ஷாங்காய் முடங்குவதால் சகலமும் முடங்கும் அபாயம்!

ஷாங்காய் முடங்குவதால் சகலமும் முடங்கும் அபாயம்!

தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெரி கட்டும் என்றொரு சொலவடை உண்டு. உலகமயமாக்கலின் விளைவு அதை மெய்ப்பிக்கிறது. சீனாவில் தொடங்கிய கோவிட்-19 பெருந்தொற்று அடங்கிவிட்டது என்றே நாம் நினைக்கும் வேளையில் அது அந்நாட்டில் மேலும் தீவிரமாகியிருக்கிறது. அதன் விளைவாக உலகின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான ஷாங்காய் கிட்டத்தட்ட 20 நாட்களாகப் பொது முடக்கத்தில் இருக்கிறது. ஷாங்காய் மட்டுல்ல அதற்குப் பக்கத்திலேயே இருக்கும் குன்ஷான் உள்பட மேலும் 45 நகரங்கள் பொதுமுடக்கத்தில் உள்ளன.

சீனாவுக்கு வெளியிலும் அதிர்வுகள்

சீனாவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் இருக்கும் ஷாங்காய் மிகப்பெரிய தொழில் நகரம். உலகின் பெருநகரங்களில் ஒன்று. 2.5 கோடி மக்கள் வசிக்கின்றனர். ஷாங்காயும் குன்ஷானும் சேர்ந்து உலகப் பொருளாதாரத்துக்குப் பெரும் பங்களிப்பை அளித்து வருகின்றன. இன்றைய தேதியில் பொதுமுடக்கம் விரைவில் விலக்கப்படும் என்பதற்கான அறிகுறிகளே தென்படவில்லை. இதனால் சீனாவுக்கு மட்டுமல்ல, உலகப் பொருளாதாரத்துக்கும் அது ஏற்படுத்தவிருக்கும் பாதிப்புகள் அதிகம். எனவே உலக அளவில் தொழில்-வணிக வட்டாரங்களில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஷாங்காயிலும் சீனாவின் 45 நகரங்களிலும் முழு அளவுக்கும் பகுதியளவுக்கும் பொதுமுடக்கம் அமலில் இருக்கிறது. சீனாவின் 25 சதவீத மக்களையும் 40 சதவீத பொருளாதாரத்தையும் இது பாதித்துக்கொண்டிருக்கிறது.

சீனாவின் பிற நகரங்களைவிட ஷாங்காய்தான் மொத்த உற்பத்தி மதிப்புக்கு ஆண்டுதோறும் 67,900 கோடி அமெரிக்க டாலர்களைப் பங்களிப்பு செய்கிறது. உலகின் மூன்றாவது பெரிய பங்குச் சந்தை - விற்பனை வர்த்தக அளவில் – இங்குதான் இருக்கிறது. 7.3 லட்சம் கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள மூலதனச் சந்தை மையமாக ஷாங்காய் பங்குச் சந்தை திகழ்கிறது. 1990-ல்தான் தொடங்கப்பட்டது. நியூயார்க், லண்டனுக்கு அடுத்து மூன்றாவது இடத்தைப் பிடித்துவிட்டது. பொது முடக்கம் இருந்தாலும் பங்குச் சந்தையில் வியாபாரம் நடக்கிறது. சில வங்கிகளும் முதலீட்டு நிறுவனங்களும் தங்களுடைய ஊழியர்களைப் இரவில் படுத்து தூங்கி, பகலில் வேலை பார்க்குமாறும், வெளியே வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளன.

ஷாங்காயின் முக்கியத்துவம்

உலகப் பெரும்பணக்காரர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் நகரங்களில் ஐந்தாவது இடம் ஷாங்காய்க்கு. ஹாங்காங்குக்கு அடுத்தபடியாக, சீனாவில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டவர்களுக்கு அதிக வசதியான நகரமும் ஷாங்காய்தான். 2021 இறுதி வரையில் 800-க்கும் மேற்பட்ட பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் தங்களுடைய பிராந்திய அல்லது சீனத் தலைமையகத்தை இந்நகரில்தான் அமைத்துக்கொண்டுள்ளன. ஆப்பிள், குவால்காம், ஜெனரல் மோட்டார்ஸ், பெப்சிகோ, டைசன் ஃபுட்ஸ் உள்ளிட்ட 121 உலகளாவிய நிறுவனங்களில் 500 இங்கே குடிகொண்டுள்ளன. வெளிநாட்டவர்களுக்குச் சொந்தமான எழுபதாயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இந்நகரில் செயல்படுகின்றன.

ஜப்பானிலிருந்து மட்டும் 24,000 நிறுவனங்கள் இங்கே தொழிலில் ஈடுபட்டுள்ளன. ஷாங்காய் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் பெரிய நிறுவனங்கள் பல சீன அரசுக்குச் சொந்தமானவை. உலகின் மிகப் பெரிய மதுபான நிறுவனமான வெய்சோவ் மௌடாய், ஐசிபிசி வங்கி-காப்பீட்டு நிறுவனம், சீன ஆயுள் காப்பீட்டு நிறுவனம், சீன அரசு எண்ணெய் நிறுவனம் பெட்ரோ சைனா இதில் குறிப்பிடத்தக்கவை.

