அலாஸ்காவை அமெரிக்காவுக்கு விற்ற ரஷ்யா: ஒரு வரலாற்றுப் பார்வை!

அலாஸ்காவை அமெரிக்காவுக்கு விற்ற ரஷ்யா: ஒரு வரலாற்றுப் பார்வை!

மறக்கப்படக் கூடாதது வரலாறு. காரணம் வரலாறு மீண்டும் மீண்டும் திரும்பும் என்பது உலக அனுபவம். உக்ரைனைக் கைப்பற்ற 70 நாட்களுக்கும் மேல் தீவிரமாகப் போர் நடத்தியும் வெற்றி கிட்டாமல் தவிக்கிறது ரஷ்யா. உலக வல்லரசான ரஷ்யா அணு ஆயுதங்களை அதிகம் கையில் வைத்திருக்கிறது. அதற்கு அஞ்சியே நேட்டோ ராணுவக் கூட்டில் இடம் பெற்றுள்ள நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யாவுடன் நேருக்கு நேர் போர் செய்யத் தயங்குகின்றன. இப்படி உக்ரைனுக்காக இன்று உயிரைக் கொடுத்துப் போராடும் ரஷ்யா, ஒரு காலத்தில் அன்டார்டிகாவை அடுத்த அலாஸ்கா மாநிலத்தை அமெரிக்காவிடம் மிகவும் சல்லிசாக பேரம் பேசி விற்றது என்றால் நம்ப முடிகிறதா? அதைவிட முக்கியம், அப்போது பேசிய தொகையை இன்று வரை அமெரிக்கா கிரையம் செய்துதரவில்லை என்றால் ஏற்பீர்களா?

அலாஸ்காவை வாங்கிய தொகையை இப்போதும்கூட பைசல் செய்யாமல், குதிரை கீழே தள்ளியதல்லாமல் குழியையும் பறித்ததாம் என்ற கதையாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்து அதை முடக்கிக் கொண்டிருக்கிறது அமெரிக்கா.

உலக வரலாறு என்பது நம்பவே முடியாத பல கதைகளால் ஆனது. அரசியல்வாதிகள் அடிக்கடி சொல்வார்கள், அரசியலில் நிரந்தரப் பகைவனும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை என்று. சர்வதேச உறவுகளிலும் அப்படியே என்பதற்கு இந்த அலாஸ்கா விற்பனை வரலாறே சாட்சி.

1867 வரையில் ரஷ்யாவுடையது

அலாஸ்கா 1867 வரையில் ரஷ்யாவுக்குச் சொந்தமாகவே இருந்தது. இப்போது அது அமெரிக்காவின் 49-வது மாநிலம். 154 ஆண்டுகளுக்கு முன்னால் 72 லட்சம் டாலர்களுக்கு அலாஸ்காவை விற்றது ரஷ்யா. அலாஸ்காவின் இப்போதைய ஜிடிபி ஆண்டுக்கு 5,000 கோடி டாலர்கள்! அலாஸ்காவை அமெரிக்கா வாங்க ஒப்பந்தம் செய்துகொண்ட பிறகு வட அமெரிக்க கண்டத்தில் நிலம் வாங்கும் வேலையை நிறுத்திக்கொண்டது ரஷ்யா. அலாஸ்காவை வாங்கிக்கொள்ள அமெரிக்கா மிகுந்த தயக்கம் காட்டியது. அதற்கான பேச்சு பல பத்தாண்டுகள்கூட தொடர்ந்தது.

பிறகு ஆசிய - பசிபிக் பிராந்தியத்தில் மிகப் பெரிய வல்லரசாக உருவாகிவிட்டது அமெரிக்கா. அலாஸ்காவை வாங்குவதில் அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வில்லியம் சீவார்ட் மிகப் பெரிய பங்கு வகித்தார். அமெரிக்க அதிபர் ஆண்ட்ரூ ஜான்சன் காலத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. மிகுந்த இயற்கை வளங்கள் நிரம்பிய அலாஸ்காவை அமெரிக்காவுக்கு விற்றுவிட வேண்டிய நெருக்கடி ரஷ்யாவுக்கு ஏற்பட்டது. அது மட்டும் அல்லாமல் அலாஸ்காவின் இயற்கை வளங்கள் குறித்து ரஷ்யா ஏதும் அறிந்திருக்கவில்லை. ஆண்டு முழுக்க குளிரடிக்கும் பிரதேசம், நமக்கு ஏற்கெனவே சைபீரியா இருக்கிறது, இன்னொன்று எதற்கு என்று ரஷ்யா முடிவெடுத்திருக்கலாம்.

