பின்லாந்தையும் ஸ்வீடனையும் நேட்டோவில் சேர்க்க துருக்கி எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?

பின்லாந்தையும் ஸ்வீடனையும் நேட்டோவில் சேர்க்க துருக்கி எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?
துருக்கி அதிபர் எர்டோகன்

உலக நாடுகளிடையே வெளியுறவுக் கொள்கைகள் எப்படி கடைப்பிடிக்கப்படுகின்றன என்பது எல்லோருக்கும் புரியாது. காரணம் அதை வெளிப்படையாக எந்த நாடும் தெரிவிப்பதில்லை. அது மட்டுமல்ல, தாங்கள் உணர்த்த விரும்பும் செய்திகளைக்கூட பூடகமாகச் சொல்வதே ராஜதந்திரிகளின் பாணி. இதைத்தான் ‘டிப்ளமேடிக் லேங்வேஜ்’ என்று அழைப்பார்கள்.

‘நேட்டோ’ என்று அழைக்கப்படும் வட அட்லான்டிக் ராணுவ ஒப்பந்த நாடுகள் அமைப்பில் ஸ்வீடனையும் பின்லாந்தையும் சேர்க்கக் கூடாது என்று துருக்கி எதிர்ப்பு தெரிவிக்கிறது. துருக்கியும் நேட்டோவில் உள்ள நாடுதான். உக்ரைன் மீது ரஷ்யா எடுத்துவரும் ராணுவ நடவடிக்கையால் இதுவரை எந்த அணியிலும் சேராமல் நடுநிலை நாடாகவே இருந்துவரும் ஸ்வீடனும் பின்லாந்தும் தங்களுடைய பாதுகாப்பு கருதியே நேட்டோவிடம் தஞ்சம் புக முடிவு செய்துவிட்டன. இரண்டும் ஐரோப்பிய நாடுகள், முதலாளித்துவத்தை ஆதரிப்பவை என்பதெல்லாம் பிற காரணங்கள்.

துருக்கியின் எதிர்ப்புக்குக் காரணங்களை நேரில் தெரிந்துகொள்ளவும், நேட்டோவில் சேருவதற்கு தாங்கள் முடிவெடுத்ததன் பின்னணியையும் விளக்க துருக்கியின் தலைநகரம் அங்காராவுக்கு உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுக்களை அனுப்புவோம் என்று ஸ்வீடன், பின்லாந்து இரண்டும் அறிவித்தன. அப்படியெல்லாம் துருக்கிக்கு வர மெனக்கெட வேண்டாம், உங்களுடைய விளக்கமும் எங்களுக்கு வேண்டாம் என்று துருக்கி அதிபர் ரெசிப் தய்யீப் எர்டோகன் முகத்தில் அடித்தாற்போலக் கூறிவிட்டார். இருந்தும் இரு நாடுகளும் வேறு வழிகளில் தங்களுடைய முயற்சிகளை மேற்கொள்ளும்.

நேட்டோவில் உறுப்பினராக ஒரு நாட்டைச் சேர்த்துக்கொள்ள அதில் ஏற்கெனவே இடம் பெற்றுள்ள 30 உறுப்பினர்களும் - அதாவது நாடுகளும் ஒரு மனதாக ஒப்புதல் தர வேண்டும். நேட்டோ அமைப்பு உருவான மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு 1952-ல் தான் துருக்கியும் கிரேக்கமும் (கிரீஸ்) நேட்டோவில் சேர்ந்தன.

துருக்கி அதிபர் எர்டோகன்
துருக்கி அதிபர் எர்டோகன்

பயங்கரவாத ஆதரவு?

