உக்ரைன் போர்: முடிவுக்கு வருமா, மூன்றாம் உலகப்போர் மூளுமா?

உக்ரைன் போர்: முடிவுக்கு வருமா, மூன்றாம் உலகப்போர் மூளுமா?

உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தொடங்கி இன்றுடன் 64 நாட்களாகின்றன. இரண்டு மாதங்களைக் கடந்து நிகழ்ந்துவரும் இந்தப் போரால் உக்ரைன் மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்திருக்கிறது. ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்திருக்கிறார்கள். 52 லட்சம் பேர் அகதிகளாகியிருக்கின்றனர். சுமார் 60 பில்லியன் டாலர் (4.50 லட்சம் கோடி ரூபாய்) பொருளாதார இழப்பும் ஏற்பட்டிருக்கிறது.

அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வி, ஐநாவின் சமாதான முயற்சிகள் தோல்வி என படிப்படியாக அடுத்த கட்ட பரிணாமத்தை எடுத்துள்ளது இந்த போர். தொடக்கத்தில் உக்ரைனின் மத்திய பகுதியில் உள்ள தலைநகரமான கீவ் உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் போரை தொடுத்த ரஷ்யாவால் அவ்வளவு எளிதாக அந்த நகரை கைப்பற்ற முடியவில்லை. ஏனென்றால் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளின் முழு ஆதரவும் உக்ரைன் பக்கம் இருந்தது. ஒரு பக்கம், ரஷ்யா மீதான அடுக்கடுக்கான பொருளாதார தடைகள் மற்றொரு பக்கம், உக்ரைனுக்கு ஆயுத, பொருளாதார உதவி என இருவிதங்களில் ரஷ்யாவை இறுக்கின இந்த நாடுகள்.

இதனால் கீவ் நகரில் இருந்து பின்வாங்கி இப்போது கிழக்கு உக்ரைன் பகுதிகளைக் கைப்பற்றும் முனைப்பில் உள்ளது ரஷ்யா. கிழக்கு உக்ரைனின் முக்கிய நகரமான மரியுபோலைக் கைப்பற்றியதாக அறிவித்திருக்கிறார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். இன்னும் சில நகரங்களும் ரஷ்யாவிடம் வீழும் நிலையில் உள்ளன.

‘மூன்றாம் உலகப்போர்' எச்சரித்த ரஷ்யா

அமெரிக்கா தலைமையிலான நேட்டோ பாதுகாப்புக் கூட்டணிதான் தற்போது உக்ரைன் மூலம் தங்களுடன் பதிலி யுத்தத்தில் (proxy war) ஈடுபடுகிறது என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டியது ரஷ்யா. அந்த அளவுக்கு ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் இப்போது கிட்டத்திட்ட மறைமுகமாக ரஷ்யா - அமெரிக்க ஆதரவு நாடுகள் இடையிலான போர் என்ற வடிவத்தை அடைந்துள்ளது.

இந்த சூழலில் ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ், “அணு ஆயுதப் போர் கூடாது என்பதுதான் ரஷ்யாவின் அடிப்படையான நிலைப்பாடு. ஆனால் தற்போது அந்த அபாயம் தீவிரமாக உள்ளது" என உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ்
ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ்

இதற்குக் கண்டனம் தெரிவித்த அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின், "அணுசக்தி யுத்தம் நடப்பதை யாரும் பார்க்க விரும்பவில்லை. இது அனைத்து தரப்பினரும் தோற்றுப்போகும் ஒரு போர்” என்று கூறினார்.

ஆனால் மூன்றாம் உலகப்போர் குறித்த ரஷ்யாவின் பேச்சிலும் வழக்கம்போல அவர்களைச் சீண்டியது உக்ரைன், "இந்த மிரட்டல் மூலமாக ரஷ்யா தனது கடைசி நம்பிக்கையையும் இழந்துவிட்டது என தெரிகிறது. இதன் பொருள் ரஷ்யா உக்ரைனில் தோல்வியை உணர்கிறது. எனவே, உக்ரைனை ஆதரிப்பதை உலக நாடுகள் இரட்டிப்பாக்க வேண்டும் " என்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்தார்

