சுற்றுச்சூழல் பாதிப்புகள்: பாடம் கற்றுக்கொள்வது எப்போது?

சுற்றுச்சூழல் பாதிப்புகள்: பாடம் கற்றுக்கொள்வது எப்போது?
கோப்புப் படம்

ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 5- ம் தேதியை உலக சுற்றுச்சூழல் தினமாகக் கடைப்பிடிக்கிறது ஐநா சபை.1974-ல் இது பிரகடனப்படுத்தப்பட்டு தற்போது வரை இந்த தினம் உலகம் முழுக்க கடைப்பிடிக்கப்படுகிறது.

மனிதன் வாழும் இப்பிரபஞ்சம் அதன் இயல்பான நிலையிலிருந்து இயல்பற்ற நிலையை நோக்கி நகர்ந்து வருகிறது. மனிதன் அதை இன்னமும் சரியாக உணர்ந்துகொள்ளாத சூழலே நிலவுகிறது. பஞ்சபூதங்களும், தாவர விலங்குகளும் ஒன்றை ஒன்று எப்போதும் தொடர்புறும் நிலையில் அவற்றில் ஏதேனும் ஒன்றில் ஏற்படும் சிறு சேதாரம் பூமியை பலவீனப்படுத்துகிறது. அவை எப்போதும் சமநிலையைக் கோருபவை. மேலும் தனிமனித மற்றும் கூட்டு நடவடிக்கைகள் சுற்றுச்சூழலைக் கேடாக்கி அந்தரத்தில் ஓசோன் படலத்தில் ஓட்டை விழச்செய்கிறது. இதுவே பிரபஞ்சத்தின் இயல்பான பருவநிலை போக்கைத் தடம் புரளச் செய்து பருவநிலை மாற்றத்திற்கு (Climate Change) வழிவகுத்தது.

20-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் உலகம் தன்னைச் சுற்றிய இயற்கை பாதிப்பு அடைகிறது என்பதைப் புரிந்துகொள்ள தொடங்கியது. இரண்டாம் உலகப் போரில் ஐப்பானுக்கு எதிராக அணுகுண்டுகள் பயன்படுத்தப்பட்டதும், உலகின் பல பகுதிகளில் அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட விபத்துகள், வரைமுறைப்படுத்தப்படாத, அளவற்ற செயல்பாடுகள் கொண்ட தொழிற்சாலைகள் இவை அனைத்தும் மனித சமூகத்தை இயற்கையை நோக்கி சிந்திக்கத் தூண்டின. இதன் தொடர்ச்சியில் இயற்கை சார்ந்து ஆர்வமும், அக்கறையும், கவலையும் கொண்ட உலக தலைவர்கள் 1972-ல் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் கூடி விவாதித்தார்கள்.. இந்தியா சார்பில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி கலந்துகொண்டார். அந்தக் கூட்டத்தில் அவர் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்தது. பலராலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது. அதில் உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் மாசுபாடு என்பது வறுமை என்றார் இந்திரா காந்தி. அவரது உரை உலக அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து ஐநா சுற்றுச்சூழல் திட்டம் (United Nations Environmental Programme) உருவாக்கப்பட்டது மேலும் இந்திராவின் உரைக்குப் பிறகு சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கும் – வறுமைக்குமான தொடர்பு பற்றிய ஆய்வுகள் வெளிவரத் தொடங்கின. அதுவரை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இல்லாத நாடுகளிலும் இது குறித்த விழிப்புணர்வு ஏற்பட அந்த மாநாடு உதவியாக இருந்தது. இதன் காரணமாக பல உலக நாடுகள் தங்கள் பிரதேசத்தில் சுற்றுச்சூழல் சார்ந்து அமைப்புகளை ஏற்படுத்தி சட்ட நடவடிக்கைகளை எடுக்க ஆரம்பித்தன. அதன் மூலம் அந்நாடுகள் பிராந்தியத்தில் சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கின.

அதே காலத்தில் அமெரிக்காவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை (Environmental Protection Agency) ஏற்படுத்தப்பட்டது. அதன் நீட்சியில் இந்தியாவிலும் சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து நீர் மாசுபாடு தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் காற்று மாசுபாடு தடுப்புச் சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் 1974-ல் மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் அமைக்கப்பட்டது. இதன் பிறகுதான் இந்தியாவில் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வே ஏற்பட்டது, அதே காலத்தில் உத்தராகண்ட் மாநிலத்தில் அரசாங்கம் சாலையோர மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிப்கோ இயக்கம் தொடங்கப்பட்டு மரம் வெட்டுதலுக்கு எதிராகத் தீவிரமாகச் செயல்பட்டது. அம்மாநிலத்தில் இமய மலை அடிவாரத்தில் காடுகள் அழிக்கப்படுவதற்கு எதிரான இயக்கமாக இருந்தது அது. பிரபல காந்தியவாதி சுந்தர்லால் பகுகுணா தலைமையில் பெரும்பாலும் பெண்கள் கலந்துகொண்ட அந்தப் போராட்டமானது மரங்கள் வெட்டப்படுவதற்கு எதிரான வீரியமிக்க போராட்டமாக இருந்தது. அதன் மூலம் இமயமலை காடுகள் காப்பாற்றப்பட்டன. பின்னர் இதுவே இந்தியாவின் பிற பகுதிகளில் சுற்றுச்சூழல் இயக்கங்கள் உருவாகவும், வலுப்பெறவும் முன்னோடியாக இருந்தது.

