பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் இல்லாவிட்டால் இலங்கை எழவே முடியாது!

களநிலவரத்தை விவரிக்கும் ஈழக் கவிஞர் அஸ்மின்
கவிஞர் அஸ்மின்
கவிஞர் அஸ்மின்

’நாங்க வாழணுமா சாகணுமா சொல்லுங்க... கவருமென்ட் சொல்லுங்க...’ என்னும் பாடலை எழுதி இலங்கை மக்களின் துயர்மிகு வலியை வெளிப்படுத்தியவர் கவிஞர் அஸ்மின். டி.ராஜேந்தர் பாடிய இந்தப்பாடல் சமூகவலைதளங்களில் ஹிட் அடித்தது. இலங்கை அரசின் சிறந்த கவிஞருக்கான தேசிய விருதுபெற்ற கவிஞர் அஸ்மினிடம் இலங்கையின் இப்போதைய சூழல் குறித்துப் பேசினோம்.

STRINGER

இலங்கையின் இப்போதைய பொருளாதார சூழல் எப்படி உள்ளது?

கிரேக்கம் எதிர்கொண்ட நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. அரசு இதுவரை பெற்றிருந்த கடன்களைக்கூட திருப்பிச் செலுத்த முடியாத சூழல் நிலவுகிறது. அத்தியாவசியப் பொருட்களை வாங்கமுடியாத அளவிற்கு அரசிடமே நிதிப்பற்றாக்குறை நிலவுகிறது. பெட்ரோலுக்கும், சமையல் எரிவாயுவுக்கும் மக்கள் நீண்ட வரிசையில் காத்துநிற்கின்றனர். பொருட்களின் விலையேற்றத்தை மக்களால் தாங்கமுடியவில்லை. இந்தச்சூழலுக்கு கரோனாவுக்குப்பின் ஏற்பட்ட சுற்றுலாத் துறையின் வீழ்ச்சியுடன், ராஜபக்ச அரசாங்கத்தின் தவறான, ஊழல் மலிந்த நிர்வாகமும் காரணமாக இருக்கிறது.

ராஜபக்ச அரசாங்கம் அப்படி என்னவகையான தவறுகளைச் செய்தது?

முந்தைய அரசாங்கத்தின் பொருளாதார திட்டமிடல்களை ராசபக்ச அரசு முற்றாக தவிர்த்துவிட்டது. தொழில் நிறுவனங்களிடமிருந்து பெற்றுவந்த வரிகளைக் கணிசமான அளவு குறைத்ததும் குறுகிய காலத்துக்குள் இலங்கை வீழ்வதற்குக் காரணமானது. இதெல்லாம் ஒரே இரவில் ஏற்பட்ட நெருக்கடி அல்ல. திறந்த பொருளாதாரக் கொள்கை கடந்த நாற்பது வருடங்களாக உருவாக்கி வந்த படிப்படியான சீரழிவின் உச்சம் இது. சீரழிவை பேரழிவை நோக்கி செலுத்தியவர்கள் ராஜபக்ச சகோதரர்கள். இலங்கை சுதந்திரம் பெற்ற 1948-ல், ஆசியாவிலேயே ஜப்பானுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பணக்கார நாடாக இருந்தது.

இலங்கையில் 1970-ல் அமைந்த இடதுசாரி கூட்டணி அரசு இலவசக் கல்வி, இலவச மருத்துவம், கூட்டுறவு முறையில் உணவுப் பங்கீடு என ஆசியாவிலேயே சிறந்த சமூகநல அரசாக இலங்கையை உருவாக்கியது. 1980-ல் உலகிலேயே வாழ்க்கைச் செலவு குறைந்த நாடுகளின் வரிசையில் முதலாவதாக இலங்கை இருந்தது. ஜே.ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கையுடன் இலங்கையின் பொருளாதாரக் கட்டமைப்பு மெல்ல மெல்லச் சரிந்தது. யுத்தம் அதை இன்னும் தீவிரமாக்கியது. இலங்கையின் திறந்த பொருளாதாரக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டாலன்றி, இலங்கையால் எழுந்து வர முடியாது என்பதே உண்மை.