ஆரம்பம் முதலே ரஷ்யாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கும் சீனா இந்த விவகாரத்தில் கவனமாகக் கருத்து தெரிவித்தது. இது தொடர்பாக பேசிய சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர், "யாருமே மூன்றாவது உலகப்போரை விரும்பவில்லை. சம்பந்தப்பட்ட தரப்புகள் கட்டுப்பாட்டோடு நடந்து, பதற்றத்தைத் தணிக்க வேண்டும். எவ்வளவு விரைவாக முடியுமோ அவ்வளவு விரைவாக அமைதியை நிலைநாட்டி, ஐரோப்பாவிலும் உலகத்திலும் பெரும் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க வேண்டும்" என வேண்டுகோள் விடுத்தார்.

ரஷ்யாவின் அணு ஆயுதம், மூன்றாம் உலகப்போர் தொடர்பான கருத்துகள் தற்போது உலக நாடுகளிடம் கடும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளன.

உக்ரைனுக்கு உதவ கூட்டம் நடத்திய அமெரிக்கா

ரஷ்ய தாக்குதல் தொடங்கிய பின்னர் முதன்முறையாக உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியை அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின் உள்ளிட்ட அதிகாரிகள் சில நாட்களுக்கு முன்பு சந்தித்து போர்ச்சூழல் குறித்து விவாதித்தனர். மேலும், உடனடியாக கூடுதல் ராணுவ உதவியாக 700 மில்லியன் டாலர்களை உக்ரைனுக்கு வழங்குவதாகவும் அறிவித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், "ரஷ்யா ஏற்கெனவே தனது ராணுவத் திறனைப் பெருமளவில் இழந்துவிட்டது. வெளிப்படையாகச் சொன்னால் மிக விரைவாக இதனை மீட்டுருவாக்கம் செய்யும் திறன் ரஷ்யாவிடம் இல்லை. வெற்றி பெறுவதற்கான முதல் படி, நம்மால் வெற்றி பெற முடியும் என்று நம்புவதுதான். எனவே இந்தப் போரில் வெல்ல முடியும் என்று உக்ரைன் நம்புகிறது. இந்தச் சூழலில் உக்ரைன் சரியான உபகரணங்களைக் கையாண்டால் போரில் வெற்றிபெற முடியும்" என தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, ஜெர்மனியில் 40 நாடுகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற உச்சி மாநாட்டை அமெரிக்கா நடத்தியது. இதில் அனைத்து நாடுகளும் உக்ரைனுக்கு அதிக ஆயுதங்கள் மற்றும் உதவிகளை அனுப்ப வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியது. இந்த கூட்டத்தில் ஐரோப்பிய நாடுகளுடன், கனடா, ஆஸ்திரேலியா, தென் கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளும் கலந்துகொண்டன.

அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின்
அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின்

இந்தக் கூட்டத்தில் பேசிய அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்டு ஆஸ்டின், "வரவிருக்கும் வாரங்கள் உக்ரைனுக்கு மிக முக்கியமானது. எனவே நாம் போரின் வேகத்திற்கு ஏற்ப செல்ல வேண்டும். ரஷ்ய ஆக்கிரமிப்பு மற்றும் அட்டூழியங்களுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் உக்ரைனை ஆதரிப்பதில் முன்னெப்போதையும் விட அனைத்துத் தலைவர்களும் உறுதியுடன் இருக்க வேண்டும். நமது முயற்சிகளைத் தீவிரப்படுத்தி, நமது உதவிகளை ஒருங்கிணைத்து உக்ரைன் வெற்றி பெறுவதில் முனைப்பு காட்ட வேண்டும் " என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, அமெரிக்காவின் முன்னெடுப்பில் நடந்த இந்தக் கூட்டத்தால் மேலும் அதிருப்தியடைந்த செர்கேய் லாவ்ரோவ், மூன்றாம் உலகப் போர் குறித்த எச்சரிக்கை நிஜமானது என்றும், அதைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் எச்சரித்தார்.