பருவநிலை மாற்றம் என்பது உலக அளவில் 50-களுக்குப் பின்னர்தான் கவனம் பெற்றது. காலனிய நாடுகள் எல்லாம் அப்போதுதான் விடுதலை பெற்றன. அதன் தொடர்ச்சியில் அந்நாடுகளில் தொழில் துறை வளர்ந்தது. திட்டமிடாத, வரைமுறையற்ற வளர்ச்சி என்பது அந்நாடுகளைச் சுற்றுச்சூழல் சீர்கேட்டை நோக்கி அழைத்துச் சென்றது. அதனால் அங்கு இயல்பாக இருந்த இயற்கையின் கூறுகள் சிதைவுறுதலை நோக்கிச் சென்றன. அங்கெல்லாம் கார்பனின் அளவு அதிகமானது. இந்நிலையில் அது புவி வெப்பமயமாதலை நோக்கி நகர்த்தியது. பூமியின் வெப்பநிலை சராசரி 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்தது. தொடர்ச்சியான ஆய்வின்படி இந்த கார்பன் அதிகரிப்பிற்கு 50 சதவீதம் தொழிற்சாலைகளே காரணமாக இருந்தன. இருக்கின்றன. மேலும் வாகனப் போக்குவரத்து என்பது 40 சதவீதம் காரணமாக இருக்கிறது. மீதம் தனிமனித நடவடிக்கைகள் காரணமாக இருக்கின்றன.

மேலும் இந்த மூன்று மாசுபாட்டு காரணிகளும் அதிகப்படியான பசுங்குடில் வாயு (Green House Gaseous Emission) வெளியேற்றத்துக்குக் காரணமாக அமைகின்றன. அதாவது கார்பன் மோனோக்சைடு, மீத்தேன், சல்பர் டை ஆக்சைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியவற்றை உள்ளடக்கிய கலவையாகும். இந்நிலையில் தற்போதைய சூழலில் உலகில் முதல் 10 பசுங்குடில் வாயு வெளியேற்ற நாடுகளின் பட்டியல் பின்வருமாறு:

வருடாந்திர கார்பன் வெளியேற்றமும், உலக அளவில் வாயு வெளியேற்ற பங்களிப்பும்....

சீனா: 10064.69 டன் 27.52 சதவீதம்

அமெரிக்கா: 5416.28 டன் 14.81 சதவீதம்

இந்தியா: 2654.10 டன் 7.26 சதவீதம்

ரஷ்யா: 1710.69 டன் 4.68 சதவீதம்

ஜப்பான்: 1161.98 டன் 3.18 சதவீதம்

ஜெர்மனி: 759.00 டன் 2.08 சதவீதம்

ஈரான்: 720.41 டன் 1.97 சதவீதம்

தென் கொரியா: 658.79 டன் 1.80 சதவீதம்

சவுதி அரேபியா: 621.30 டன் 1.70 சதவீதம்

இந்தோனேசியா: 614.92 டன் 1.68 சதவீதம்

இந்தப் பட்டியலில், உலகுக்கு அறிவுரை சொல்லும் முதலாளித்துவ வல்லரசான அமெரிக்காதான் முதலிடம் வகிக்கிறது. இரண்டாம் இடத்தில் சீனாவும், மூன்றாம் இடத்தில் இந்தியாவும் இருக்கின்றன. இதன் மூலம் மேற்கண்ட மூன்று நாடுகளுக்கும் தங்களின் கார்பன் வெளியேற்ற அளவைக் குறைக்கும் நிர்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இது உடனடியாக ஏற்பட்ட மாற்றம் அல்ல. மாறாக தொடர்ச்சியான வளர்ச்சி மற்றும் உட்கட்டமைப்பு சார்ந்த மாற்றங்கள் மற்றும் தொழிற்சாலைகள் சார்ந்த மாற்றங்கள் ஆகியவை ஒருபுறம் இருக்க, மறுபுறம் தொடர்ச்சியான காடுகள் அழிப்பும், அதி தீவிர வனவிலங்குகள் வேட்டையாடலும் இங்கு பெருமளவு இயற்கை சமநிலையைக் குலைத்து, கார்பன் அதிகரிப்பிற்குக் காரணமாயின. மேலும் உலக அளவில் வரலாற்றில் எவ்வாறு வன விலங்குகள் அதிக அளவில் வேட்டையாடப்பட்டன என்பதை ரசேல் கார்சனின் சைலன்ட் ஸ்பிரிங் (Silent Spring) என்ற நூல் விவரிக்கிறது.