ராஜபக்ச சகோதரர்கள்
ராஜபக்ச சகோதரர்கள்

ஆட்சியாளர்களின் வீட்டையே தீக்கிரையாக்கும் அளவுக்கு மக்கள் உணர்ச்சிப் பெருக்காகிவிட்டார்களே?

இலங்கையில் நீண்டகாலமாகவே சரியான பொருளாதார திட்டமிடல் இல்லாமையும், கொள்கை வகுப்பதில் பிரச்சினைகளும் நிலவி வந்தது. இருந்தும், காலத்துக்குக் காலம் மாறிவந்த அரசாங்கங்கள் மக்களுக்கு வழங்கிய நிவாரண உதவிகள், அவர்களுடைய அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ததால் மக்களுக்கு சுமையாகத் தெரியவில்லை. சிங்களவர்கள் தங்கள் தலைவர்கள் மீதும், நாட்டின் மீதும் வைத்திருந்த பற்றினால் ஆட்சியாளர்கள் செய்த தவறுகளைக் கடந்து பயணித்தனர். ஆனால், முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இப்போது மக்களின் வாழ்வாதாரம் மிகப்பெரிய அழிவை நோக்கியதே அவர்கள் பொங்கி எழுந்தமைக்கான பிரதான காரணம்.

அதிலும் சீனிக்கு வரியை குறைத்தது, அத்தியாவசிய பொருட்கள் ஏற்றுமதியில் நிகழ்ந்த மோசடி, மக்களுடைய தலையில் அரசு தெரிந்தே ஏற்படுத்திய பொருளாதாரச் சுமை ஆகியவையே மக்கள் கிளர்ச்சிக்கு வழிகோலின. அரசு அதிகளவில் பணத்தை அச்சிட்டு புழக்கத்தில் விட பொருட்களுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டு பொருட்களின் விலையும் அதிகரித்தது. 69 லட்சம் வாக்குகளை பெற்ற சிங்கள மக்களின் ஏகோபித்த அரசாக தம்மை ராஜபக்ச சகோதரர்கள் கருதியதால் தாம் எடுக்கும் எந்த தீர்மானத்தையும் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற மனநிலையில் இருந்தார்கள். அதுவே பலதவறுகளுக்கும் காரணமானது!

இவர்கள் ஆட்சிக்குவர உதவிய மரண தண்டனை கைதியான துமிந்த சில்வா போன்றோர்களை ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுதலை செய்தது, ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட அரசியல் குற்றவாளிகளை அந்த வழக்குகளில் இருந்து முற்றாக விடுதலை செய்தது போன்ற செயல்கள் அரசின்மீது இருந்த மிச்ச நம்பிக்கையையும் சிதைவடையச்செய்தது. இதுவும் மக்களின் கொந்தளிப்புக்குக் காரணம்.

கவிஞர் அஸ்மின்
கவிஞர் அஸ்மின்

இலங்கையில் உடனே செய்யவேண்டிய மறுகட்டமைப்புகள் என்ன?

நாட்டில் தொழிற்சங்க போராட்டங்களும் தீவிரம் அடைந்துள்ளன. அதிபர் கோத்தபய பதவி விலக வேண்டும் என்ற கோஷமும் அழுத்தமாக முன்வைக்கப்படுகின்றது. இதற்கிடையில் இலங்கை தனது பொருளாதாரத்தை மீட்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இலங்கை மக்கள் எதிர்காலம் குறித்த நம்பிக்கையற்ற நிலையிலே வாழ்ந்து வருகின்றனர்.

