அமெரிக்க - சீன அதிபர்கள் நேரடி சந்திப்பு சாத்தியமா?: ஆவலோடு காத்திருக்கும் இன்னொரு அதிபர்

சீன அதிபர் ஜி ஜின்பிங் - அமெரிக்க துணை அதிபராக ஜோ பைடன்
சீன அதிபர் ஜி ஜின்பிங் - அமெரிக்க துணை அதிபராக ஜோ பைடன்

இந்தோனேசியாவில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் கூடுவதை அடுத்து, வேறுபல கணக்குகளோடு இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ஆவலுடன் காத்துள்ளார்.

நவ.15 மற்றும் 16 தினங்களில் ஜி-20 நாடுகளின் சந்திப்பு இந்தோனேசியாவின் பாலியில் நடக்க இருக்கிறது. பொருளாதாரத்தில் சிறந்த 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை உள்ளடக்கிய இந்த ஜி-20 சந்திப்பை முன்னிட்டு, இதர நாடுகளைவிட இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ சிறப்பு எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கிறார். சுமார் 17 ஆயிரம் தீவுகளை உள்ளடக்கிய இந்தோனேசிய தேசம் அதற்கே உரிய வளர்ச்சிக்கும் வளத்துக்கும் ஏங்கி வருவதும் இந்த எதிர்பார்ப்பில் அடங்கும்.

இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ

இந்தோனேசியாவின் மிகப்பெரும் வெளிநாட்டு முதலீடுகள் சீனாவில் இருந்தே கிடைத்து வருகின்றன. ராஜீய வகையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிபர் ஜோகோ காலத்தில் அமெரிக்காவுடன் நெருங்கியிருக்கிறது இந்தோனேசியா. உலகின் நடப்பு சூழலில் பல்வேறு சவால்கள் மத்தியில் ஜி-20 தலைவர்கள் சந்திக்க உள்ளார்கள். ரஷ்ய -உக்ரைன் போர், பொருளாதார மந்தம், விலைவாசி உயர்வு, வட கொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல், சுற்றுச்சூழல் சீர்கேடு ஆகியவற்றின் மத்தியில், அமெரிக்க - சீன நாடுகளின் உரசல் முக்கிய இடம் பெறுகிறது. சீனாவில் மூன்றாம் முறை ஆட்சியை தக்கவைத்திருக்கிறார் ஜி ஜின்பிங். அவரை அமெரிக்க அதிபராக பைடன் பொறுப்பேற்ற பிறகு நேரில் சந்திக்கும் நிகழ்வு என்பதால் ஜி-20 கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது.

இந்த இரு உலகத் தலைவர்களின் சந்திப்பால் சர்வதேச அளவில் நிகழும் இதர மாற்றங்களைவிட அதிக அனுகூலங்களை இந்தோனேசியா அடைய வாய்ப்பிருக்கிறது. இதற்காக இதர நாடுகள் மற்றும் தலைவர்களைவிட ஜோகோ பேராவலுடன் காத்திருக்கிறார். உலகத் தலைவர்களை வரவேற்பது, உபசரிப்பது, இந்தோனேசியாவின் அருமை பெருமைகளை எடுத்துரைப்பதில் கவனம் எடுத்திருக்கும் அதிபர் அலுவலகம், அவற்றில் அமெரிக்க - சீன அதிபர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் தந்திருக்கிறது.

பாலி
பாலி

அமெரிக்க - சீன அதிபர்களின் தனித்துவ சந்திப்பு சுமூகமாக அரங்கேறினால், அமெரிக்க மற்றும் சீன நாடுகளின் ஆசியோடு அங்கத்திய பெருநிறுவனங்களை இந்தோனேசியாவுக்கு ஈர்ப்பது எளிதாகும். சர்வதேச விளையாட்டு போட்டிகள், கூட்டங்கள் ஆகியவற்றை தமது நகரங்களில் அரங்கேற்ற உலக நாடுகள் போட்டியிடுவதன் பின்னணியும் இவைதான் என்ற போதும், இந்தோனேசிய அதிபர் ஜோகோவிடம் பிரத்யேக கணக்குகள் இருக்கின்றன. அதில் தனிப்பட்ட வகையில் தனது அரசியல் செல்வாக்கை நிலைநாட்டுவது, கட்சிக்குள்ளும் தேசிய அரசியலிலும் தனிப்பெரும் இடத்தை தக்கவைப்பது என நீண்டகால இலக்குகளை கொண்டிருக்கிறார் ஜோகோ. மனம் வைப்பார்களா அமெரிக்க - சீன அதிபர்கள்?

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in