ஸ்வீடனும் பின்லாந்தும் பயங்கரவாதத்தை ஆதரிப்பதால் அவற்றைச் சேர்க்கக் கூடாது என்று துருக்கி காரணம் கூறுகிறது. அதாவது இவ்விரு நாடுகளுக்கும் தெளிவான, வெளிப்படையான பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கை இல்லை என்று எர்டோகன் குற்றஞ்சாட்டுகிறார். அதற்கான காரணத்தையும் அவர் கூறுகிறார். குர்திஸ்தான் தொழிலாளர்கள் கட்சி (பி.கே.கே) என்ற அமைப்பை பயங்கரவாத அமைப்பு என்று துருக்கி அறிவித்திருக்கிறது. அதே சமயம் குர்துகளின் இன்னொரு குழுவைத் தன்னுடைய எல்லையிலும் தன்னுடைய எல்லைக்கு அருகிலும் செயல்பட துருக்கி அனுமதிக்கிறது. பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் தாங்கள் அறிவித்த சிலரைத் தங்களிடம் பின்லாந்தும் ஸ்வீடனும் இதுவரை ஒப்படைக்கவில்லை என்று துருக்கியின் வெளியுறவு அமைச்சர் மெவ்லுட் கவுசோக்லு கண்டித்திருக்கிறார். துருக்கி கைது செய்ய விரும்புவோர் பி.கே.கே. அமைப்புடன் தொடர்பு உள்ளவர்கள் அல்லது 2016-ல் துருக்கியில் நடந்த ஆட்சிக் கலைப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள். அந்தச் சம்பவத்தில் நூற்றுக்கணக்கில் துருக்கியர்கள் மாண்டனர். துருக்கியின் இந்தக் கோரிக்கையைக் கேட்டு வியப்படைவதாகக் குறிப்பிட்டுள்ள பின்லாந்தின் வெளியுறவு அமைச்சர் பெக்கா ஹாவிஸ்டோ, இந்த விவகாரத்தில் துருக்கியுடன் பேரம் பேச தாங்கள் விரும்பில்லை என்று பதில் அளித்திருக்கிறார்.

ஸ்வீடன் மீது கோபம் ஏன்?

சிரியாவில் துருக்கி எடுத்த ராணுவ நடவடிக்கையை அடுத்து அந்த நாட்டுக்கு ஆயுதங்கள் எதையும் விற்கக் கூடாது என்று ஸ்வீடன் தடை விதித்தது. 2019 முதல் இந்தத் தடை அமலில் இருக்கிறது. ஐஎஸ் அமைப்பினரையும் குர்து போராட்டக்காரர்களையும் துருக்கி பயங்கரவாதிகளாகக் கருதுகிறது. எனவே அவர்களை ஒடுக்க துருக்கி ராணுவம் அடிக்கடி தன்னுடைய எல்லையைக் கடந்து சிரியா சென்று தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்புகிறது. சிரியாவின் வடக்குப் பகுதியில் பெருமளவு நிலப்பரப்பை துருக்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது. அங்கே வசித்த உள்ளூர் மக்கள் துருக்கி ராணுவத்தின் தொல்லை தாளாமல் அங்கிருந்து வெளியேறிவிட்டதாகத் தன்னார்வத் தொண்டு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்கிடம், விண்ணப்பம் அளிக்கும் 
நேட்டோவுக்கான ஸ்வீடன் தூதர் அலெக்ஸ் வெர்ன்ஹாஃப்...
நேட்டோ பொதுச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்கிடம், விண்ணப்பம் அளிக்கும் நேட்டோவுக்கான ஸ்வீடன் தூதர் அலெக்ஸ் வெர்ன்ஹாஃப்...படம்: ராய்ட்டர்ஸ்

அமெரிக்காவிடம் சலுகைகள் பெற…

உண்மையில் பின்லாந்து, ஸ்வீடனைச் சேர்க்கக் கூடாது என்பதல்ல துருக்கியின் நோக்கம். அப்படிச் சொன்னால் அமெரிக்கா தன்னை அழைத்து சமாதானப்படுத்த, வேறு ஏதாவது கோரிக்கைகள் இருந்தால் தெரிவியுங்கள் என்று கேட்கும், அப்போது தங்களுக்கு வேண்டியவற்றைக் கேட்டுப் பெறலாம் என்பதற்காகவே இப்படிச் செய்கிறது என்று சர்வதேச உறவுகளைத் தொடர்ந்து நோக்கிவரும் குல்துர் பல்கலைக்கழக சர்வதேச உறவுகள் துறைப் பேராசிரியர் மென்சுர் அகுன் தெரிவிக்கிறார்.

