போர், கலகம், பொருளாதார ஏற்றத்தாழ்வு: உலகம் எங்கே செல்கிறது?

போர், கலகம், பொருளாதார ஏற்றத்தாழ்வு: உலகம் எங்கே செல்கிறது?

அனைத்து நாடுகளும் சமமாகவும் தொடர்ச்சியாகவும் தொழில்வளம் காண வேண்டுமென்றால் அதற்கேற்ப கொள்கைகள் அமைய வேண்டும். வளர்ந்த நாடுகளைப் பொறுத்தவரை தங்களுக்குச் சந்தை தேவைப்படும்போது தாராளமயம், உலகமயம் ஆகிய கொள்கைகளைப் பேசும். தங்களுடைய நாட்டுத் தொழில்களுக்குப் போட்டி அதிகரித்துவிட்டது அல்லது உள்நாட்டில் வேலைவாய்ப்புகள் குறைந்துவிட்டன என்றால் சுதேசத் தொழில்காப்புக் கொள்கையை கடைப்பிடிக்கத் தொடங்கும். அமெரிக்காவின் முந்தைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இதை வெளிப்படையாகவே செய்தார். அவருடைய ஆட்சிக்குப் பிறகும் அந்தப் போக்கு மறையவில்லை.

பொருளாதாரத் தடைகளின் விளைவுகள்

வடக்கு அட்லான்டிக் ஒப்பந்த நாடுகள் (நேட்டோ) கூட்டமைப்பு என்பது மேற்கத்திய நாடுகளின் ராணுவப் பாதுகாப்பை மையமாகக் கொண்டது. ஆனால் அது எடுக்கும் முடிவுகள் அரசியல், பொருளாதார, சமுதாயக் களங்களில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றன. உக்ரைன் மீது ரஷ்யா எடுத்த ராணுவ நடவடிக்கையைக் கண்டிக்க, ரஷ்யா மீது பொருளாதாரத் தடை (தண்டனை) நடவடிக்கைகளை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அறிவித்தது. ரஷ்யாவின் பொருளாதார வலுவை முறிப்பதாக நினைத்துக்கொண்டு, கச்சா பெட்ரோலிய எண்ணெய்யையும் இயற்கை எரிவாயுவையும் விற்பதைத் தடுக்க, அவ்விரண்டையும் எந்த நாடும் ரஷ்யாவிடமிருந்து வாங்கக் கூடாது என்று அறிவித்தது. உலகின் இன்றைய நிலை என்ன என்பது தெரிந்தும், தீவிரச் சிந்தனை இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் ரஷ்யாவுக்கு விளைந்த பாதிப்புகளைவிட நேட்டோ அமைப்பில் இருக்கும் நாடுகளுக்கும் இவ்விரண்டுக்கும் தொடர்பே இல்லாத பிற நாடுகளுக்கும் பெரிய இன்னல்கள் ஏற்பட்டிருக்கின்றன. எல்லா நாடுகளும் துயரப்பட வேண்டும் என்பது நோக்கமாக இருந்திருக்காது என்றாலும், இப்படிச் செய்தால் என்னவாகும் என்பதைச் சிந்திக்கக்கூட நேரம் இல்லாமல் அங்கே பெரிய நெருக்கடி ஏற்பட்டுவிடவில்லை.

உக்ரைன் போர் தொடங்கி இப்போது கிட்டத்தட்ட 120 நாட்கள் அதாவது சுமார் நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. இந்தப் போர் இப்போதைக்கு ஓயாது; ஆண்டுக்கணக்கில் தொடரும் என்று உலக அமைப்புகளைச் சேர்ந்தவர்களே பேசத் தொடங்கிவிட்டனர். அப்படியானால் அவசர கதியில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு யார் பொறுப்பு?

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக உலகப் பொருளாதாரமே கிட்டத்தட்ட நிலைகுத்தி நின்று இப்போதுதான் லேசாக நகர ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில் நம்முடைய தடை நடவடிக்கைகள் யாரை அதிகம் பாதிக்கும் என்பதைக்கூட கணிக்காமல்தான் இப்படி முடிவெடுத்தார்களா?

