பதவி விலகுவாரா கோத்தபய ராஜபக்ச? - என்ன முடிவெடுக்கப் போகிறது அனைத்துக்கட்சி கூட்டம்?

பதவி விலகுவாரா கோத்தபய ராஜபக்ச? - என்ன முடிவெடுக்கப் போகிறது அனைத்துக்கட்சி கூட்டம்?

இலங்கை முழுவதும் கடும் பதற்றம் நீடிக்கும் நிலையில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவதாக கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளார்.

இலங்கை முழுவதும் பல்வேறு நகரங்களும் போர்க்களமாக மாறியுள்ளதால் அனைத்து பகுதிகளிலும் பதற்றம் நீடிக்கிறது. கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என கோரிக்கை வைக்கும் போராட்டக்காரர்கள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவும் போராடத்தொடங்கியுள்ளனர்.

இத்தகைய பதற்றமான சூழலில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையில் நடைபெறவுள்ள அவசர ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் அனைத்துக்கட்சியினர் பங்கேற்கவுள்ளனர். இந்த நிலையில் தான் பதவி விலகுவது குறித்து இன்று நடைபெறவுள்ள அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என கோத்தபய ராஜபக்ச அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதிபர் கோத்தபய ராஜபக்ச மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரும் பதவி விலக வேண்டும் என இலங்கையின் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று காலையில் இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், தடுப்புகளை அடித்து நொறுக்கி உள்ளே நுழைந்தனர். இந்த சூழலில் அதிகாரப்பூர்வ மாளிகையை விட்டு தப்பியோடிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பத்திரமுல்லையில் உள்ள ராணுவ தளத்தில் பதுங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பல் மூலமாக குடும்பத்தினருடன் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டுள்ள கோத்தபய ராஜ்பக்சவுக்கு சொந்தமான பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ள கடற்படை கப்பலில் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இலங்கை அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் தடுப்புகளை அடித்து நொறுக்கி உள்ளே நுழைந்தனர். தற்போது இலங்கை அதிபர் மாளிகை போராட்டக்காரர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. ராணுவத்தினரும் போராட்டக்காரர்களுடன் கைகோர்த்துள்ளனர். அதிபர் மாளிகைக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் இலங்கை எம்.பி ரஜிதா சேனரத்னாவை விரட்டி விரட்டி கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த நிலையில் போராட்டக்காரர்களில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in