மேலும் உலக வரலாற்றில் மனிதன் எவ்வாறு தன்னைச் சுற்றியுள்ள இயற்கையுடன் தொடர்புறுகிறான், அதை எப்படி அழிக்கிறான் என்பதையும் இந்நூல் குறிப்பிடுகிறது. இதன் தொடர்ச்சியில் வேதிப்பொருட்கள் எப்படி மனிதனின் அன்றாட நடவடிக்கைகளுடன் கலந்தன என்பதையும் பற்றி விரிவாக ஆராய்கிறார் ரசேல். மேலும் விதவிதமான உயிர்க்கொல்லி ரசாயனங்கள் தாவர, விலங்குகளை அழித்தன, அது எவ்வாறு இயற்கையை பாதித்தது என்பதையும் நீட்சியாக விவரிக்கிறார். 1962-ல் வெளிவந்த இந்த நூலானது இயற்கை அழிப்பு பற்றியும், சுற்றுச்சூழல் பாதிப்புகள் பற்றியும் அப்போதே உலகிற்கு எடுத்துரைத்தது.

சுற்றுச்சூழல் பாதிப்பின் தொடர்ச்சியாக ஓசோன் சிதைவுறுதலும் பெருமளவு நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை நில மட்டத்தில் ஏற்படும் ஓசோன் பாதிப்புகள் விவசாயத்தைப் பெருமளவில் பாதிக்கின்றன. இதன் காரணமாக இந்தியாவின் முக்கிய உணவுப் பயிரான கோதுமை விளைச்சல் 3.5 மில்லியன் டன் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் அரிசி உற்பத்தியானது 2.1 மில்லியன் டன் பாதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் வணிகப் பயிரான பருத்தி 3.3 மில்லியன் டன் பாதிக்கப்பட்டிருக்கிறது. 2005-ல் நடந்த ஆய்வின் முடிவானது மேற்கண்டவாறு தெரிவிக்கிறது.

இதற்கு அளவற்ற கார்பன் வெளியேற்றத்தின் காரணமாக ஏற்படும் ஓசோன் பாதிப்பே பிரதான காரணம். ஓசோன் படல ஓட்டை என்பது வெறுமனே புவி வெப்பத்தை அதிகரிக்காமல் பூமியிலுள்ள தாவரங்களையும் விலங்குகளையும் அதிக அளவில் பாதிக்கின்றன. மனிதனுக்குப் பல்வேறு வகையான நோய்கள் ஏற்படவும் இது காரணமாக அமைகிறது. சமீபத்தில் நடந்த பருவநிலை மாற்றத்திற்கான கிளாஸ்கோ மாநாட்டிலும் இது பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது. உலகின் ஒவ்வொரு நாடும் குறிப்பிட்ட கால இலக்கில் தங்கள் நாடுகளில் கார்பன் வெளியேற்ற அளவைக் குறைக்க அம்மாநாட்டில் உறுதியளித்தன. இது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அதிகரிப்பு, நிலை எரிபொருட்களைக் குறைத்தல், குறிப்பாக மின் உற்பத்தியில் நிலக்கரி பயன்பாட்டைப் படிப்படியாகக் குறைத்தல், காடுகளின் பரப்பை அதிகரித்தல் போன்றவற்றைச் செயல்திட்டங்களாக அறிவித்தன. இது சரியாக, திட்டமிட்டப்படி நேர்கோட்டில் செயல்படுத்தப்படுமானால் அடுத்த 50 ஆண்டுகளில் உலக அளவில் கார்பன் வெளியேற்ற அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஜீரோ கார்பன் முறையை அடையவும் இது வழிவகுக்கும். ஆக இதை முழுமையாகச் செயல்படுத்துவதில் அதிகக் கடமையும், முன்னுரிமையும் வளர்ந்த நாடுகளுக்கே இருக்கிறது.

பூமியின் வெப்பம் நாளுக்கு நாள் உயர்ந்து பனிப்பாறைகள் உருகி வரும் இக்காலத்தில் இயற்கையை மனிதர்கள் நேசிப்பது மிகவும் அவசியமாகும். நிலம், நீர், காற்று, இயற்கை வளங்கள் ஆகியவற்றை நாம் பாதுகாப்பது அதற்குரிய சவால்களை மீறிய உடனடியான கடமையாகும். மேலும் முந்தைய காலத்தில் பருவநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமயமாதல் ஆகியவற்றை உலகம் ஏற்க மறுத்தது. இவை இலுமினாட்டிகளின் சதி என்றது. தற்போது தான் அவை பற்றிய உண்மைகள் உணரப்பட்டு பூமியின் முன் சாட்சியமாக நிற்கின்றன. ஆகவே நாம் இது பற்றிய போதுமான விழிப்புணர்வை அடைவதுடன் இயற்கையை அதற்குரிய வழிகளில் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.

(ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினம்)

- எச்.பீர்முஹம்மது, எழுத்தாளர், ‘கீழைச் சிந்தனையாளர்கள் ஓர் அறிமுகம்' உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். சிற்றிதழ்கள், வெகுஜன இதழ்கள் போன்றவற்றில் தொடர்ச்சியாக எழுதிவருகிறார். தொடர்புக்கு: peerzeena@gmail.com

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in