ஐக்கிய நாடுகள் சபை, அதன் பாதுகாப்புப் பேரவை என்ற அமைப்புகள் எல்லாம் வல்லரசுகளைக் கட்டுப்படுத்த முடியாமல் பல் இல்லாத சிங்கங்களாகவே திணறுகின்றன. சீனா, ரஷ்யாவைக் கட்டுப்படுத்த முடியாமல் அந்த அமைப்புகள் அடிக்கடி தவறுகின்றன. இப்போது ரஷ்யாவிடமிருந்து கச்சா பெட்ரோலிய எண்ணெய்யை சீனா வாங்குகிறது. அதிக அளவில் விலை மலிவாக வாங்கத் தொடங்கியிருக்கிறது. உலக அளவில் பெட்ரோலிய எண்ணெய் உற்பத்தியைக் கட்டுப்படுத்தியும் விலையை உயர்த்தியும் பெட்ரோலிய உற்பத்தி-ஏற்றுமதி நாடுகள் (ஒபெக்) தொடர்ந்து லாபம் பெற முயற்சிக்கின்றன. இந்த நிலையில் சர்வதேச அணுவிசை முகமையின் நிபந்தனைகளை மதிக்கவில்லை என்று கூறி ஈரானின் கச்சா பெட்ரோலிய எண்ணெய் விற்பனைக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது. அந்தத் தடையும் முழுமையாக விலகவில்லை, அதன் கோரிக்கையும் பரிசீலிக்கப்படவில்லை. வெனிசூலா நாட்டின் எண்ணெய் உற்பத்திக்கும் இதே போல கட்டுப்பாடுகள் அமெரிக்காவால் விதிக்கப்பட்டன.

ஆணைகளுக்கு நிகரான நிபந்தனைகள்

இதற்கிடையில் புவி வெப்பம் அடைவது குறித்து கவலைப்பட்டு அனைத்து நாடுகளும் புதைபடிம எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும், புதுப்பிக்கக் கூடிய எரிபொருள் உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டும் என்று கிட்டத்தட்ட ஆணையைப் போலவே நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. உலகம் முழுவதுமே நிலக்கரி, பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயுவைத்தான் எரிபொருளாகப் பயன்படுத்துகிறது. சூரியஒளி வெப்பத்திலிருந்து மின்சாரம், காற்றாலைகள் மூலம் மின்சாரம், கடல் அலைகள் மூலம் மின்சாரம், ஹைட்ரஜனை மாற்று எரிபொருளாகப் பயன்படுத்துவது போன்றவை பெரிய நாடுகளிலேயே முக்கிய இடம்பிடித்துவிடவில்லை. வளரும் நாடுகளுக்கு இவற்றுக்குத் தொழில் நுட்பமும் கோடிக்கணக்கில் முதலீடும் தேவை. இதைச் செய்யாமல் நிபந்தனைகளை மட்டும் விதிப்பதால் புவி குளிர்ந்துவிடுமா?

அமெரிக்காவின் அவல நிலை

உலகின் வலுவான ஜனநாயக நாடு என்று விதந்தோதப்படும் அமெரிக்காவில் பள்ளிக் கூடங்களிலும் தேவாலயங்களிலும் விடுதிகளிலும் யாராவது ஒருவர் திடீரென துப்பாக்கியுடன் வெளிப்பட்டு, கண்ணில் பட்டவர்களைச் சகட்டு மேனிக்குச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றுவிடுகிறார். துப்பாக்கி விற்பனையையும் உரிமம் வழங்குவதையும் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவ்வப்போது கூக்குரல்களும் எழுகின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்களே துப்பாக்கி நிறுவனங்களுக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பேசுகின்றனர், செயல்படுகின்றனர். எளிய மக்களுடைய உயிர்களுக்கு உத்தரவாதம் இல்லாத நிலை அங்கே காணப்படுகிறது. ஆனால் நாட்டின் அதிபரால்கூட தனது உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக அதைத் தடுக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் இதர நாடுகளுக்கு புவி வெப்பம் முதல், மனித உரிமைகள் பாதுகாப்பு வரையில் இதோபதேசம் தொடர்கிறது.

