புறக்கணிப்போம். உலகை அதன் அழிவிலிருந்து கருணை நிச்சயம் காக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in