முதலில் ஸ்திரமான அரசு உருவாக்கப்பட வேண்டும். அதற்காக இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினர்கள், அனைத்துக் கட்சி தலைவர்களும் ஒன்றிணைந்து நிலையான கூட்டாட்சியை ஏற்படுத்தி பொருளாதாரத்தை மீட்பதற்கு முனையவேண்டும். அரசு உடனடி, நீண்டகால நடவடிக்கையாக என்னென்ன செய்ய வேண்டும் என்று கலந்தாலோசித்து முடிவுக்கு வரவேண்டும். மக்களின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வரவு செலவு திட்டம் நிவாரணம் வழங்கும் முகமாக ஏற்படுத்தப்பட வேண்டும். பல்வேறு அபிவிருத்தி பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணத்தை நிவாரணங்கள் வழங்க ஒதுக்கப்பட வேண்டிய கட்டாய சூழல் இருக்கிறது. இவ்வாறு செய்வதன்மூலம் மக்கள் போராட்டத்தை ஓரளவு தணிக்கலாம்.

இந்தியா போன்ற இலங்கை மக்கள் நலனில் அக்கறை கொண்டு உதவியாக இருக்கின்ற நாட்டோடு நட்புறவை வலுப்படுத்த வேண்டும். இந்தியாவின் ஆலோசனைகளின் அடிப்படையில் ஏனைய நாடுகளோடும் தொடர்பு கொண்டு இலங்கைக்ககு தேவையான உதவிகளைப் பெறுவதற்கு முனையவேண்டும். அத்தோடு புலம்பெயர் தமிழர்களின் முதலீடுகள் இலங்கைக்குள் வருவதற்காக அரசியல் ரீதியான நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டு அவை செயற்பாட்டில் கொண்டு வரப்படவேண்டும். அத்தோடு கடன்பெற்ற நாடுகளோடு கடன் நிவாரணப் பேச்சுவார்த்தை ஏற்படுத்துவதோடு மத்திய கிழக்கு நாடுகளோடு முஸ்லிம் அமைச்சர்கள் ஊடாக ராஜதந்திர பேச்சுவார்த்தை ஏற்படுத்தி, இனவாத அரசால் சீர்கெட்டுக்கிடக்கும் மத்திய கிழக்கு உறவைச் சரிப்படுத்தி, எரிபொருள் சார்ந்த பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

தமிழர்கள் பகுதியில் விரைந்து செய்ய வேண்டியது என்ன?

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு அபிவிருத்திப் பணிகளைச் செய்தால் அவர்கள் தேவை பூர்த்தி அடைந்துவிடும் என்று நம்பியது. ஆனால், அவ்வாறு இல்லை என்பது கடந்த 13 வருட தேர்தல்கள் உணர்த்துகின்றன. தமிழர்களின் பிரதான பிரச்சினையாக இருக்கின்ற அரசியல் தீர்வு தொடர்பில் முதலில் நம்பிக்கை ஏற்படுத்தப்படவேண்டும். உடனடியாக இந்த பொருளாதாரப் பிரச்சினைகளை பாராளுமன்றத்தின் ஊடாக தீர்த்துவிட முடியாது. இதனை இப்போதைய சூழலில் சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனவே, இப்போதைய சூழலில் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையை வலுப்படுத்த அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி அரசு விடுதலை செய்ய வேண்டும். அத்தோடு தமிழர்கள் பூர்விக நிலங்களில் முகாமிட்டிருக்கின்ற ராணுவம் வெளியெடுக்கப்பட்டு உரியவர்களிடம் நிலம் ஒப்படைக்கப்பட வேண்டும். தமிழர்கள் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக தொழில்பேட்டைகளை உருவாக்கிக் கொடுக்க வேண்டும்.

இயற்கை விவசாயக் கொள்கையும் இலங்கையின் பொருளாதாரச் சிதைவுக்குக் காரணம் என்பது எந்த அளவிற்கு உண்மை?

