அனலில் தகிக்கும் ஐரோப்பா: படுகொலை நிகழ்த்தும் பருவநிலை மாற்றம்!

அனலில் தகிக்கும் ஐரோப்பா: படுகொலை நிகழ்த்தும் பருவநிலை மாற்றம்!

“பருவநிலை மாற்றத்தின் அகதிகள் நாங்கள்” என்று பதறுகிறார்கள் பிரான்ஸ் மக்கள். இதுவரை இதுபோன்ற காட்டுத்தீயைப் பார்த்ததில்லை என்கிறார்கள் அந்நாட்டைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள். பிரிட்டனில் இன்று 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. இது 40 டிகிரி செல்சியஸைத் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி நடந்தால் அதுதான் பிரிட்டனில் வரலாறு காணாத வெப்பநிலையாகப் பதிவாகும். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் காட்டுத்தீ பரவிவருகிறது. வடக்கு ஐரோப்பியாவும் அனலில் தகிக்கிறது. இவை அனைத்தும் பருவநிலை மாற்றத்தின் கோர விளைவுகள் என சுற்றுச்சூழல் நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

என்னென்ன பாதிப்புகள்?

பிரான்ஸின் பல்வேறு நகரங்கள் மற்றும் சிறுநகரங்களில் நேற்று (ஜூலை 18) அதிகபட்ச வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. அந்நாட்டின் பிரிட்டானி பிரதேசத்தில் உள்ள அட்லான்டிக் கடற்கரைப் பகுதியில் உள்ள பிரெஸ்ட் நகரில் 39.3 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியிருக்கிறது. 2002-ல் அப்பகுதியில் பதிவான 35.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைவிட இது மிக அதிகம்.

அதேபோல் ஐரோப்பாவின் மிக உயரமான மணல் மேடாகவும், சிறந்த கோடை வாசஸ்தலமாகவும் பெயர் பெற்ற டியூன் டு பிலாட் அருகே தேவதாரு மரங்கள் அதிகம் கொண்ட வனப் பகுதியில் 14,000 ஹெக்டேர் பரப்பளவு காட்டுத்தீயில் எரிந்து நாசமாகியிருக்கிறது.

இந்நிலையில், பிரான்ஸின் லா டெஸ்டே-டே- புக் நகரத்தில் வசிக்கும் தியோ டயான் (26), காட்டுத்தீ காரணமாகத் தனது வீட்டை விட்டு வெளியேற நேர்ந்ததை வேதனையுடன் பதிவுசெய்திருக்கிறார். “நாங்கள் பருவநிலை மாற்றத்தின் அகதிகள்” என்று அவர் கூறியிருப்பதை அந்நகரின் தீயணைப்புத் துறைத் தலைவரான ழான் லுக் க்ளெய்ஸியும் ஆமோதித்திருக்கிறார். “புவி வெப்படைதலை நாம் நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்றுகூட சொல்லக் கூடாது; உண்மையில் அது நம் முகத்தில் அறையத் தொடங்கிவிட்டது” என்று அவர் கூறியிருக்கிறார். பிரிட்டன், பிரான்ஸின் வரிசையில் கிரேக்கம், போர்ச்சுகல், ஸ்பெயின் உள்ளிட்ட பல நாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த சில வாரங்களில், ஐரோப்பாவின் தென் மேற்குப் பகுதிகளில் வெப்ப அலை இரண்டாவது முறையாகப் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் 46 சதவீத பகுதியில் வறட்சிக்கான எச்சரிக்கை விடுக்கும் அளவுக்கு வாட்டியெடுக்கிறது அனல்.

காட்டுத்தீ தொடரும்

அயர்லாந்தின் தலைநகரான டுப்ளின் நகரில் 33 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருக்கிறது. இது 1887-க்குப் பிறகு பதிவான அதிகபட்ச வெப்பநிலை. போர்ச்சுகலில் காட்டுத்தீயில் சிக்கி இரு முதியவர்கள் பலியாகியிருக்கிறார்கள். 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். அந்நாட்டில் வெயில் ஓரளவு தணிந்துவிட்டாலும், பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் என அந்நாட்டின் வானிலை மையம் எச்சரித்திருக்கிறது.

புவி வெப்பமடைதல் ஒருபக்கம் என்றால், தனிமனிதர்களின் தவறுகளும் காட்டுத்தீ போன்ற பாதிப்புகளுக்குக் காரணமாகியிருக்கின்றன. பிரான்ஸின் தென்மேற்கு நகரமான போர்டோவைச் சேர்ந்த ஒரு நபர், அங்குள்ள வனப்பகுதிக்குத் தீவைத்ததாகக் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.

கொலை செய்யும் பருவநிலை மாற்றம்

பருவநிலை மாற்றத்தின் விளைவுகளை ஐரோப்பியத் தலைவர்களும் நன்கு உணரத் தொடங்கியிருக்கின்றனர்.

“பருவநிலை மாற்றம் கொல்கிறது. அது மக்களைக் கொல்வதை நாம் பார்த்திருக்கிறோம். அது நமது சுற்றுச்சூழல் அமைப்பையும் நமது பல்லுயிர்ச் சூழலையும் கொல்கிறது. ஒரு சமூகமாக நாம் கொண்டிருக்கும் நமது வீடுகள், வணிக நிறுவனங்கள், நமது கால்நடைகள் என எல்லாவற்றையும் அழிக்கிறது” என்று ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சாஞ்செஸ் கூறியிருக்கிறார்.

(*பயன்படுத்தப்பட்டிருப்பவை மாதிரிப் படங்கள்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in