இந்த போரில் அமெரிக்கா இதுவரை மொத்தம் 3.4 பில்லியன் டாலர் மதிப்பிலான தேசிய பாதுகாப்பு உதவியை உக்ரைனுக்கு வழங்கியுள்ளது, இதில் ஹோவிட்சர் பீரங்கிகள், Mi-17 ஹெலிகாப்டர்கள், கவச கேரியர்கள், ரேடார் அமைப்புகள், ஸ்விட்ச் பிளேடு ட்ரோன்கள், ஃபீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன் மற்றும் ஆயிரக்கணக்கான ஸ்டிங்கர் ஏவுகணைகள் உள்ளிட்டவை அடக்கம்.

இப்படிப் பல நாடுகளின் உதவியுடன் முனைப்பாக ரஷ்யாவுடன் மோதிவரும் உக்ரைன், இனிவரும் நாட்களில் ரஷ்யாவை முற்றிலுமாக பின்வாங்க வைக்க வேண்டும் என்ற வகையில் காய்களை நகர்த்தி வருகிறது.

சமாதான முயற்சிகளை தீவிரப்படுத்தும் ஐநா

ஒருபக்கம் போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், மறுபக்கம் போரை முடிவுக்கு கொண்டுவர ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ் களமிறங்கியுள்ளார். சமீபத்தில் ரஷ்யா சென்ற அவர் அந்நாட்டு அதிபர் விளாதிமிர் புதினைச் சந்தித்தார். அப்போது பேசிய புதின், உக்ரைனுடன் பேச்சுவார்த்தை தொடரும் என்றும், விரைவில் நல்ல முடிவுகள் கிடைக்கும் என நம்புவதாகவும் கூறினார், இது ஒரு நல்ல சமிக்ஞையாகவே பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், ரஷ்யா கைப்பற்றியுள்ள மரியுபோல் நகரின் எஃகு ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்களை பத்திரமாக வெளியேற அனுமதிக்க வேண்டும் என குத்தேரஸ் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்த புதின், ஆலையில் சிக்கியுள்ள பொதுமக்களை உக்ரைன் ராணுவம் மனிதக்கேடயமாகப் பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார். இருப்பினும் அந்த உருக்காலையில் சிக்கியுள்ள பொதுமக்களை வெளியேற்ற ரஷ்யா ஒப்புக்கொண்டதாக ஐநா தரப்பு தெரிவித்துள்ளது.

ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ்
ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குத்தேரஸ்

ரஷ்யாவில் பேசிய குத்தேரஸ், "பயனுள்ள பேச்சுவார்த்தைக்கான சூழலை உருவாக்குவதற்கான வழிகளைக் கண்டுபிடிப்பதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக உள்ளோம். விரைவில் போர் நிறுத்தம் மற்றும் அமைதி தீர்வுக்கான சூழலை உருவாக்க முயற்சிக்கிறோம். ரஷ்யாவுடன் நடந்த பேச்சுவார்த்தைகளில் உக்ரைனில் என்ன நடக்கிறது என்பதில் 2 வெவ்வேறு நிலைப்பாடுகள் இருப்பது உறுதியாக தெரிகிறது " என தெரிவித்தார். ரஷ்ய அதிபருடனான சந்திப்புக்குப் பின்னர், உக்ரைன் அதிபர் ஸெலன்ஸ்கியை சந்திக்கிறார் குத்தேரஸ். இதற்காக அவர் உக்ரைன் தலைநகர் கீவைச் சென்றடைந்திருக்கிறார்.

உக்ரைன் - ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய், எரிவாயு, சமையல் எண்ணெய்கள், உணவுப்பொருட்கள் என பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால் பல உலக நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த சூழலில் ஐநாவின் முயற்சியால் இந்த போர் முடிவுக்கு வராதா என்பது பல நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.

ஒரு பக்கம் மூன்றாவது உலகப்போருக்கான அச்சம், மறுபக்கம் ரஷ்யாவுடன் கடுமையாக மோத உக்ரைனுக்கு உதவிகளை திரட்டும் அமெரிக்கா, இன்னொரு பக்கம் கிழக்கு உக்ரைனை முழுமையாகக் கைப்பற்றும் முனைப்பில் ரஷ்யா, இது அனைத்திற்கும் தீர்வு காணும் வகையில் ஐநாவின் சமாதான முயற்சி என ஒரே நேரத்தில் பல திசைகளில் பயணிக்கிறது ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in