மக்களாட்சி நடைபெறும் நாடு என்றாலும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொத்து கொத்தாகப் பல தொழில் நிறுவனங்கள் விலைக்கு வாங்கியிருப்பதாலேயே இத்தகைய சட்டங்கள் வருவதுகூட எளிதாக இல்லை. மருந்து-மாத்திரை விற்பனை நிறுவனங்கள், துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை விற்கும் நிறுவனங்கள், புகையிலைப் பொருள்களை விற்கும் நிறுவனங்கள், மதுபான நிறுவனங்கள் என்று ஒவ்வொன்றும் மறைமுகமாக அரசியலில் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஜனநாயகம் இப்படி அலைக்கழிக்கப்படும் நிலையில்தான் உலக வர்த்தக முறைமை பற்றியும் பேசப்படுகிறது.

வலியோரால் வஞ்சிக்கப்படும் எளியோர்

எல்லா ஜனநாயக நாடுகளிலும் நாடாளுமன்றம், எழுதப்பட்ட அரசியல் சட்டம், நீதித் துறை என்று எல்லா அம்சங்களும் இருந்தாலும் வலியவர்கள் தங்களுக்கு வேண்டியதை எளிதாகப் பெறுவதும் மெலியவர்கள் வாடுவதும் வழக்கமாக இருக்கிறது. முதலாளித்துவ நாடுகளில்தான் என்றில்லை சோஷலிசத்தைக் கடைப்பிடிப்பதாகக் கூறும் நாடுகளிலும் இதுlதான் நிலைமை. ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதுமே உள்நாட்டுப் பூசல்களாலும் கலவரங்களாலும் அலைக்கழிக்கப்படுகிறது. மத்திய கிழக்கிலும் தென்னமெரிக்கக் கண்ட நாடுகளிலும் ஆங்காங்கே அமைதியின்மையும் அகதிகள் இடப் பெயர்ச்சியும் தொடர்ச்சியாக நடக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்த பிறகு அந்த நாட்டில் பஞ்சமும் பட்டினியும் தலைவிரித்தாடுகிறது. உலகில் இப்போது 10 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் சொந்த நாட்டைவிட்டு மொழி புரியாத, உயிருக்குப் பாதுகாப்பில்லாத வேற்று நாடுகளில் தஞ்சம் புகுந்து ஒருவேளை சாப்பாட்டுக்குக் கையேந்துகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையால் இதைத் தடுக்க முடியவில்லை. தவறு செய்யும் நாடுகளையும் ராணுவ ஆட்சியாளர்களையும் சர்வாதிகாரிகளையும் கட்டுப்படுத்த முடியவில்லை.

முதலாளித்துவத்தைக் கடைப்பிடிக்கும் மேற்கத்திய நாடுகள் ஒரு காலத்தில் பிற நாடுகளின் நிலப்பரப்பை ராணுவ பலத்தால் கைப்பற்றி அந்த நாட்டு இயற்கை வளங்களையும் மூலப் பொருள்களையும் கொள்ளை அடித்ததுடன் மக்களையும் கூலி அடிமைகளாக்கி புலம்பெயரவைத்து வேரற்ற மரங்களாக சிதைத்துத் தள்ளின. தங்களுடைய வல்லாதிக்கத்தை இப்போது வேறு விதமாகக் கடைப்பிடித்து அதே போல பிற நாடுகளை தங்களுடைய பண்டங்களுக்கான சந்தைகளாக மட்டும் பயன்படுத்துகின்றன. இந்த அசமத்துவம் நீடிக்கும் வரையில் உலகம் அமைதியான நிலைக்குத் திரும்பாது. எந்த நாட்டு அகதிகளோ, எங்கோ போகிறார்கள் என்றே உலகின் பெரும்பாலான நாடுகள் அக்கறைப்படாமல் இருக்கின்றன. இது நாளை தங்களுடைய நாட்டுக்கே வரும், தங்கள் நாட்டு மக்களும் அகதிகளாக வெளியேற நேரும் அல்லது பக்கத்து நாட்டு அகதிகள் தங்கள் நாட்டுக் கதவுகளைத் தட்டி அதன் மூலம் மிகப் பெரிய சமூக பதற்றத்தை ஏற்படுத்துவார்கள் என்ற கவலையே இல்லாமல் இருக்கின்றன.