16-வது நூற்றாண்டில்

பதினாறாவது நூற்றாண்டில் ரஷ்யா என்ற நாடு இப்போதுள்ள பரப்பளவில் இல்லாமல் மிகச் சிறிய நாடாகத்தான் இருந்தது. ரஷ்யாவின் கிழக்குப் பகுதிக்குத்தான் அலாஸ்கா சொந்தமாக இருந்தது. அலாஸ்காவின் துணை நதிகள் அளித்த செழிப்பால் அந்தப் பகுதி பெரிய வணிகக் கேந்திரமாக உருவானது. 1581-ல் சிபிர் பிரதேசத்தை ரஷ்யா கைப்பற்றியது.. பிறகு சைபீரியா ரஷ்ய வசமானது. சைபீரியா கடுங்குளிர் பிரதேசம். தவறு செய்பவர்களைத் தண்டிக்க சைபீரியா முகாமுக்கோ சிறைக்கோ அனுப்பவே அது அதிகம் பயன்படுத்தப்பட்டது.

ரஷ்யப் பேரரசர் மகா பீட்டருக்கு ஆசிய நாடுகள்தான் மிகவும் பிடித்திருந்தது. வளமான பூமி, அழகான நிலப்பரப்பு, ஆண்டின் பெரும்பகுதி இதமான வெப்ப நிலை, எனவே ஆசியாவைக் கைப்பற்றுவோம் என்றே விரும்பினார். 1741-ல் அலாஸ்கா, ரஷ்யா வசமானது. காம்சட்கா பிரதேசத்தில் மீண்டுமொரு தாக்குதலுக்காகச் சென்றபோது மகா பீட்டர் மரணம் அடைந்தார். அலாஸ்காவில் அப்போது 800 ரஷ்ய வீரர்கள் மட்டுமே பிரதேசத்தைக் காக்க நிறுத்தப்பட்டிருந்தனர். கடும் குளிர் பிரதேசமாதலால் மக்கள் அங்கு வாழவே விரும்பவில்லை. ரஷ்யாவின் அப்போதைய தலைநகரம் செயின்ட் பீட்டர்ஸ்பர்க். தலைநகருக்கு வெகு தொலைவில் இருந்தது அலாஸ்கா. ‘சென்னைக்கு மிக அருகில்…’ என்ற விளம்பரத்தில் மயங்கி வீட்டு மனைகளை வாங்கி வைத்தவர்கள் இருபதாண்டுகளுக்குப் பிறகும் அதை யாரும் விலைக்குக் கேட்காததால் வந்த விலைக்கு விற்றுவிட முடிவு செய்வதைப் போல, ரஷ்யாவும் தீர்மானித்தது.

அமெரிக்காவின் மேற்குக் கடலோரப் பகுதியில் 1812-ல் அமெரிக்கக் கண்டத்தில் தன்னுடைய எதிர்கால நடவடிக்கைகளுக்காக ஒரு கோட்டையை கட்டியது ரஷ்யா. ரஷ்ய மைய அரசு அங்கிருந்த துறையை ஏதோ காரணங்களால் மூடிவிட்டது. இனி அலாஸ்காவில் உள்ள ரஷ்யர்களின் குடியேற்றங்கள் என்னாகும் என்ற கவலையும் அரசுக்கு ஏற்பட்டது. இதற்கிடையே 1853 முதல் 1856 வரையில் நடந்த க்ரைமியா போரில் ஆட்டமன் பேரரசிடம் ரஷ்யா தோற்றது. அந்தப் போரில் ரஷ்யா 12,000 வீரர்களை இழந்தது. அரசு கஜானாவும் வற்றிவிட்டது. இந்த இழப்புகளைக் குறைக்க அலாஸ்காவை விற்றுவிடத் தீர்மானித்தது.

க்ரைமியா போர்

இப்போது மட்டுமல்ல க்ரைமியா போரின்போதும் பல்கேரியா, ருமேனியா, மால்டோவா, கிரைமியா ஆகிய நாடுகளைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டுவர ரஷ்யா முயற்சி செய்தது. ஆட்டமன் முஸ்லிம் பேரரசில் வாழ்ந்த கிறிஸ்தவர்களைக் காப்பாற்றிவிட வேண்டும் என்றுதான் ரஷ்யா போரில் இறங்கியது. 1853-ல் ருமேனியாவில் ரஷ்யா கால் வைத்ததுமே துருக்கி ரஷ்யாவுக்கு எதிராகப் போர்ப் பிரகடனம் வெளியிட்டது. துருக்கியை அப்போது பிரிட்டனும் பிரான்சும் ஆதரித்தன. கருங்கடலில் ரஷ்யாவின் கடலாதிக்கத்தைக் குறைக்க அவ்விரண்டும் தருணம் பார்த்துக்கொண்டிருந்தன. ஆஸ்திரியா கடுமையாக எதிர்த்துப் போரிட்டதால் யாருக்கும் வெற்றி தோல்வி இல்லாமல் நிலைமை இழுபறியானது. பிறகு பாரிஸ் நகரில் 1856-ல் கூடிய ஐரோப்பிய நாடுகள் ஒப்பந்தம் செய்துகொண்டு, க்ரைமியா போரை முடித்துக்கொண்டன.