இலங்கை விவசாயத்தை தன்னிறைவு பொருளாதாரமாக கொண்ட நாடாக இருந்து வருகிறது. அந்த வகையில் இயற்கை விவசாயத்தை முன்னெடுக்கப்படவேண்டும் என்ற தீர்மானம் அதிபர் கோத்தபயவால் எடுக்கப்பட்டிருந்தாலும் கூட அதற்குத் தேவையான இயற்கை உரத்தை அரசாங்கத்தால் வழங்க முடியாத சூழல் இருந்தது. இயற்கை விவசாயம் இலங்கையில் எந்தளவுக்குச் சாத்தியம் என்பதற்கான பரிசோதனை முன்னேற்பாடுகளும் செய்திருக்கப்படவில்லை. அதனால் விவசாயிகள் உரம் இல்லாமல் திண்டாடினார்கள். பயிர்கள் செத்து மடிந்தன. விவசாயம் முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டது. அரசுக்கு எதிராக விவசாயிகள் வீதிக்கு இறங்கிப் போராடினார்கள்.

காலதாமதமான பிறகு ரசாயன உரத்தை கொள்முதல் செய்யும் முயற்சி தோல்வியில் முடிந்தது. ரசாயன உர கொள்முதலிலும் மோசடி நடைபெற்றது. ஒரே தடவையில் இயற்கை விவசாயம் என்ற விஷயம் வெற்றிபெறவில்லை. சீனாவிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட இயற்கை உரம் இலங்கை மண்ணுக்கு ஒவ்வாத அதே நேரம் பயிர்கள் வளர்ச்சியைப் பாதிக்கும் விதத்தில் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டன. அதனால் அந்த உரம் திருப்பி அனுப்பப்பட்டது. அதனை மீண்டும் திருப்பி அனுப்பியதற்கு நஷ்டஈடு செலுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. அதிலும் பல மோசடிகள் நடந்திருப்பது பின்னர் தெரிய வந்தது. இவ்வாறான காரணிகள் இலங்கையின் பொருளாதாரத்தில் மிகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது என்பது உண்மைதான். இருந்தும் அது இயற்கை விவசாயத்தின் தோல்வி அல்ல. அதை செயல்படுத்திய முறையில் இருந்த தோல்வியாகப் பார்க்கிறேன்.

பிரதமராக பதவியேற்ற ரணில்
பிரதமராக பதவியேற்ற ரணில்

இப்போதைய சூழலில் இருந்து இலங்கை மீள என்ன வகையான யுத்திகள் செய்யப்பட வேண்டும்?

தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் இடையே ஒருவருக்கொருவர் இருந்த சந்தேக நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. தேர்தல் காலத்தில் இவர்கள் ஒவ்வொரு இனங்கள் தொடர்பில் காலம் காலமாக மேற்கொண்டு பரப்புரைகள் அனைத்தும் பொய்யானவை என்பதை சிங்களவர்கள் இப்போது உணர ஆரம்பித்திருக்கிறார்கள். குறிப்பாக, சிங்கள இளைஞர்களுக்கு, பொய்யான பரப்புரைகளால் வேண்டுமென்றே அரசாங்கம் தமது அரசியல் லாபத்துக்காக தங்களைப் பிரித்து வைத்திருக்கிறது என்ற உண்மை புரிந்துள்ளது.

அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற மனோநிலைக்கு இப்போது அவர்கள் வந்திருக்கிறார்கள். அதனால் தான் அனைத்து இன மக்களும் ஒன்றாக இணைந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள் . இது எமது நாடு ... நாம் அனைவரும் ஒருதாய் பிள்ளைகள் என்ற கோஷத்தை அவர்கள் முன் வைத்துவருகிறார்கள். நாட்டைப் புறக்கணித்து சிறுபான்மை மக்கள் செயற்படுகிறார்கள். இவர்கள் நாட்டுக்கு எதிராக செயற்படுகிறார்கள் என்கிற பொய் பிரச்சாரத்தைத் தாண்டி சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ இனங்களுக்கிடையில் புரிதலை ஏற்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இப்போதைய இலங்கையின் நிகழ்வுகள் மாறி இருப்பது ஆரோக்கியமான விஷயம்.

’இலங்கை எனது நாடு’ என்ற வகையில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்கின்ற எதிர்பார்ப்பு தான் இப்போது ஒட்டுமொத்த இலங்கை மக்களிடமும் இருக்கிறது. இப்படியான சூழலில், புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றிருக்கிறார். இவரது செயல்பாடுகளால் இலங்கை மீண்டெழுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in