கவலைப்படாத உலகம்

உலகின் இப்போதைய முக்கியத் தேவை எல்லா நாடுகளிலும் முழுமையாகப் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். உள்நாட்டுப் போரில் இடம் பெயர்ந்த மக்கள் சொந்த மண்ணுக்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும். பெண்களும் குழந்தைகளும் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும். அவர்களும் முதியவர்களும் மருத்துவ உதவி பெற வேண்டும். அகதிகளாகச் சென்றவர்கள் உணவு, உடை, இருப்பிட வசதிகளை பெற வேண்டும். இந்த நோக்கம்தான் உலகுக்கு இருக்க வேண்டும்.

அதற்கு மாறாக, அணு ஆயுதங்களை அதிகம் தயாரித்துக் கைவசம் வைத்துக் கொள்வதற்கும் தங்களுடைய ராணுவக் கூட்டை மேலும் பல நாடுகளை உறுப்பினர்களாக்கி வலுப்படுத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. போதைப் பொருள் சாகுபடியும் கடத்தலும் உலகின் பல நாடுகளில் கட்டுப்பாடில்லாமல் வளர்வதைப் பற்றி உலகம் கவலைப்படவில்லை. செயற்கை நுண்ணறிவு, இயந்திர மனிதர்கள் மூலமான உற்பத்தி ஆகியவற்றுக்கே பெருந் தொழில்நிறுவனங்கள் முக்கியத்துவம் தருகின்றன. கல்வி என்பது மனிதநேயக் கல்வியாக இல்லாமல் பணம் சம்பாதிக்கும் ஆற்றலை வளர்க்கும் கல்வியாக, முதலாளித்துவத்தின் உற்பத்தி சார் நோக்கங்களுக்கு ஏற்ற கல்வியாகப் போட்டி போட்டு மாற்றப்படுகின்றன. கீழை நாடுகளின் பாரம்பரிய கலாச்சாரமும் உலகைப் பற்றிய தெளிவும் எள்ளி நகையாடப்படுகிறது. மெய்நிகர் உலகமே இப்போது கைக்கெட்டிய சொர்க்கமாகிக் கொண்டிருக்கிறது.

உலக வர்த்தக அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புப் பேரவை என்ற அமைப்புகள் அனைத்தும் அலங்கார அமைப்புகளாகிவிட்டன. பெருந்தொழில் நாடுகள் தரும் சந்தாவில் அவற்றின் ஆயுள் இருப்பதால், அந்த நாடுகளுக்கு எதிராக அவற்றால் எதையும் செய்ய முடியவில்லை. லட்சக்கணக்கில் மக்களைக் கொல்லும் கொள்ளை நோயே எதிர்ப்பட்டாலும் தடுப்பூசியைத் தயாரிக்கும் நிறுவனத்துக்கே காப்புரிமை, உலகச் சந்தையும் அதற்கே என்ற வியாபார உத்தரவாதங்களே முக்கியத்துவம் பெறுகின்றன. உலகம் இதை உணர்ந்து தவறை திருத்திக்கொள்வது நல்லது.

உலக நாடுகளுக்கே பொதுவான கடல்கள் கூட ஏரிகளைப் போல ஆக்கிரமிக்கப்பட்டு வல்லரசுகளால் பட்டா போடப்படுகின்றன. தகவல் தொழில்நுட்பப் புரட்சி, கணினித் துறையில் மேம்பாடு, செயற்கை நுண்ணறிவு போன்ற நவீன முன்னேற்றங்களுடன் உலகம் காட்டுமிராண்டி காலத்தைவிட மோசமான அழிவுநிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது. காப்பாற்றத்தான் யாரும் அக்கறையுடன் முன்வருவதில்லை!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in