அது மட்டுமல்ல ‘எஃப்-35’ ரக அமெரிக்க நவீனப் போர் விமானங்களை துருக்கிக்கு விற்கக் கூடாது என்று அமெரிக்கா தடை விதித்திருக்கிறது. ரஷியாவிடமிருந்து ‘எஸ்-400’ ஏவுகணை எதிர்ப்பு – தற்காப்பு அமைப்பை துருக்கி வாங்கியதால் இந்தத் தடையை அமெரிக்கா விதித்திருக்கிறது. நேட்டோ உறுப்பினராக இருந்துகொண்டு, அதன் போட்டியாளரான ரஷ்யாவிடம் ஆயுதம் வாங்கலாமா என்பது அமெரிக்காவின் வாதம். ரஷ்யாவிடமிருந்து ‘எஸ்-400’ ஏவுகணை எதிர்ப்பு தற்காப்பு ஆயுதங்களை துருக்கி 2019 ஜூலையில் வாங்கிய சில நாட்களுக்கெல்லாம் ‘எஃப்.35’ போர் விமானங்களை அதற்கு விற்கக் கூடாது என்று தடை கொண்டு வந்தது அமெரிக்கா. ரஷ்ய ‘எஸ்-400’ துருக்கியிடம் இருப்பது நேட்டோ உறுப்பு நாடுகளின் பாதுகாப்புக்கே ஆபத்து என்கிறது அமெரிக்கா. ‘அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ ஏவுகணைகளை வாங்க நாங்கள் முன்வந்தபோது அப்போது அதிபராக இருந்த பராக் ஒபாமா எங்களுக்கு விற்கக் கூடாது என்று தடை விதித்தார், எனவே எங்களுடைய பாதுகாப்புக்காக ரஷ்யாவிடம் வாங்கிக் கொண்டோம்’ என்கிறது துருக்கி. அத்துடன் ஆயுதம் ஏந்திய குர்துகளின் குழுவுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவிப்பதையும் துருக்கி விரும்பவில்லை. ‘குர்திஷ் மக்கள் பாதுகாப்புப் படை’ (ஒய்பிஜி) என்பதை அமெரிக்கா ஆதரிக்கிறது. பி.கே.கே. என்பதை துருக்கி ஆதரிக்கிறது. இவ்விரண்டும் எதிரெதிர் குர்து அமைப்புகள்.

மாசிடோனியா முன்னுதாரணம்

இப்படி சிக்கல்கள் இருந்தாலும் இவையெல்லாம் தீர்ந்துவிடும் பின்லாந்தும் ஸ்வீடனும் சேர துருக்கியே இறுதியில் சம்மதித்துவிடும் என்கிறார்கள் சர்வதேச உறவுகளைத் தொடர்ந்து கண்காணித்து வரும் நிபுணர்கள். நேட்டோவில் மாசிடோனியாவைச் சேர்க்கக் கூடாது என்று கிரேக்கம் எதிர்ப்பு தெரிவித்தது. எங்களுடைய பாரம்பரியத்தைத் திருடும் வகையில் மாசிடோனியா அந்தப் பெயரை வைத்திருக்கிறது என்பது கிரேக்கத்தின் எதிர்ப்புக்குக் காரணம். சில ஆண்டுகளுக்குப் பிறகு தங்களுடைய நாட்டின் பெயரை ‘வடக்கு மாசிடோனியா’ என்று மாற்றிக்கொள்ள அந்த நாடு முடிவுசெய்ததும் 2019-ல் சமரசம் ஏற்பட்டு நேட்டோவில் சேர்ந்துவிட்டது.

நேட்டோ அமைப்பு பெரிதாக வேண்டும், மேலும் பல நாடுகள் அதில் சேர வேண்டும் என்றே துருக்கி விரும்புகிறது, எனவே தனக்கு வேண்டிய அனைத்தையும் அமெரிக்கா ஏற்காவிட்டாலும் முக்கிய கோரிக்கைகளில் ஒரு சில ஏற்கப்பட்டாலும் கூட, எதிர்ப்பை விலக்கிக் கொண்டு ஆதரித்துவிடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பெரிய நாடுகளுக்குக்கூட குழந்தை மனதுதான்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in