கோத்தபய குடும்பத்தின் மீது மக்களுக்குக் கொதிப்பு ஏன்?

கோத்தபய குடும்பத்தின் மீது மக்களுக்குக் கொதிப்பு ஏன்?

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில் கடந்த சில நாட்களாக, ‘கோ கோ கோத்த’ என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆனது. இலங்கை மட்டுமின்றி புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும் இந்த ஹேஷ்டேக் பகிரப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது ‘கோ ஹோம் கோத்த’ என்ற ஹேஷ்டேக் பிரபலமாகியுள்ளது. இலங்கை மக்களிடையே ஏன் இந்த திடீர் மாற்றம்?

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படும் பொதுமக்கள் வீதிகளில் இறங்கியுள்ளனர். பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, தொடர் மின்வெட்டு காரணமாக தொழில்களை இழந்த தொழிலாளர்களும், வர்த்தகர்களும், மாணவர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

மக்களின் போராட்ட நெருக்கடி காரணமாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அமைச்சரவையில் இருந்த அனைத்து அமைச்சர்களும் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். இதன் பின் புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் அலி சப்ரியும் ஒரே நாளில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்த நிலையில், கோத்தபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கை வலுப்பெற்று போராட்டம் தீவிரமடைந்துள்ளது. எதிர்கட்சிகளோ, ஆதரவு கட்சியோ உதவிடாத சூழலில் நெருக்கடியில் தள்ளப்பட்டுள்ள கோத்தபய ராஜபக்ச தனது பதவியை ராஜினாமா செய்ய மறுத்து விட்டார்.

இந்த நிலையில், இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க குழு ஒன்றை கோத்தபய அமைத்துள்ளார். இந்தக் குழுவில் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் இந்திரஜித் குமாரசுவாமி, இலங்கை ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழக பேராசிரியரும், உலக வங்கி முன்னாள் தலைமை பொருளாதார நிபுணருமான சாந்தா தேவராஜன், சர்வதேச நிதியத்தின் திறன் மேம்பாட்டு நிறுவன முன்னாள் இயக்குனர் ஷர்மினி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த குழு, இலங்கைத் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிதியத்திடம் கடன் பெறுவது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும், நாட்டில் நிலையான நீடித்த வளர்ச்சிக்கு சரியான வழிகாட்டுதல்களை வழங்கும் என்று இலங்கை அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழர்களை தாஜா செய்வற்காக இந்த பொருளாதாரக்குழுவில் மூன்று தமிழர்களை கோத்தபய நியமித்துள்ளார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

ஆனாலும், மக்கள் போராட்டத்தை கைவிடுவதாக இல்லை. ஒவ்வொரு நாளும் இலங்கை அதிபர் ராஜபக்சவிற்கு எதிரான முழக்கங்களை அதிகப்படுத்தி வருகின்றனர். இதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.

இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட இன அழிப்புப் போரின் முகமாக கோத்தபய ராஜபக்ச தான் இருந்தார் என்ற கோபம் தமிழ் மக்களிடம் இன்னமும் நீருபூத்த நெருப்பாக உள்ளது. அத்துடன் நாட்டின் இவ்வளவு பெரிய பொருளாதார வீழ்ச்சிக்கும், நெருக்கடிக்கும் ராஜபக்ச குடும்பம் தான் காரணம் என்று அந்நாட்டின் அனைத்து பகுதி மக்களும் நம்புகின்றனர். ஏனெனில், ராஜபக்ச குடும்பத்தில் உள்ள அனைவரும் அதிகாரமிக்க ஆட்சிப் பொறுப்புகளில் இருந்தவர்கள்.

ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச, அதிபரான கோத்தபய ராஜபக்ச, நிதியமைச்சராக இருந்த சகோதரர் பசில் ரோஹன் ராஜபக்ச என்ற முக்கூட்டு தான் இலங்கை மக்களின் பொருளாதாரத்திற்கு வேட்டு வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இவர்களின் மூத்த சகோதர் சமல் ராஜபக்ச நீர்வளம் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தவர். சமலின் மகன் ஷாஷீன்ரா ராஜபக்சவும் அமைச்சராக இருந்துள்ளார். மஹிந்தாவின் மகன் நாமல் ராஜபக்ச இளைஞர்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சராக இருந்துள்ளார். இன்னொரு மகனான யோஷித, ராஜபக்ச பிரதமரின் அலுவலர்களின் முதல்வர். மஹிந்தாவின் சகோதரி காந்தினி ராஜபக்சவின் மகன் நிபுன ரணவக்க எம்.பி என ராஜபக்ச குடும்பத்து உறவுகளால் சூழப்பட்ட அதிகார மையமாக இலங்கை அரசு இருந்துள்ளது. இது மட்டுமின்றி மஹிந்தாவின் மனைவி ஷிரந்தியின் சகோதரர் நிஷாந்த விக்ரமசிங்ஹ, ஏற்கனவே ஸ்ரீலங்கன் விமான நிறுவன தலைவராக இருந்துள்ளார். இதன் இயக்குநர்களில் ஒருவராக இருந்தவர் மஹிந்தாவின் சகோதரர் சமலின் மகன் சமீந்திரராஜபக்‌ச.

எனவே, ராஜபக்ச குடும்பத்தினரால் தான் இலங்கை பொருளாதாரம் இந்த அளவிற்கு சீரழிந்துள்ளது என்று பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதன் காரணமாகவே, ‘கோ கோ கோத்த’ என்ற ஹேஷ்டேக்கை ‘கோ ஹோம் கோத்த’ என்று மாற்றியுள்ளனர். இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு ராஜபக்ச உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் தப்பி ஓடுவிடுவார்கள் என்ற அச்சம் காரணமாகவே இந்த ஹேஷ்டேக்கை மக்கள் முன்னெடுத்து பரப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் ராஜபக்ச குடும்பத்தினர் மீது மிகப்பெரிய பொருளாதாரக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டுள்ளது. "ராஜபக்சக்களின் ஆட்சியில்19.9 பில்லியன் டாலர் காணாமல் போய் உள்ளது. இலங்கையிலிருந்து கடத்தப்பட்ட இவ்வளவு பணத்தையும் ராஜபக்ச குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்கள் அமெரிக்காவில் வைத்துள்ளனர். இவற்றை விசாரணை நடத்தி இலங்கைக்கு திரும்பி வழங்க வேண்டும்" என்ற புகார் மனுவை அமெரிக்க தூதரகத்திடம் முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க வழங்கியுள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக இலங்கை அரசியலை ஆட்டிப்படைக்கும் ராஜபக்ச குடும்பத்தினருக்கு எதிரான போராட்ட அலை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இலங்கை அரசு என்ன செய்யப்போகிறது?

Related Stories

No stories found.