கைமாறிய அலாஸ்கா

பிரிட்டிஷ் பேரரசு மீது கொண்ட வெறுப்பால், புதிய மக்கள் குடியரசு நாடான அமெரிக்காவிடம் அப்போது நட்பு பாராட்டியது ரஷ்யா. எனவேதான் அலாஸ்காவை வாங்கிக்கொள்ளுமாறு அமெரிக்காவைத் தொடர்ந்து வலியுறுத்தியது. அலாஸ்காவின் இயற்கை வளங்களை மதிப்பிட தன்னுடைய நாட்டு நிபுணர்களை அனுப்பியது ரஷ்யா. அவர்கள் மொத்தம் ஒரு கோடி டாலர்கள்தான் தேறும் என்று அறிக்கை அளித்தனர். அதே சமயம், எந்தக் காரணம் கொண்டும் அலாஸ்காவை விற்க வேண்டாம் என்றும் நிபுணர் குழவினர் வலியுறுத்தினர்.

நிபுணர் குழு அறிக்கை என்றாலே உதாசீனப்படுத்துவதுதான் அரசுகளின் வழக்கம். அந்த வகையில், அலாஸ்காவை விற்பதில் தீவிரம் காட்டியது ரஷ்யா. அமெரிக்காவோ. ஒரு கோடி டாலர் தர முடியாது வேண்டுமானால் 72 லட்சம் டாலருக்கு ஒப்பந்தம் செய்துகொள்வோம் என்றது. ரஷ்யா சம்மதித்தது. இப்படித்தான் அலாஸ்கா, அமெரிக்காவுக்குச் சென்றது!

1859-ல் அலாஸ்காவை விற்றுவிட ரஷ்யா விரும்பியது. ஆனால் அமெரிக்காவில் அப்போது உள்நாட்டுப் போர் நடந்தது. 1867-ல் அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் தெரிவிக்க, அதிபர் ஆண்ட்ரூ ஜான்சன் அதற்கான உடன்படிக்கையில் 1867 மே மாதம் கையெழுத்திட்டார். அக்டோபர் மாதம் முறைப்படி அமெரிக்காவிடம் ஒப்படைக்கப்பட்டது அலாஸ்கா. இதையடுத்து வட அமெரிக்கக் கண்டத்தில் ரஷ்யாவுக்கு நாடு எதுவுமில்லை என்றானது. அதே சமயம் பசிபிக் பிராந்தியத்தின் வட கடலோரப் பகுதியில் அமெரிக்காவின் ஆதிபத்தியம் பெரிதானது. அடுத்த முப்பதாண்டுகளுக்கு அமெரிக்காவும் அலாஸ்கா குறித்து அதிகம் அக்கறை காட்டவில்லை. அதன் கடற்படையும் ராணுவமும்தான் அதை நிர்வகித்தன. 1884-ல்தான் மக்களாட்சி ஏற்பட்டது. பிறகு சுரங்கச் சட்டங்கள் இயற்றப்பட்டன.

மெல்ல கிடைத்த முக்கியத்துவம்

அலாஸ்காவை அமெரிக்கா வாங்கியதை இழப்பு என்றே அந்நாட்டவர்கள் கருதினர். அதை முடித்துக் கொடுத்த சீவார்டின் முட்டாள்தனம் என்றே அதை அழைத்தனர். 1896-ல் அங்கே மிகப் பெரிய தங்கச்சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது. தங்கம் மட்டுமல்ல, வேறு கனிமங்களும் ஏராளமாக இருப்பது பிறகு தெரியவந்தது. இரண்டாவது உலகப் போரில் அலாஸ்கா முக்கியத்துவம் பெற்றது. 1959 ஜனவரி 3-ல் அதற்கு முழு மாநில அந்தஸ்து கிடைத்தது. 1968-ல் தான் அலாஸ்காவில் பெட்ரோலிய எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்பட்டது. அரசுக்கு அதிக வருமானம் கிடைப்பதால் அலாஸ்கா மாநிலத்தில் வருமான வரி அறவே ரத்து செய்யப்பட்டது.

அலாஸ்கா: சிறுகுறிப்பு

அலாஸ்கா என்பது ரஷ்ய வார்த்தை. அதன் பொருள் பெரு நிலப்பரப்பு. வடக்கு அமெரிக்காவில் வட மேற்குப்பகுதியில் இருக்கிறது. தலைநகரம் ஜூனு. மிகப் பெரிய நகரம் ஆங்கரேஜ். பரப்பளவு 6,63,268 சதுர மைல் (17,17,856 சதுர கிலோமீட்டர்), நீளம் 2,285 கிலோமீட்டர், அகலம் 3,639 கிலோமீட்டர். மக்கள்தொகை 7,36,081. குடும்பங்களின் சராசரி வருவாய் 77,800 டாலர்கள். அமெரிக்காவின் மூன்று பெரிய மாநிலங்களான டெக்சாஸ், கலிபோர்னியா, மொன்டானா ஆகியவற்றின் கூட்டுப் பரப்பளவையும்விட அலாஸ்கா பெரியது. மக்கள் தொகையும் அடர்த்தியும் மிக மிகக் குறைவான மாநிலமும் இதுவே.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in