சீனாவின் மொத்த உற்பத்தி மதிப்பில் ஷாங்காய் நகரின் பங்களிப்பு மட்டும் 3.8 சதவீதம். ஆனால் உலக நாடுகளுடனான வர்த்தகத்தில் அதன் பங்களிப்பு 10.4 சதவீதம். உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பான, ஓய்வில்லாமல் செயல்படும் சரக்குப்பெட்டகத் துறைமுகம் ஷாங்காய்தான். 2021-ல் மட்டும் 470 லட்சம் பெட்டகங்களைக் கையாண்டிருக்கிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத் துறைமுகம் கையாண்டதைப்போல இது நான்கு மடங்கு! சீனாவின் மொத்த சரக்குப் பெட்டகங்களில் 16.7 சதவீதம் ஷாங்காய் துறைமுகம் மூலம் கையாளப்படுகின்றன.

ஆசியாவிலேயே மிகப் பெரிய விமானப்போக்குவரத்து மையம் ஷாங்காய்தான். அங்கு புடாங் சர்வதேச விமான நிலையமும் ஹோங்கியோ விமான நிலையமும் இணைந்து 2019-ல் மட்டும் 1,220 லட்சம் பயணிகள் வந்துபோகக் காரணமாக இருந்தன. லண்டன், நியூயார்க், டோக்கியோவுக்கு அடுத்து பயணிகள் போக்குவரத்தில் நான்காவது இடத்தில் இருக்கிறது ஷாங்காய். கோவிட் காரணமாக இப்போது ஏராளமான சேவைகள் நிறுத்தப்பட்டுவிட்டன. மிகச் சில சேவைகளும் தாமதமாகவே நடக்கின்றன. விமான பயணக் கட்டணமும் சரக்குக் கட்டணமும் அதிகரித்துள்ளன. உலகின் பல பகுதிகளுக்கும் பொருள்கள் கிடைக்காமல் விநியோகச் சங்கிலி அறுபட்டுக்கொண்டிருக்கிறது. ஷாங்காய் துறைமுகமும் அதே நிலையில் இருக்கிறது. ஏராளமான கப்பல்கள் சரக்கை ஏற்றவும் இறக்கவும் வாரக் கணக்கில் காத்துக்கிடக்கின்றன. எனவே கப்பல் கட்டணங்களும் வாடகையும் உயர்ந்துவிட்டன. லாரி டிரைவர்களால் வெகு எளிதில் துறைமுகங்களுக்குச் செல்லவும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு திரும்பவும் முடியாதபடிக்கு சோதனைகள் அதிகமாகிவிட்டன.

பிற நாடுகளில் பாதிப்பு

ஷாங்காயும் அதைச் சுற்றியுள்ள நகரங்களும் மோட்டார் வாகனங்களிலிருந்து செமி-கன்டக்டர்கள் என்றழைக்கப்படும் சிப்புகள் வரை பல்வேறு சாதனங்களைத் தயாரிப்பவை. சீன அரசு நிறுவனமான எஸ்ஏஐசி (SAIC) இங்கு மிகப் பெரிய ஆலையை நிறுவியுள்ளது. டெஸ்லா நிறுவனம் கடந்த ஆண்டு இங்கிருந்துதான் 65,000 மின்சார கார்களை உற்பத்தி செய்து அனுப்பியது. கடந்த ஜனவரியில் போர்டு நிறுவனம் வடிவமைப்பு மையத்தை ஷாங்காயில் திறந்தது. சிப் தயாரிப்பில் உலகின் முன்னணி நிறுவனமான டிஎஸ்எம்சி, சோங்ஜியாங் என்ற புறநகர்ப்பகுதியில் செமி கன்டக்டர் உற்பத்தி ஆலையை நிறுவியிருக்கிறது. புடோங் நகரில் சீனாவின் எஸ்எம்ஐசி, ஹுவா ஹாங் செமி கன்டக்டர் நிறுவனங்கள் உள்ளன. ஜெர்மனியின் வோக்ஸ்வேகன் மோட்டார் கார் நிறுவனமும் டெஸ்லாவும் ஷாங்காயில் உள்ள தங்களுடைய ஆலைகளை மூடி வாரக்கணக்காகிறது. ஆப்பிள் நிறுவனத்துக்கு முக்கியமான உள்ளீடுகளை வழங்கும் பெகாட்ரான் நிறுவனமும் உற்பத்திப் பிரிவுகளை கோவிட் தொற்று காரணமாக மூடியிருக்கிறது.

மருந்து-மாத்திரை தயாரிப்பு நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. ஷாங்காய்க்கு நேரிட்ட பாதிப்பால் கொரியா, தைவான், வியட்நாம், ஜப்பான் ஆகிய நாடுகளும் பின் விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இதிலிருந்து ஷாங்காய் நகர பொதுமுடக்கம் எப்படிப்பட்டது என்று ஓரளவுக்கு விளங்குகிறது.

Related Stories

No stories found.